Published:Updated:

புத்தகம் கொண்டுவராத மாணவி; பிரம்பால் அடித்த ஆசிரியர்! அருகில் அமர்ந்திருந்த மாணவிக்கு நேர்ந்த சோகம்

மாணவி முத்தரசி
மாணவி முத்தரசி

புத்தகம் கொண்டுவராத மாணவியைப் பிரம்பால் ஆசிரியர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது குச்சி உடைந்து, அருகில் இருந்த மாணவியின் கண்ணில் பட்டதால் பாதிப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளி செயல்பட்டுவருகிறது. நல்லொழுக்கப் பாட நேரத்தில் அதற்கான புத்தகம் கொண்டு வராத மாணவர்களை, ஆசிரியர் ஆதிநாராயணன் என்பவர் கண்டித்துள்ளார்.

ஆசிரியர் ஆதிநாராயணன்
ஆசிரியர் ஆதிநாராயணன்

அவர், ஐந்தாம் வகுப்புப் படிக்கும் தங்கமலர் என்ற மாணவியைப் பிரம்பால் அடித்தபோது, பிரம்பு உடைந்து அருகில் அமர்ந்திருந்த முத்தரசியின் கண்ணில் குத்தியது. அதனால், கண்ணில் ரத்தம் வழிந்ததால் அதிர்ச்சியடைந்த ஆசிரியரும் பள்ளி நிர்வாகத்தினரும், மாணவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

முத்தரசியின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனடியாக நெல்லையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர்.

`வகுப்பறையில் ஏற்பட்ட காயம்; அலட்சிய ஆசிரியர்கள்!’- 5ம் வகுப்பு சிறுமியின் உயிரைப் பறித்த பாம்பு

அதனால் முத்தரசிக்கு கண்ணில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, கண்ணில் சிக்கியிருந்த பிசிறு அகற்றப்பட்டது. இதுபற்றி மாணவி முத்தரசியின் பாட்டி சுயம்பு கனி என்பவர் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து விசாரித்த போலீஸார், ஆசிரியர் ஆதிநாராயணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், மாணவி முத்தரசியைப் பிரம்பால் அடித்த ஆசிரியர் ஆதிநாராயணனை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, கூடங்குளம் பொதுமக்கள் மற்றும் முத்தரசியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்கள்.

உறவினர்கள் போராட்டம்
உறவினர்கள் போராட்டம்

தலைமறைவாக இருக்கும் ஆசிரியரை போலீஸார் தேடி வருகின்றனர். இதனிடையே, `கண்ணில் மேற்கொள்ளப்பட்ட அறுவைசிகிச்சையால் கிடைத்துள்ள பலன் குறித்து இரு தினங்களுக்குப் பின்னரே தெரியவரும். அதன்பின்னர், அவசியம் ஏற்பட்டால் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச் செல்லப்படுவார்' என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின் செல்ல