Published:Updated:

`கொரோனா... புயல்... வரிசையா வந்த சோதனைகள்!’ - கலங்கும் கொடைக்கானல்வாசிகள்

கொடைக்கானல்
கொடைக்கானல்

கொரோனா ஊரடங்குக்குப் பின்னர் நிலைமை சரியாகிவிட்டது என நினைத்திருந்தபோது, அடுத்தடுத்து வந்த புயல்களால், சுற்றுலாவை நம்பியிருக்கும் கொடைக்கானல்வாசிகள் கவலையடைந்திருக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது கொடைக்கானல். குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை, கண்களைக் கவரும் மலைகள் என ரம்மியமான சூழல் நிலவுவதால், கொடைக்கானலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த எட்டு மாதங்களாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் வருகை பெருமளவு குறைந்துவிட்டது. இ-பாஸ் பெற்றுக்கொண்டு கொடைக்கானலுக்கு வருகை தரலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்த பின்னரும், சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது.

அப்பாஸ்
அப்பாஸ்

தொடர்ந்து, கொடைக்கானலிலுள்ள மூடப்பட்ட சுற்றுலாப்பகுதிகளைப் படிப்படியாகத் திறந்தது மாவட்ட நிர்வாகம். இருந்தபோதும், கொடைக்கானலுக்கு வர சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்காட்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனால், சுற்றுலாவையே நம்பி வாழும் கொடைக்கானல்வாசிகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருக்கிறார்கள். அவர்களிடம் நாம் பேசினோம்.

``என்னுடைய பெயர் அப்பாஸ். கடந்த 23 வருடங்களாக கொடைக்கானலில் கடை வைத்திருக்கிறேன். கொரோனா ஊரடங்கை அரசு அறிவிக்கும் முன்னர், பிப்ரவரி மாதமே 15 நாள்கள் உள்ளூர் ஊரடங்கைக் கடைப்பிடித்தோம். இரண்டு, மூன்று மாதத்தில் அனைத்தும் சரியாகிவிடும் என நினைத்திருந்தோம். ஆனால், மாதக்கணக்கில் பிரச்னை சென்றது. கொடைக்கானலில் சுற்றுலாவைத் தவிர வேறு எந்தத் தொழிலும் இல்லை. அதனால், மக்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டனர்.

பாஸ்கர்
பாஸ்கர்

நிவாரண உதவிகளைவைத்துதான் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். இ-பாஸ் மூலம் இப்போது மக்கள் வருகிறார்கள். பொதுவாக, கொடைக்கானலுக்கு அண்டை மாநில, வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். அது இல்லாததால் வியாபாரம் கொஞ்சம் டல்தான். சீக்கிரம் நிலைமை சரியாகும்னு நம்பிக்கை இருக்கு.” என்றார்.

குதிரை வைத்திருக்கும் பாஸ்கரிடம் பேசினோம். ``35 வருடங்களாக கொடைக்கானலில் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். ஆனால், கடந்த ஏழு மாதங்களாக நாங்கள் பட்ட கஷ்டம் அதிகம். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்தோம். குதிரைக்கு ஒரு நாளைக்கு ரூ.500 செலவு செய்ய வேண்டும். நாங்கள் சாப்பிடாமல் குதிரைக்குத் தவிடு வாங்கிக் கொடுத்தோம். சுற்றுலா இல்லாததால் கூலி வேலைக்குத்தான் போனோம். பெரும்பாலான நாள்களில், நாங்களும் குதிரையும் அரை வயிறுச் சாப்பாடுதான் சாப்பிடுவோம்.

துர்கா தேவி
துர்கா தேவி

இப்போ கொஞ்சம் பரவாயில்லை. இ-பாஸ் மூலம் சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் வர்றாங்க. ஆனால், நிவர், புரெவி புயல் காரணமா கடந்த 20 நாள்களா சுற்றுலாப்பயணிகள் வருகை சுத்தமா இல்லை. எப்பதான் நிலைமை சரியாகும்’னு தெரியலை” என்றார் வருத்தத்தோடு.

மக்காச்சோளம், பயறு விற்பனை செய்யும் துர்கா தேவியிடம் பேசினோம். ``கொரோனா ஊரடங்கு நேரத்தில் நிவாரண உதவிகளைவைத்துத்தான் சாப்பிட்டோம். இப்போ சுற்றுலாப்பயணிகள் வர்றாங்க. ஆனால், வியாபாரம்தான் சரியா போகலை. ஆயிரம் ரூபாய்க்கு பொருள் வாங்கி காலையில 8 மணிக்கு வியாபாரத்துக்கு வந்தால், ராத்திரி 8 மணி வரை வெறும் 300 ரூபாய்க்குத்தான் வியாபாரம் ஆகுது. மக்களும், காசு செலவு பண்ணி வாங்கிச் சாப்பிட யோசிக்கிறாங்க. இப்போ புயல், மழை காரணமா மக்களும் கொடைக்கானலுக்கு வரமாட்றாங்க. பழையபடி வியாபாரம் நல்லா நடக்கணும்னா இ-பாஸ் முறையை ரத்து செய்யணும். அப்பதான் மக்கள் கொடைக்கானலுக்கு வருவாங்க. எங்க பிழைப்பும் நல்லபடியா ஓடும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு