கோவை, அன்னூர் வேப்பம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (22). இவர் பெற்றோர் கட்டட வேலை செய்துவருகின்றனர். இவர் சென்டரிங் வேலை செய்துவந்தார். இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட மின் விபத்து ஒன்றில் சுபாஷ் தன் இரண்டு கால்கள் (முழங்காலுக்குக் கீழ்), இரண்டு கைகளை (முழங்கைக்குக் கீழ்) இழந்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பொருளாதாரரீதியான நெருக்கடி ஒருபக்கம் என்றால், அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட மற்றவர்களை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில், சுபாஷ் தனக்கு உதவி செய்யுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனைச் சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதையடுத்து சுபாஷுக்கு செயற்கை கால், கைகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு சமீரன், கோவை அரசு மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலாவுக்கு உத்தரவிட்டார்.

முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சைத்துறைத் தலைவர் மருத்துவர் வெற்றிவேல் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுபாஷுக்கு எடை குறைந்த செயற்கை கால்கள், கைகள் இலவசமாகப் பொருத்தப்பட்டன.
தொடர்ந்து அவருக்கு உடல், மனநலப் பயிற்சி வழங்கப்பட்டது. தற்போது சுபாஷ் தானாகவே தன் வேலைகளைச் செய்யும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார். தமிழ்நாடு அரசின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கை, கால்களை இழந்த ஒருவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

இதே சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் குறைந்தபட்சம் ரூ.2,50,000 ஆகியிருக்கும். அரசின் மருத்துவச் சிகிச்சைக்கு இளைஞர் சுபாஷ் நன்றி தெரிவித்தார்.