Published:Updated:

குப்பை கார்னரான குளித்தலை பஸ் ஸ்டாப்... இளைஞர்கள் கோரிக்கைக்கு செவிசாய்த்த டிராஃபிக் போலீஸ்!

இளைஞர்கள் கொடுத்த தொடர்ச்சியான மனு காரணமாக, குளித்தலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பேருந்து நிறுத்தத்தைப் போக்குவரத்துப் போலீஸாரே களமிறங்கி தூய்மைப்படுத்தியதோடு, பேருந்து நிறுத்தத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த சம்பவம், குளித்தலைப் பகுதியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

பேருந்து நிறுத்தத்தைச் சுத்தப்படுத்தும் டிராஃபிக் போலீஸ்
பேருந்து நிறுத்தத்தைச் சுத்தப்படுத்தும் டிராஃபிக் போலீஸ் ( நா.ராஜமுருகன் )

இளைஞர்கள் கொடுத்த தொடர்ச்சியான மனு காரணமாக, குளித்தலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பேருந்து நிறுத்தத்தைப் போக்குவரத்துப் போலீஸாரே களமிறங்கி தூய்மைப்படுத்தியதோடு, பேருந்து நிறுத்தத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்த சம்பவம், குளித்தலைப் பகுதியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

பேருந்து நிறுத்தத்தைச் சுத்தப்படுத்தும் டிராஃபிக் போலீஸ்
பேருந்து நிறுத்தத்தைச் சுத்தப்படுத்தும் டிராஃபிக் போலீஸ்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டத்தில், திருச்சி மார்க்கத்தில் இருக்கிறது குளித்தலை நகராட்சி. இந்த நகராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தைத் தாண்டி காந்தி சிலை அருகே கடந்த ஒருவருடத்துக்கு முன்பு பேருந்து நிறுத்தம் ஒன்று கட்டப்பட்டது. அப்போதைய பெரம்பலூர் மருதைராஜாவின் எம்.பி நிதியிலிருந்து இந்தப் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது. ஆனால், பேருந்து எதுவும் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் நிற்பதில்லை.

இதனால், கோபமான அந்தப் பகுதி இளைஞர்கள் குளித்தலை நகராட்சி ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து போலீஸார், தொகுதி எம்.எல்.ஏ ராமர் என்று பலரிடம் கடந்த ஒருவருடமாகவே மனு கொடுத்து வந்தனர். ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

Vikatan
பேருந்து நிறுத்தத்தைச் சுத்தப்படுத்தும் டிராஃபிக் போலீஸ்
பேருந்து நிறுத்தத்தைச் சுத்தப்படுத்தும் டிராஃபிக் போலீஸ்
நா.ராஜமுருகன்

இந்நிலையில்தான், சமீபத்தில் குளித்தலை நகராட்சி ஆணையராக (பொறுப்பு) புகழேந்தி பதவியேற்றிருக்கிறார். விடாக்கண்டனாகக் குளித்தலைப் பகுதி இளைஞர்கள் அவரையும் சந்தித்து, "அந்தப் பேருந்து நிறுத்தத்தில் தனியார் பேருந்துகள் மட்டுமல்ல, அரசுப் பேருந்துகளும் நின்று செல்வதில்லை. நீங்கள்தான் அங்கே அனைத்துப் பேருந்துகளும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அந்தப் பேருந்து நிறுத்தத்தை இடித்துத் தள்ளிவிடுங்கள். ஏனென்றால், அந்தப் பேருந்து நிறுத்தத்தில் சமூகவிரோதிகள் அமர்ந்துகொண்டு மது அருந்துகிறார்கள். இதனால் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களும் பெண்களும் அச்சத்திலேயே கடந்துசெல்கின்றனர். குளித்தலை நகராட்சி நிர்வாகம் குப்பை வண்டிகளை அங்கேதான் நிறுத்திவைக்கிறது" என்று புகார் வாசித்திருக்கிறார்கள்.

அவர்களிடம், "போக்குவரத்து போலீஸார் மூலம் உடனே நடவடிக்கை எடுக்க ஆவண செய்கிறேன்" என்று நகராட்சி ஆணையர் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். ஆனால், ஒரு வருட அலைச்சல் கொடுத்த அனுபவத்தில் நம்பிக்கையின்றி இளைஞர்கள் சென்றுவிட்டார்கள்.

ஆனால், நேற்று (சனிக்கிழமை) காலை அவர்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ஒட்டுமொத்த குளித்தலை நகர் போக்குவரத்துக் காவலர்களும் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர் சிவபாலன் தலைமையில் அந்தப் பேருந்து நிறுத்தம் அருகே கூடினர். அங்குள்ள இளைஞர்கள், பொதுமக்களையும் சேர்த்துக்கொண்டு குப்பையும், அசுத்தமும் நிறைந்து காணப்பட்ட அந்தப் பேருந்து நிறுத்தத்தைத் தூய்மைப்படுத்த ஆரம்பித்தனர். போக்குவரத்துக் காவலர்களே பெருக்குவது, தண்ணீர் எடுத்துவந்து ஊற்றிக் கழுவுவது என்று காரியத்தில் இறங்கினர்.

அந்தப் பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்தை நின்றுபோக வைத்த டிராஃபிக் போலீஸார்
அந்தப் பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்தை நின்றுபோக வைத்த டிராஃபிக் போலீஸார்
நா.ராஜமுருகன்

அதைப்பார்த்த மக்கள் சிலர், "நடப்பது உண்மையா?" என்று வியந்து பேசிக்கொண்டனர். அதற்குள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் அங்கே வர, அவர்களிடம் கார்த்திகேயன், "இனிமேல் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுங்கள்" என்று கோரிக்கைவிடுத்தார். அதோடு அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து ஒன்றைக் கைகாட்டி மறித்து, அந்த நிறுத்தத்தில் நின்றுபோக வைத்தார். பேருந்து ஓட்டுநரிடம், "இனி இந்த நிறுத்தத்தில் நின்றுபோக வேண்டும்" என்று அறிவுறுத்தி, அனுப்பிவைத்தார்.

இதுசம்பந்தமாக கோரிக்கை மனுக்களைத் தொடர்ச்சியாக அனுப்பி, போக்குவரத்துக் காவலர்களே களத்தில் இறங்கக் காரணமான இளைஞர்களில் ஒருவரான சுந்தரிடம் பேசினோம்.

"எங்களின் தொடர் முயற்சி, மனுக் கொடுக்கும் போராட்டம், இன்றைக்கு நல்ல பலனை பெற்றுத் தந்துள்ளது. கலெக்டர் வரை மனுக் கொடுத்திருக்கிறோம். `அந்தப் பகுதி போக்குவரத்துத் துறை அலுவலரிடமும், போக்குவரத்து போலீஸாரிடமும் மனுக் கொடுங்கள்' என்று சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுவார்கள். அவர்களிடம் போனால், இதோ... அதோ என்பார்களே ஒழிய, ஒன்றும் நடக்காது.

சுந்தர்
சுந்தர்
நா.ராஜமுருகன்

இந்த நிலையில்தான், புதிதாக வந்த குளித்தலை நகராட்சி ஆணையர் புகழேந்தியிடம் மனுக் கொடுத்தோம். நம்பிக்கையில்லாமல்தான் இருந்தோம். ஆனால், அவர் இவ்வளவு துரிதமாக, அதுவும் போக்குவரத்துக் காவலர்களையே களத்தில் நேரடியாக இறங்கிச் செயல்புரியும் வண்ணம் திறன்பட நடவடிக்கை எடுத்துள்ளார். மதியம் வரை பேருந்துகள் இங்கே நின்றுசென்றன. ஆனால், காவலர்கள் சென்றபிறகு வழக்கம்போல நிற்காமல் செல்கின்றன. அதை இன்னும் நெறிப்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கையோடு முடித்தார்.