Published:Updated:

கோவில்பட்டி: `கொஞ்சநாள்ல பிக்அப் ஆயிடுச்சு!’ - சுக்குக்காபி விற்கும் ஸ்கேட்டிங் மாஸ்டர்

கொரோனா ஊரடங்கால் கோவில்பட்டியில் யோகா மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சியாளராக இருந்த ஒருவர், சுக்குக்காபி விற்பனையாளராக மாறியுள்ளார்.

கொரோனா வைரஸின் பிடியில் உலகமே சிக்கித் தவிக்கிறது. இதன் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கும், சில தளர்வுகளுடன் தற்போது வரை நீடித்துக்கொண்டே செல்கிறது. தமிழத்தின் பல மாவட்டங்களிலும் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கானோர் தங்களது வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பல தொழில் நிறுவனங்களும் நினைத்துப் பார்த்திட முடியாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஸ்கேட்டிங் பயிற்சியில் சிவசக்தி வேல்முருகன்
ஸ்கேட்டிங் பயிற்சியில் சிவசக்தி வேல்முருகன்

இந்நிலையில், வாழ்வாதாரத்துக்காகப் பலரும் மாற்றுத் தொழிலில் இறங்கியுள்ளனர். அதிலும், சிலர் முன்பின் அனுபவமில்லாத தொழில்களில் ஈடுபட்டும், வருவாய் ஈட்டி குடும்பத்தைக் காப்பாற்றி வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சிவசக்திவேல் முருகன், தனியார் பள்ளிகளில் யோகா மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார். தற்போது பள்ளிகள் மூடப்பட்டதால் குடும்பத்தை நடத்த சாலையோரம் சுக்குக்காபி கடை வைத்து நடத்தி வருகிறார்.

இதுகுறித்து சிவசக்தி வேல்முருகனிடம் பேசினோம். ``தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா, ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக இருந்து வந்தேன். எனக்கு இதன் மூலம் மாதம் ரூ.20,000 வரை வருவாய் கிடைத்து வந்தது. கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் உலகமே ஆடிப்போயுள்ளது. கடந்த மார்ச் முதல் தமிழகத்தில் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதாலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சிவசக்தி வேல்முருகன்
சிவசக்தி வேல்முருகன்

விடுமுறையில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்குக்கூட தற்போது யோகா, ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்க முடியாத நிலை உள்ளது. பள்ளிகள் திறப்பு எப்போது என்பதைப்பற்றி அரசு தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்தப் பயிற்சியைத் தவிர எனக்கு வேறெந்த தொழிலும் தெரியாது. வேறெந்த வருமானமும் கிடையாது. ஆனாலும், குடும்பத்தை நடத்தியாக வேண்டும். மாஸ்க் விற்பனை, காய்கறி, தேங்காய் விற்பனை என குடும்பத்தில் ஆளுக்கு ஒரு யோசனையச் சொன்னார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை’ என கிராமப் பகுதிகளில் சொல்வார்கள். அதனால், கொரோனா எதிர்ப்பு மருந்தாக சுக்குக்காபியை விற்பனை செய்யலாம் என முடிவெடுத்தேன். தட்சிணாமூர்த்தி தெருவில் உள்ள எனது வீட்டின் அருகில் முக்கிய சந்திப்பு பகுதியில் சுக்குக்காபி விற்பனையை துவக்கினேன். தினமும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை விற்பனை செய்யுறேன். முதல் 5 நாள்கள் வியாபாரம் சுமாராகத்தான் இருந்தது.

சிவசக்தி வேல்முருகன்
சிவசக்தி வேல்முருகன்

அடுத்தடுத்த நாள்களில் வியாபாரம் பிக்அப் ஆயிடுச்சு. `வெறும் சுக்குக்காபி மட்டும்தானா, சுண்டல் இல்லையா?’ என வாடிக்கையாளார்கள் கேட்க ஆரம்பிச்சதும், பாசிப்பயிறு, கறுப்பு மற்றும் வெள்ளைச் சுண்டல் (கொண்டக்கடலை), அரிசிமாவில் இனிப்பு மற்றும் உப்புக் கொழுக்கட்டை ஆகியவற்றையும் சேர்த்து விற்பனை செய்யுறேன். கொரோனாவும், ஊரடங்கும் எனக்கு அனுபவமில்லாத இந்தத் தொழிலில் ஈடுபடுத்தி வருமானம் கிடைக்க வழி வகுத்துள்ளது” என்றார் நெகிழ்ச்சியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு