Published:Updated:

கொடநாடு வழக்கு: ``மீண்டும் என் உயிருக்கு அச்சுறுத்தல்!'' - பாதுகாப்பு கேட்கும் சயான்!

சயான்
சயான்

கொடநாடு வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சயான் அளித்துள்ள மூன்று மணி நேர ரகசிய வாக்குமூலம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சயானின் மூன்று மணி நேர ரகசிய வாக்குமூலம், வருகின்ற 27-ம் தேதி நீதின்றத்தில் சமர்பிக்கப்படவிருக்கும் நிலையில், தற்போதே இந்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருவதோடு அதிமுக-வின் சில நிர்வாகிகளைக் கலக்கமடையச் செய்திருக்கிறது. தான் அளித்திருக்கும் இந்த ரகசிய வாக்குமூலத்தால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை அதிகாரிகளிடம் சயான் கூறியிருக்கிறார்.

கொடநாடு க்ளைமாக்ஸ் - மர்ம சான்ட்ரோ... துபாய் போன் கால்... சேலத்து சந்திப்பு
சயான்
சயான்

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் பகிர்கையில், ``கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளையைக் கூட்டாளிகளோடு நிகழ்த்திவிட்டு தப்பிய சயான், தனது கூட்டாளிகளில் ஒருவரான கனகராஜ் வாகன விபத்தில் கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டு, தனக்கும் தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்பதை கணித்திருக்கிறார். அந்தச் சமயத்தில் கோவையிலிருந்த தன் மனைவி வினுப்பிரியாவையும், 5 வயது மகள் நீத்துவையும் காப்பாற்றி பாத்திரமாக கேரளாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டு கோவையிலிருந்து காரில் செல்லும்போது பாலக்காடு அருகில் ஏற்பட்ட வாகன விபத்தில் சயானின் மனைவியும் மகலும் உயிரிழந்தனர். படுகாயத்துடன் சயான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது நிபந்தனை ஜாமீனில் இருக்கும் சயான் அளித்துள்ள ரகசிய வாக்குமூலம் 27-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முக்கியப் பிரமுகர்கள் சிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அந்த நபர்களால் தனது உயிருக்கு மீண்டும் அச்சுறுத்தல் உள்ளது என விசாரணையின்போதே தெரிவித்தார். அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு