Published:Updated:

`அயர்லாந்திலிருந்து வந்த எள்ளுப்பேரன்... கொடைக்கானலில் களைகட்டிய லெவின்ஸின் 200-வது பிறந்தநாள் விழா!

200 ஆண்டுகள் கழித்து தற்போது கொடைக்கானல் மக்கள் அவரது பணியைப் பாராட்டும் விதமாகப் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள்.

கொடைக்கானல் ஏரி
கொடைக்கானல் ஏரி

கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய அப்போதைய மதுரை கலெக்டராக இருந்த சர் வீர் ஹென்றி லெவின்ஸ் 200-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

1864-ம் ஆண்டு மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தவர் சர் வீர் ஹென்றி லெவின்ஸ். வில்பட்டி கிராம மக்களின் மேய்ச்சல் நிலமாக இருந்த அசம் ஓடையை மறித்து நட்சத்திர ஏரியை உருவாக்கினார். இன்றைக்கு கொடைக்கானலின் முக்கிய இடமாக இருக்கிறது நட்சத்திர ஏரி. நட்சத்திர ஏரியை உருவாக்கிய லெவின்சின் 200-வது பிறந்த நாளான இன்று அதைக் கொடைக்கானல் மக்கள் விமரிசையாகக் கொண்டாடினார்கள்.

சர் வீர் ஹென்றி லெவின்ஸ்
சர் வீர் ஹென்றி லெவின்ஸ்

சுற்றுலா வளர்ச்சித் துறை, தன்னார்வலர்கள், பொதுமக்கள் எனக் கொடைக்கானல் மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இதற்காக லெவின்ஸ்சின் எள்ளுப்பேரன் அயர்லாந்திலிருந்து வந்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாகப் பள்ளி கல்லூரிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என நடத்தினார்கள். இன்றைக்கு அவரின் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். சர் வீர் ஹென்றி லெவின்ஸ் கொடைக்கானல் ஏரியை உருவாக்கி பிறகு கலெக்டர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார்.

நினைவிடம்
நினைவிடம்

அதன் பிறகு கொடைக்கானலில் வசித்து வந்தார். கடைசி காலத்தில் அயர்லாந்து சென்று அங்கே காலமானார். 200 ஆண்டுகள் கழித்து தற்போது கொடைக்கானல் மக்கள் அவரது பணியைப் பாராட்டும் விதமாகப் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள்