Published:Updated:

5 ஆண்டுகால முயற்சி; 6000 தொழிலாளர்களின் உழைப்பு! - புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய்

கடலை மிட்டாய்
கடலை மிட்டாய்

உலகப்புகழ்பெற்ற `கோவில்பட்டி கடலைமிட்டாய்'க்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளதால் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் எனப் பல தரப்பிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

`திருநெல்வேலி அல்வா’, `பழனி பஞ்சாமிர்தம்’, `மதுரை மல்லி’, `திண்டுக்கல் பூட்டு’, `கொடைக்கானல் பூண்டு' என ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கடலைமிட்டாய்க்கு சிறப்பு பெற்றது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் மானவாரி கரிசல் பூமியில் விளையும் நிலக்கடலைக்கு தனிச்சுவை உண்டு. இயற்கையிலேயே அதிக இனிப்புச்சுவை உடைய நிலக்கடலையைக் கொண்டு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய்கள், அதன் சுவையால் உலகப் பிரசித்தி பெற்றவை.

நிலக்கடலைகளை ஆற்றுமணலுடன் சேர்த்து வறுத்து, அதன் தோலை நீக்கிய பின்னர், கம்பிப் பதத்திலான வெல்லப்பாகுடன் கலந்து, தட்டையாக்கி சதுரம், அரைச் சதுர வடிவில் வெட்டி எடுக்கின்றனர்.

கடலைமிட்டாய் தயாரிப்பு
கடலைமிட்டாய் தயாரிப்பு

இதே பதத்தில், உருண்டை பிடித்து கடலை உருண்டையும் செய்வார்கள். ஆனால், கடலைமிட்டாய்தான் இங்கு பிரசித்தி பெற்றது. இந்தக் கடலை மிட்டாய்கள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, பண்டல்களாக அடுக்கி வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தற்போது கடலைமிட்டாய் ஆன்லைன் விற்பனை வரை சென்றதற்கும் இதன் சுவையும் தரமுமே காரணம் என்கிறார்கள். தமிழகத்தின் பிற பகுதிகளில் கடலை மிட்டாய் தயாரிப்பவர்களில் சிலர், தரமற்ற வகையில் கடலைமிட்டாய் தயாரித்து, `கோவில்பட்டி கடலைமிட்டாய்’ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார்கள். இது குறித்து, கோவில்பட்டியைச் சேர்ந்த கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் அரசிடம் முறையிட்டு வந்தனர்.

கடலை மிட்டாய்
கடலை மிட்டாய்

இந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு தற்போதைய திருப்பூர் மாவட்ட ஆட்சியரும், அப்போதைய கோவில்பட்டி சப்கலெக்டருமான டாக்டர். விஜய கார்த்திகேயன் மூலம் கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கிடக்கோரி விண்ணப்பிக்கப்பட்டது. பின்னர், 2017-ல் மீண்டும் ஒருமுறை விண்ணப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது புவிசார் குறியீடு அளித்துள்ளது மத்திய அரசு. இதனால், கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கோவில்பட்டி வட்டார கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத் தலைவர் கார்த்தீஸ்வரனிடம் பேசினோம், ``கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தி பரவலாக நடைபெற்று வந்தாலும், கோவில்பட்டி என்றதும் சட்டென நினைவுக்கு வருவது கடலைமிட்டாய்தான். கரிசக்காட்டு கடலையும், கரும்பு வெல்லமும்தான் கடலைமிட்டாய் சுவைக்கு முக்கியக் காரணம். கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் கடலைமிட்டாய் உற்பத்தி செய்து வருகிறார்கள். இதில் 6,000-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலை மிட்டாய் தயரிப்பு
கடலை மிட்டாய் தயரிப்பு

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில்பட்டி நகருக்குள் எந்தத் தெருவுக்குள் சென்றாலும் நிலக்கடலை வறுக்கும் மணத்தையும் கடலையுடன் வெல்லப்பாகு கலக்கும் மணத்தையும் நுகராமல் வெளியே வரமுடியாது. கோவில்பட்டி பகுதியில் திருமணத் தாம்பூல பைகளில் கடலைமிட்டாய்தான் போட்டுக் கொடுப்பார்கள். இப்பகுதியில் திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும் மணமகளுக்கு, புதுப் பானையில் சீனி, பூந்தி, லட்டு போன்ற இனிப்பு பண்டங்களுக்குப் பதிலாக கடலைமிட்டாயைத்தான் போட்டு அனுப்பி வைப்பார்கள்.

முதலில் எனது பெயரிலேயே புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்தேன். பின்னர் `கோவில்பட்டி வட்டார கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம்' என்ற புதிய சங்கத்தை ஏற்படுத்தி, 2017-ல் மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டது.
டாக்டர். விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

இத்தகைய சிறப்புபெற்ற கடலை மிட்டாயிலும் தரமற்ற கடலை, கழிவுப்பாகு கலந்து கலப்படம் செய்து கோவில்பட்டி கடலைமிட்டாய் என்ற பெயரில் பலரும் விற்பனை செய்து வந்ததால் உண்மையான உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால்தான் கடந்த 2014-ம் ஆண்டு விண்ணப்பித்தோம். 5 ஆண்டுக்கால கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் விஜய கார்த்திகேயனிடம் பேசினோம், ``கடந்த 2014-ம் ஆண்டு நான் கோவில்பட்டி சப்கலெக்டராகப் பணிபுரிந்தபோது கடலைமிட்டாய் வியாபாரிகள், புவிசார் குறியீட்டுக்காக என்னிடம் கோரிக்கை வைத்தனர்.

கலெக்டர் விஜய கார்த்திகேயன்
கலெக்டர் விஜய கார்த்திகேயன்

எனது பெயரிலேயே புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்தேன். பின்னர், சங்கத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தப்பட்டதால், கோவில்பட்டியில் உள்ள கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளை ஒருங்கிணைத்து, `கோவில்பட்டி வட்டார கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம்' என்ற புதிய சங்கத்தை ஏற்படுத்தி, பின்னர் 2017-ல் மீண்டும் சங்கம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. தற்போது கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அளித்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது” என்றார் உற்சாகத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு