Published:Updated:

`வளைகாப்பு விழாவுக்கு மாலை இலவசம்!' - `இன்ஜினீயர் பூ கடை' இளைஞரின் அசத்தல் அறிவிப்பு

இன்ஜினீயர் பூ கடை
இன்ஜினீயர் பூ கடை ( நா.ராஜமுருகன் )

கொரோனா வைரஸ் பாதிப்பால் கடை நடத்த முடியாமல் போனாலும், தனது வயலில் விளைந்த பூக்களை வீட்டிலேயே வைத்து மாலைகள் கட்டி, தேவைப்படுவோருக்கு வழங்கி வந்திருக்கிறார்.

இன்ஜினீயரிங் படித்துவிட்டு, 'இன்ஜினீயர் பூ கடை' என்ற பெயரில் பூ கடை நடத்தும் குளித்தலை இளைஞர் ஒருவர், 'வளைகாப்பு விழா நடத்துவதற்கு மாலை இலவசமாக வழங்க இருக்கிறோம்' என்று அறிவித்திருப்பது, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

தனது பூ கடையில் கார்த்திக்
தனது பூ கடையில் கார்த்திக்
நா.ராஜமுருகன்

கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, மக்கள் தொடர் ஊரடங்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார்கள். இதனால், சிறு குறு தொழில் செய்பவர்கள் தொழில் நடத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்கள்.

`திருப்பூரிலிருந்து நடந்தே கரூர் வந்த தொழிலாளி!' -250 கி.மீ தூரத்தைக் கடக்க உதவிய செந்தில் பாலாஜி

பலர் தங்கள் தொழிலை வீட்டில் இருந்தே செய்து வந்தனர். அப்படி, தனது வீட்டில் இருந்து பூக்கட்டி விற்பனை செய்து வந்த இன்ஜினீயரிங் படித்த இளைஞர் ஒருவர், உழைப்பாளர் தினத்தையொட்டி, 'வளைகாப்பு விழாவில் பெண்ணுக்குத் தேவைப்படும் மாலை இலவசமாக வழங்கப்படும்' என்று அறிவித்திருப்பது, கொரோனா பாதிப்பில் இருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 பூ கட்டும் கார்த்திக்
பூ கட்டும் கார்த்திக்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள தாளியாம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர்தான், இப்படி 'வளைகாப்பு விழாவுக்கு மாலை இலவசம்' என்று அறிவித்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்திருக்கிறார், கார்த்திக்.

ஆனால், வேலை தந்த அதீத அழுத்தம், அவர் பார்த்து வந்த வேலையை உதற வைத்தது. அதன் பிறகு, தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, அவர்கள் பார்த்து வந்த குடும்பத் தொழிலான பூக்கட்டி விற்கும் தொழிலில் இறங்கினார். ஆன்லைன் மூலமாக சுப காரியங்களுக்கு மாலைகளைத் தேவைப்படும் டிசைன்களில் அமைத்து, ஸ்மார்ட்டாக தொழிலில் பலமாகக் கால் வைத்தார். குளித்தலை சுங்ககேட் பகுதியில் இதற்காக, 'இன்ஜினீயர் பூ கடை' என்று வித்தியாசமான பெயரில் கடையைத் தொடங்க, அது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

தனது பூ கடையில் கார்த்திக்
தனது பூ கடையில் கார்த்திக்
நா.ராஜமுருகன்

ஆரம்பத்தில் தொழில் புரிபடவில்லை என்றாலும், தொழிலில் படிப்படியாகச் சாதிக்க, இப்போது மாதம் ரூ. 60,000 வரை சம்பாதிக்கிறார். இந்தச் சூழலில்தான், கொரோனா வைரஸ் பாதிப்பால் கடை நடத்த முடியாமல் போனாலும், தனது வயலில் விளைந்த பூக்களை வீட்டிலேயே வைத்து மாலைகள் கட்டி, தேவைப்படுவோருக்கு வழங்கி வந்திருக்கிறார். இந்த நிலையில், 'வளைகாப்பு விழாவுக்கு மாலை இலவசம்' என்று அசத்தலான அறிவிப்பைச் செய்து, மக்களைக் கவர்ந்திருக்கிறார்.

'வாழ்த்துகள்' சொல்லி, கார்த்திக்கிடம் பேசினோம்.

``கொரோனா வைரஸ் பாதிப்பால பல தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கு. என்னோட தொழிலும் பாதிக்கப்பட்டது. ஆனால், அதையும் மீறி மக்கள் அதிக கஷ்டத்தை அனுபவிக்கிறாங்க. அவங்களோட வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கு. நான் இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே மாலைகள் கட்டி, தேவைப்படுவோருக்கு விற்பனை செய்து வந்தேன். இந்தச் சூழலில், கஷ்டப்படும் மக்களுக்கு என்னால் ஏதாவது உதவ முடியுமானு யோசித்தேன். அதன்படிதான், வளைகாப்பு விழா நடத்துபவர்களுக்கு தேவைப்படும் சம்மங்கி மாலைகளை இலவசமாக தர முடிவெடுத்தேன். அதுபற்றிய அறிவிப்பை சமூக வலைதளங்களில் செய்தேன். நல்ல வரவேற்பு. பலர் எனக்கு போன் பண்ணி பேசினாங்க.

 பூ கட்டும் கார்த்திக்
பூ கட்டும் கார்த்திக்
நா.ராஜமுருகன்

கரூரைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர் வாசுதேவன் ராமானுஜம்ங்கிறவர் போன் பண்ணி, 'சூப்பர் தம்பி. உன் நல்ல மனசுக்கு பெரிய ஆளா வருவே'னு பாராட்டினார். நான் நெகிழ்ந்து போயிட்டேன். இங்கே உள்ள சீகாம்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நாளைக்கு வளைகாப்பு விழா. அவங்களுக்கு இலவசமாக மாலை தயாரித்து அனுப்பப் போறேன். ஆட்டோ டிரைவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் பயணிக்க ஆட்டோ இலவசம்னு சொல்றாங்க. சில மருத்துவர்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவசமா பிரசவம் பார்க்குறாங்க. நான் ஒரு சாதாரண பூக்கடை வெச்சுருக்கும் இளைஞன். என்னால் முடிஞ்ச சின்ன உதவி இது. நிறைய சாதிச்சதும், இன்னும் நிறைய உதவிகளை மக்களுக்குச் செய்வேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு