Published:Updated:

நள்ளிரவில் சாலையில் தவித்த தம்பதி; உதவிய போலீஸ் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!

அந்தத் தம்பதியை விசாரிக்கும் நாவுக்கரசன்
அந்தத் தம்பதியை விசாரிக்கும் நாவுக்கரசன்

``இரவு நேரத்தில் அந்தத் தம்பதி அல்லாடுவதைப் பற்றி நாவுக்கரசன் சார் சொன்னதும், என் காரை எடுத்துட்டுப் போய், அவர்களைத் திருச்சியில் விட்டேன்''.

தன் தந்தை இறந்ததால், கணவர் மற்றும் குழந்தைகளோடு கோவையில் இருந்து, திருச்சிக்கு பெண் ஒருவர் ஸ்கூட்டியில் சென்றார். இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் அவர்கள் சென்ற வண்டி பஞ்சராக, நள்ளிரவில் கொட்டும் மழையில் தவித்த அந்தத் தம்பதியை, குளித்தலை போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர், விஜய் மக்கள் மக்கள் இயக்க நிர்வாகியின் கார் மூலம், திருச்சிக்கு அனுப்பி வைத்த சம்பவம், அங்குள்ளவர்களை நெகிழச் செய்திருக்கிறது.

அந்த தம்பதியை விசாரிக்கும் நாவுக்கரசன்
அந்த தம்பதியை விசாரிக்கும் நாவுக்கரசன்

கோயம்புத்தூரில் மனைவி சுமதி, இரண்டு மகள்களோடு தங்கி வேலைபார்த்து வருபவர் கணேஷ். தென்மாவட்டம் ஒன்றை பூர்வீகமாகக் கொண்டவர். இந்த நிலையில், சுமதியின் தந்தை திருச்சி பாபு நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்துவிட்டதாகத் தகவல் வந்திருக்கிறது. இதனால், கடந்த புதன்கிழமை அன்று இரவு 11 மணியளவில் கணேஷூம் சுமதியும் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் ஸ்கூட்டி வாகனத்தில் கோயம்புத்தூரில் இருந்து திருச்சி மலைக்கோட்டை பாபு நகரில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், போகும் வழியில் குளித்தலை குறப்பாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் வந்த இருச்சக்கர வாகனம் பஞ்சர் ஆகிவிட்டது. அப்போது, கடும் மழை வேறு பெய்திருக்கிறது.

என்ன செய்வது என்று தெரியாமல் கொட்டும் மழையில் பரிதவித்தபடி நின்றுகொண்டிருந்த அந்தத் தம்பதியையும், அவர்களின் குழந்தைகளையும், இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த, குளித்தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாவுக்கரசன் பார்த்திருக்கிறார். உடனே அவர்களிடம் சென்று விசாரித்திருக்கிறார். சுமதி விவரத்தைச் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட நாவுக்கரசன், உடனடியாக வண்டிக்கு பஞ்சர் ஒட்டுபவர்களை போனில் அழைத்திருக்கிறார். ஆனால், கடுமையாக மழை பெய்ததால், யாரும் வர முன்வரவில்லை.

காரில் ஏறும் தம்பதி
காரில் ஏறும் தம்பதி

இதனால் மாற்றுவழியை யோசித்த நாவுக்கரசன், தன் நண்பரும், விஜய் மக்கள் இயக்க குளித்தலை ஒன்றியத் தலைவருமான சதாசிவத்துக்கு போன் செய்து, அந்தத் தம்பதியின் நிர்க்கதி நிலையை விளக்கியிருக்கிறார். உடனே, ``நான் கொண்டு போய் விடுகிறேன் சார்" என்று கூறி, சடுதியில் தனது காரை எடுத்துக் கொண்டு ஸ்பாட்டுக்கு விரைந்து வந்திருக்கிறார். அதற்குப் பின்தான் அந்தத் தம்பதிக்கு நிம்மதி வந்தது. அவர்களைக் காரில் ஏற்றிக்கொண்டார் சதாசிவம்.

இன்னொரு பக்கம், திருச்சி வரையில் உள்ள மருதூர் மற்றும் பெட்டவாய்த்தலை செக்போஸ்ட்களில் உள்ள போலீஸாரை வாக்கிடாக்கி மூலம் தொடர்புகொண்ட ஆய்வாளர் நாவுக்கரசன், நடந்த விவரங்களைக் கூறி, அவர்கள் வரும் காரணத்தைச் சொல்லி அந்தக் காரை நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார். சதாசிவம் தனது காரில் திருச்சி பாபு நகரில் உள்ள சுமதியின் வீட்டில், அவர்களை இறக்கிவிட்டு, குளித்தலை திரும்பினார்.

இதுகுறித்து, சதாசிவத்திடம் பேசினோம்.

``அந்த இரவு நேரத்தில், கொட்டும் மழையில் அந்தத் தம்பதியும் குழந்தைகளும் அல்லாடுவதைப் பற்றி நாவுக்கரசன் சார் சொன்னதும், உடனே எனது காரை எடுத்துச்சென்று அவர்களை அழைத்துக்கொண்டு போய் திருச்சியில் விட்டேன். கண்ணீர்விடாத குறையாக அந்தக் குடும்பமே, வீட்டில் துக்க நிகழ்ச்சி நடக்கும் நேரத்திலும் எனக்கு நன்றி சொன்னபோது, உண்மையில் அவ்வளவு திருப்தியாக இருந்தது.

வழியனுப்பும் நாவுக்கரசன்
வழியனுப்பும் நாவுக்கரசன்

நாவுக்கரசன் சார் அதோடு விடாமல், நேற்று காலையில் கணேஷின் வண்டியை பஞ்சர் ஒட்ட ஏற்பாடு செய்ததோடு, மாற்று வண்டியில் குளித்தலை வந்த கணேஷிடம் அதை ஒப்படைத்த பிறகுதான் ஓய்ந்தார். மக்களைப் படாதபாடுபடுத்திக் கொண்டிருக்கும் இந்தப் படுபாதக கொரோனா பரவல் காலத்தில், நிர்க்கதியாக நின்ற ஒரு தம்பதிக்கு நாவுக்கரசன் சார் மூலமாக என்னால் சிறிய அளவில் உதவ முடிந்ததே என்று நினைக்கும் போது, ஆனந்தத்தில் நெஞ்சம் விம்முகிறது" என்றார் நெக்குருகிப்போய்.

நல்ல மனங்கள் வாழ்க!

அடுத்த கட்டுரைக்கு