Election bannerElection banner
Published:Updated:

`மக்கள் வெள்ளத்தில் கோயம்பேடு!’ - சென்னை டு திருச்சி வரை மாநகரப் பேருந்துகள் இயக்கம்

கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம் ( தே.அசோக்குமார் )

தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதால், சொந்த ஊர் செல்ல மக்கள் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் குவிந்தனர்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 75 மாவட்டங்களில் லாக் டவுன் உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசு பரிந்துரைத்தது. தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருந்தன.

கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம்

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். மார்ச் 24-ம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி நள்ளிரவு வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

நாடு முழுவதும் ரயில் சேவைகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டிருக்கும் சூழலில், தமிழக அரசின் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல மக்கள் பேருந்து நிலையங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மக்கள் கூட்ட நெரிசலால் கோயம்பேடு, பெருங்களத்தூர் பேருந்து நிலையங்கள் திணறின. அரசு சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் போதிய அளவில் இல்லாததால், மக்கள் ஒவ்வொரு பேருந்திலும் முண்டியடித்துக் கொண்டு ஏறினர்.

கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம்

பெருங்களத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் மக்கள் வெள்ளத்தில் நிறைந்தன. மேலும், சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வதையும் பார்க்க முடிந்தது. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கும்பகோணம், திருநெல்வேலி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டதால் ஒவ்வொரு பேருந்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

`144 தடை உத்தரவு; மார்ச் 31 வரை மாவட்ட எல்லைகளுக்கு சீல்!’- முதல்வர் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்துநிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், சென்னை மாநகரப் பேருந்துகள் வெளியூர்களுக்குத் திருப்பி விடப்பட்டன.

இந்த நிலையில், பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்தார். இதனால், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூட்டமாகப் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

அதேபோல், ஆம்னி பேருந்துகளும் நாளை மாலை வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், மக்களின் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளை இயக்குபவர்கள் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி இருப்பதாக பயணிகள் புகார் கூறுகிறார்கள். அதேபோல், சென்னை மாநகரப் பேருந்துகள் திருச்சி வரை இயக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்திருக்கிறார். இதனால், பொதுமக்கள் பதற்றம் கொள்ளாமல் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு