Published:Updated:

``மரத்தை உடைத்தது நான்தான், ஆனால்..!" - வைரல் வீடியோ குறித்து கோவை திமுக கவுன்சிலர் விளக்கம்

வைரல் வீடியோ குறித்து திமுக கவுன்சிலர் விளக்கம

மாலதி தன் வீட்டு அருகில் ஒருவர் நட்ட மரத்தை உடைத்து வீசும் வீடியோ வெளியாகி, சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

``மரத்தை உடைத்தது நான்தான், ஆனால்..!" - வைரல் வீடியோ குறித்து கோவை திமுக கவுன்சிலர் விளக்கம்

மாலதி தன் வீட்டு அருகில் ஒருவர் நட்ட மரத்தை உடைத்து வீசும் வீடியோ வெளியாகி, சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

Published:Updated:
வைரல் வீடியோ குறித்து திமுக கவுன்சிலர் விளக்கம

கோவை மாநகராட்சி 34-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் மாலதி. தி.மு.க மாநகர் மாவட்ட மகளிரணி அமைப்பாளரான இவர், மாநகராட்சி கல்விக் குழு தலைவராகவும் உள்ளார். மாலதியின் வீடு கவுண்டம்பாளையம் ராஜன் நகர் பகுதியில் உள்ளது. இந்நிலையில், மாலதி தன் வீட்டு அருகில் ஒருவர் நட்ட மரத்தை உடைத்து வீசும் வீடியோ வெளியாகி, சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

திமுக கவுன்சிலர் மாலதி
திமுக கவுன்சிலர் மாலதி

அவர் கார் நிறுத்தும் இடத்தில் மரம் நட்டதால், அதை பிடுங்கி எறிந்து, “யார்க்கிட்ட வேணாலும் புகார் கொடுத்துக்கோ” என்று மாலதி அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

மாலதியின் வீட்டிலிருந்து சுமார் 10 வீடுகள் தள்ளி வசித்து வருபவர் சுபாஷ். அவர்தான் தன் வீட்டு முன்பு நான்கு வேப்பமரக்கன்றுகளை வைத்திருந்தார். மாலதியின் இந்த செயலால் அதிருப்தியடைந்த சுபாஷ், துடியலூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். “அவர் கார் நிறுத்துவது இடைஞ்சல் இல்லையாம்.

திமுக கவுன்சிலர் மாலதி
திமுக கவுன்சிலர் மாலதி

நாங்கள் செடி வைத்தது மட்டும் இடைஞ்சலா. கேட்டால் அப்படித்தான் செய்வோம் என்கிறார். பொறுப்புள்ள கவுன்சிலர் இப்படி செய்யலாமா. ஆளுங்கட்சி என்பதால் அராஜகம் செய்கின்றனர்” என சுபாஷ் தன் புகாரில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து மாலதியிடம் விளக்கம் கேட்டபோது, “நான் கடந்த 30 ஆண்டுகளாக அங்குதான் குடியிருந்து வருகிறேன். எங்கள் சாலை 13 அடிதான். இப்போது 80 வீடுகள் உள்ளன. நாளடைவில் ஆக்கிரமிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. சுபாஷ் குடும்பம்தான், அந்தப் பகுதியில் முதல் வீட்டில் வசித்து வருகின்றனர். அவரின் வீட்டைக் கடந்துதான் எல்லோரும் உள்ளே செல்ல வேண்டும்.

ஆக்கிரமிப்பை அகற்றும் மாநகராட்சி
ஆக்கிரமிப்பை அகற்றும் மாநகராட்சி

அவர் குடும்பம் சாலையிலேயே துவைக்கும் கல், அம்மி கல், தண்ணீர் காய வைப்பது, மரம் வைப்பது என ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் மீது ராஜன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தரப்பிலேயே புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சுபாஷ் பாஜக-வைச் சேர்ந்தவர். சமீபத்தில் அங்கு பாஜக-வைச் சேர்ந்தவர்கள் மரம் வைத்தனர். அது குறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகாரளிக்கப்பட்டது. உடனடியாக அங்கு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் ஆக்கிரமிப்புகளை அகற்ற சொல்லி உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டனர்.

சேதமடைந்த கார்
சேதமடைந்த கார்

அதிகாரிகள் அகற்றிய சில மணி நேரத்தில், பாஜக-வினர் அங்கு 4 மரங்களை வைக்கின்றனர். மேலும், தண்ணீர் காய வைக்க செங்கல், சிமென்ட் மூலம் அடுப்பு கட்டினர். மீண்டும் அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். காவல்துறை முன்னிலையில் அந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன.

இதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக-வினர் அதே இடத்தில் மீண்டும் மரம் நட்டனர். முக்கியமாக என் காரை கத்தியால் கிழித்து கோடு போட்டனர். கேட்டதற்கு ‘அப்படித்தான் செய்வோம். உங்கள் காரை எல்லாம் அனுமதிக்க முடியாது. இது மரம் நடுவதற்கான இடம். இங்கு இனி யாருடைய காரை நிறுத்தினாலும் பெட்ரோல் ஊற்றி கொளுத்துவோம்’ என வெளிப்படையாக மிரட்டுகின்றனர்.

ஆக்கிரமிப்பை அகற்றும் மாநகராட்சி
ஆக்கிரமிப்பை அகற்றும் மாநகராட்சி

சொல்லவே முடியாத அளவுக்கு தகாத வார்த்தைகளை பயன்படுத்தினர். அவர்கள் மீது நானும், குடியிருப்போர் நலச்சங்கத்தினரும் புகார் அளித்தோம். அந்தச் செடியை உடைத்தது உண்மைதான். அதற்கு முன்பு முறைப்படிதான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மீண்டும் மீண்டும் தகாத வார்த்தைகளில் பேசியது என்னால் தாங்க முடியவில்லை.

அரசியல் செய்வதற்கு வேறு வழி தெரியாமல், ஒரு வீடியோவை மட்டும் வைத்துக் கொண்டு தவறான தகவலை பரப்புகின்றனர். அதற்கு முன்பு நடந்த சம்பவங்களுக்கு அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அங்கு வந்து பிரச்னை செய்ததில், 99 சதவிகிதம் பேர் எங்கள் வார்டைச் சேர்ந்தவர்களே இல்லை.

கோவை
கோவை

பல்வேறு இடங்களில் உள்ள பாஜக-வினரை அழைத்து வந்து ரகளை செய்கின்றனர்” என்றார்.

இது குறித்து காவல்துறையிடம் விசாரித்தபோது, “இரண்டு தரப்பிலும் புகார் அளித்துள்ளனர். விசாரித்துவிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.