Published:Updated:

`தினசரி தைக்கப்படும் மாஸ்க்குகள்; மூலிகை சானிடைஸர்!' -சேமிப்புப் பணத்தில் அசத்தும் மாணவிகள்

முகக்கவசம் வழங்கும் மாணவி
முகக்கவசம் வழங்கும் மாணவி

தூத்துக்குடியில் தங்களது சேமிப்பு பணத்திலிருந்து முகக்கவசம் தைத்து சாலைகளில் முகக்கவசம் அணியாமல் செல்லும் மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகின்றனர் கல்லூரி மாணவிகள்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கெனவே கடந்த 14-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த தேசிய ஊரடங்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், வரும் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முககவசம் தைக்கும் பணி
முககவசம் தைக்கும் பணி

அரிசி, காய்கறி, மளிகை, பால், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் தேவைக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியேறினாலோ, சாலைகளில் சென்றாலோ அபராதம் விதிக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளார்.

இதேபோல பல மாவட்டங்களிலும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், முகக்கவச தட்டுப்பாடும் அதிகரித்துள்ளதால், துணிகளில் மாஸ்க் தைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரியில் பயிலும் மாணவிகள் தற்போதைய ஊரடங்கு நாள்களைப் பயனுள்ளதாக கழிக்கும் வகையிலும் பிறருக்கு உதவும் வகையிலும் தங்களது சேமிப்புப் பணத்தில் துணிகளை வாங்கி, முகக்கவசம் தைத்து கோவில்பட்டியில் சாலைகளில் செல்பவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள்.

முககவசம் வழங்கும் மாணவி
முககவசம் வழங்கும் மாணவி

இதுகுறித்து மாணவிகளிடம் பேசினோம், ``கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்வதைப் பார்க்கும் போது, அதன் தீவிரத்தையும் உணர்கிறோம். வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் விளக்கியதுடன், வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினோம்.

அரிசி, காய்கறி, மளிகை போன்றவற்றின் வரிசையில் தற்போதைய நிலையில், முகக்கவசமும் சானிடைஸரும் இடம் பெற்றுள்ளதால் முகக்கவசத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி முகக்கவசங்களை கூடுதல் விலைக்கு விற்பதையும் அதிகாரிகள் எச்சரிப்பதையும் செய்திகளில் பார்த்தோம். அதனால் துணிகளை வாங்கி அவற்றில் முகக்கவசங்களை தைத்து இலவசமாக கொடுக்கலாம்னு முடிவு செஞ்சோம். கையில் சேமித்து வைத்திருந்த பணத்திலிருந்து துணி, நூல், நாடா உள்ளிட்ட தேவையான பொருள்களை வாங்கினோம்.

கிராமத்தில் வழங்கப்பட்ட முகக்கவசம்
கிராமத்தில் வழங்கப்பட்ட முகக்கவசம்

வீடுகளில் உள்ள தையல் மிஷின்களில் மாஸ்க் தைக்கிறோம். தையலுக்காக கைவசம் இருந்த பனியன் துணிகளில் மாஸ்க் தைத்தோம். லாக்டெளனில் துணிக்கடைகளும் அடைக்கப்பட்டதால், பிற வகைத் துணிகளிலும் தைக்க ஆரம்பிச்சோம். தினமும் 50 முதல் 70 மாஸ்க்குகளை தயார் செய்துவிடுவோம். ஒவ்வொரு நாளும் மாலையில் துணிகளை வெட்டி வைத்து, இரவுக்குள் தைப்போம்.

மறுநாள் காலை 8 மணி முதல் 10 வரை, அதாவது அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக சாலைகளில் நடமாடும் மக்களில் மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறோம். மாலையில் வழக்கம்போல மாஸ்க் தைக்கும் பணியில் ஈடுபடுவோம். காய்கறிச் சந்தை, மளிகைக் கடைப்பகுதி, நகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, அம்மா உணவகம் உள்ளிட்ட பகுதிகளில் மாஸ்க்குகளை இலவசமாக வழங்கி வருகிறோம்.

முகக்கவசம் வழங்கும் மாணவி
முகக்கவசம் வழங்கும் மாணவி

கிராமப்புறங்களில் உள்ள மாணவிகள் மாஸ்க்குகளை அவரவர் பகுதிகளில் உள்ள 100 நாள் வேலைக்குச் செல்லும் பெண்கள், முதியவர்களுக்கு வழங்கி வருகிறார்கள். இந்த மாஸ்க்குகளை துவைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தக் கொரோனா பேரிடர் நேரத்துல மாணவிகளாகிய எங்களால் முடிந்த ஒரு சேவை இது” என்றனர்.

இதுகுறித்து பேசிய அக்கல்லூரியின் பேராசிரியர்கள், ``எங்க கல்லூரியில் இளங்கலை ஆயத்த ஆடை மற்றும் வடிவமைப்புத்துறை மாணவிகள் அவர்களாகவே வாட்ஸ்அப் குரூப் மூலம் இணைந்து கொரோனா பேரிடர் காலத்துல மாஸ்க் தயாரிச்சு மக்களுக்கு இலவசமா கொடுக்கலாம்னு திட்டமிட்டிருக்கோம்னு சொன்னார்கள். அவர்களின் சேவை எண்ணத்தை வரவேற்று வீடுகளில் தையல் மிஷின் வைத்திருக்கும் மாணவிகளை இதுபோன்ற மாஸ்க்குகளை தைத்து வழங்கிடுமாறு சொன்னோம்.

முகக்கவசம் வழங்கும் மாணவிகள்
முகக்கவசம் வழங்கும் மாணவிகள்

அதேபோல 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் அவரவர் வீடுகளில் இருந்தவாறே மாஸ்க்குகள் தயார் செய்து இலவசமாக வழங்கி வருகிறார்கள். அவர்களைப் பார்த்து பிற துறை மாணவிகளும் இச்சேவையில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதுவரை 560 மாஸ்க்குகளை மாணவிகள் வழங்கியிருக்கிறார்கள்.

அன்றன்று மாஸ்க் வழங்கிய நிகழ்வுகளை இதற்கென உருவாக்கிய வாட்ஸ்அப் குழுக்களில் ஒவ்வொரு மாணவியும் பகிர்வார்கள். இதுதவிர கழுகுமலை அருகிலுள்ள காலாங்கரைப்பட்டி கிராமத்தில் சோற்றுக் கற்றாழை, கிராம்பு ஆயில், எலுமிச்சைப்புல் ஆயில், எத்தனால் ஆகியவை கலந்த மூலிகை சானிடைஸர் தயாரித்து அப்பகுதியிலுள்ள 50 தூய்மைப் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கியிருக்கிறோம். தொடர்ந்து பிற பகுதிகளிலுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கிட திட்டமிட்டுள்ளோம்.

முககவசம் தைக்கும் பணி
முககவசம் தைக்கும் பணி

கல்லூரி நிர்வாகத்தின் ஒத்துழைப்பும், பேராசிரியர்களின் அறிவுரையும், மாணவிகளின் அர்ப்பணிப்புமே இதுபோன்ற நற்செயல்கள் சிறப்பாக அமைந்திட வழி வகுக்கிறது” என்றனர்.

விடுமுறை காலத்தில் டி.வி., செல்போன், அரட்டை, விளையாட்டு என பொழுதைப் போக்கிடாமல் இதுபோன்ற சேவை உள்ளத்தோடு செயல்படும் மாணவிகளை வாழ்த்துவோம்.

அடுத்த கட்டுரைக்கு