Published:Updated:

`வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தோம்!' - 100% தடுப்பூசி செலுத்தி சாதித்த கொடைக்கானல்

தடுப்பூசி செலுத்தும் மருத்துவப் பணியாளர்
தடுப்பூசி செலுத்தும் மருத்துவப் பணியாளர்

தமிழகத்தில் முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் நகராட்சியில் 100 சதவிகிதமும், பழனி நகராட்சியில் 99 சதவிகிதமும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தும் கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசிதான் ஒரே ஆயுதமாக உள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் பெரும் தயக்கம் காட்டினர். இதனால் அரசு சார்பில் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் நகராட்சியில் 100 சதவிகிதமும், பழனி நகராட்சியில் 99 சதவிகிதமும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் மருத்துவப் பணியாளர்
தடுப்பூசி செலுத்தும் மருத்துவப் பணியாளர்
நீலகிரி: பழங்குடிகளுக்கு 100% தடுப்பூசி; இலக்கை எட்டிய முதல் மாவட்டம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 38,850. இதில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மொத்தம் 29,532 பேர் உள்ளனர். பொதுசுகாதாரத்துறை வீடுதோறும் சென்று ஆய்வு செய்தபோது, 18 வயதுக்கு மேற்பட்ட வயதுள்ளவர்கள் 23,682 பேர் தான் கொடைக்கானல் நகராட்சியில் தற்போது உள்ளூரில் வசித்து வருகின்றனர் என்பது தெரியவந்தது.

கடந்த மார்ச் 2021 முதல் பொது சுகாதாரத்துறையால் கொடைக்கானல் நகராட்சியில் 46 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் மார்ச் 2021 முதல் கொடைக்கானல் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, கொடைக்கானல் நகராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட, உள்ளூரிலேயே வசிக்கும் 23,682 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

வாக்காளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 100 சதவிகிதம்

கொடைக்கானல் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் எம்.அரவிந்த்கிருஷ்ணன், ``கடந்த ஜூலை 31-ம் தேதி வரை கொடைக்கானல் நகராட்சியில் 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. அதன் பிறகும் ஒருவர் கூட விடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆகஸ்ட் 1 முதல் 6-ம் தேதி வரை முதலாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது. 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் கொடைக்கானல் நகராட்சியில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்டோரின் விவரங்களை வைத்துக்கொண்டு வீடுவிடாகச் சென்று சேகரித்தோம். அதில் 23,862 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. இதுமட்டுமல்லாது தற்காலிகமாக கொடைக்கானல் நகராட்சியில் வசிக்கும் 12,000 பேருக்குக் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொடைக்கானல் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் எம்.அரவிந்த்கிருஷ்ணன்
கொடைக்கானல் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் எம்.அரவிந்த்கிருஷ்ணன்

தினமும் கொடைக்கானல் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தவறிய பொதுமக்கள், முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு, அரசு விதிகளின்படி இரண்டாம் தவணைக்கான கால இடைவெளி பூர்த்தியானவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்தார்.

ஊரடங்கை மீறி கொடைக்கானல் மலையில்  ட்ரெக்கிங்! - சமூக வலைதள பதிவால் போலீஸில் சிக்கிய சம்பவம்

முக்கியமான சுற்றுலாதளம் என்பதால் கூடுதல் கவனம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ்.விசாகன், ``திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் நகராட்சி மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் 100 சதவிகித கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படவுள்ளது. கொடைக்கானல் வட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் 8 கிராமங்கள் வரை 100 சதவிகிம் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கிராமங்களிலும் விரைவில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்படும். இதேபோல திண்டுக்கல் மாவட்டம் பழனியிலும் 99 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த திண்டுக்கல் மாவட்டத்தில் ரெட், புளூ, கிரீன் என மூன்று வகையான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் கிரீன் பகுதிகள் கொரோனா இல்லாத பகுதிகளாகவும், புளூ பகுதிகள் ஒன்றிரண்டு பாதிப்புகள் கொண்டதாகவும், ரெட் பகுதிகள் அதிக பாதிப்புகள் கொண்டதாகவும் உள்ளன.

சுற்றுலா பயணிகள் அதிகம் வரக்கூடிய பகுதியாக இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். திண்டுக்கல்லில் முன்பு கீழப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், செட்டிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகள் ரெட் பகுதிகளாக இருந்தன. அந்தப் பகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். தற்போது திண்டுக்கல்லில் ரெட் பாதிப்பு பகுதிகள் எதுவும் இல்லை. விரைவில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ்.விசாகன்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ்.விசாகன்

கொடைக்கானல் நகராட்சியில் 95 சதவிகிதம் கோவிஷீல்ட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், தாய்மார்கள் மற்றும் குறிப்பிட்டு கேட்போர்க்கு மட்டுமே கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதேபோல இரண்டாம் தவணை தடுப்பூசியும் 30 சதவிகிதம் வரை போட்டு முடிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் நகராட்சி மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள மன்னவனூர், கூக்கல், பூண்டி, அடுக்கம், வில்பட்டி உள்ளிட்ட 15 மலை கிராமங்களில் 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக உழைத்த மருத்துவப் பணியாளர்களை மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு