Published:Updated:

`எப்போ நல்ல வாழ்க்கை வரும்னு தெரியல!' - கலங்கவைக்கும் குளித்தலை இளைஞர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விளக்குமாறு செய்யும் அருள்ராஜ்
விளக்குமாறு செய்யும் அருள்ராஜ்

`தினமும் ஒரு விளக்குமாறு கூட விற்பனை ஆக மாட்டேங்குது. பெண் குழந்தைங்க ரெண்டும், 'பசிக்குதுப்பா, ரொட்டியாச்சும் வாங்கிக் கொடு'னு கதறுறப்ப, எனக்கு ஈரக்குலையே ஆடிப்போகுது.'

"வெறும் ஈச்சம் தோகையில் நான் செய்யுற விளக்குமாறுகளை வச்சு தரையை சுத்தமா கூட்டலாம். ஆனால், அதைச் சாதாரண காலங்களிலேயே வாங்க ஆள் இருக்க மாட்டாங்க. கொரோனா வந்து, கொஞ்சம் நஞ்சம் விற்பனை ஆகிவந்த விளக்குமாறும் விற்பனையில மண்ணள்ளிப் போட்டுட்டு. இரண்டு பொம்பளை புள்ளைகளை வச்சுக்கிட்டு அன்றாட சாப்பாட்டுக்கே வழியத்து நிக்கிறேன்" என்று கண்ணீரோடு பேசுகிறார் அருள்ராஜ்.

விளக்குமாறு செய்யும் அருள்ராஜ்
விளக்குமாறு செய்யும் அருள்ராஜ்
`கொரோனா, எங்கள வாழவிடுமான்னு தெரியல!' - கலங்கும் கரூர் பலாப்பழ வியாபாரி

கரூர் மாவட்டம், குளித்தலை நகரில் உள்ள நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். குளித்தலை அரசு மருத்துவமனை எதிரே உள்ள பிளாட்பாரத்தின் ஓரத்தில் ஈச்சம் மர தோகைகளில் விளக்குமாறுகள் தயார் செய்து, விற்பனை செய்துவருகிறார். 25 வயது இளைஞரான அருள்ராஜ், கடந்த 7 வருடங்களாக இந்தத் தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார்.

ஏற்கெனவே மக்கள் வாக்குவம் க்ளீனர் உள்ளிட்ட நவீன சுத்தம் செய்யும் கருவிகளுக்கு மாறிவிட்டதால், ஈச்சம் மர தோகைகளில் செய்யப்படும் விளக்குமாறுகளை வாங்குவதைக் குறைத்துவிட்டார்கள். இருந்தாலும், அருள்ராஜ் குளித்தலைப் பகுதியில் விடாமல் இந்தத் தொழிலை செய்துவருகிறார்.

விளக்குமாறு செய்யும் அருள்ராஜ்
விளக்குமாறு செய்யும் அருள்ராஜ்

அங்குள்ள சிறுசிறு கடைகள், வீடுகளில் தரையைக் கூட்டிச் சுத்தம் செய்யும் பயன்பாட்டுக்காக, இவரிடம் விளக்குமாறுகளை சிலர் வாங்கிவந்திருக்கிறார்கள். ஆனால், கடந்த மூன்று மாதங்களாகக் கொரோனோ ஊரடங்கால் மக்கள் முடங்கிவிட்டதால், அருள்ராஜின் ஈச்சம்தோகை விளக்குமாறுகள் விற்கப்படாமல், குவிந்துக்கிடக்கின்றன. இருந்தாலும், 'இன்று ஒன்றாவது வித்துவிடாதா?' என்ற ஏக்கத்தில், விளக்குமாறுகளைத் தயாரித்துக் கொண்டே இருக்கிறார் அருள்ராஜ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கவலை தோய்ந்திருக்கும் முகத்தோடு விளக்குமாறுகளை பின்னிக்கொண்டிருந்த அருள்ராஜிடம் பேசினோம்.

"எனக்குச் சொந்த ஊர், திருச்சி மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம். அப்பா, அம்மா, அண்ணன், தம்பினு எனக்கு எந்த உறவுகளும் இல்லை. இதனால், கடந்த 8 வருஷத்துக்கு முன்னாடி பொழப்புக்காகக் குளித்தலையில் வந்து தங்கிட்டேன். நான் தங்கியிருக்கும் இடத்துல ஒருத்தர் இப்படி ஈச்சம்தோகையில் விளக்குமாறுகள் பின்னி வித்துக்கிட்டு இருந்தார். அவர்கிட்ட இந்தத் தொழிலை கத்துக்கிட்டேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி, பத்மபிரியாவை திருமணம் பண்ணிக்கிட்டேன். எங்களுக்கு இப்போ ரெண்டு பொம்பளை குழந்தைகள் இருக்காங்க. நாலு பேரும் வாடகை வீட்டில் குடியிருக்கிறோம். மாசம் பொறந்தா 800 ரூபாய் வாடகையை எடுத்துக் குடுக்கணும்.

அருள்ராஜ்
அருள்ராஜ்

நாலு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும், சாப்பாடு, வாடகை உள்ளிட்ட விசயங்களுக்கு வருமானத்துக்கு வழிபண்ண, இந்தத் தொழில் உதவுனுச்சு. ஆனால், இப்போ காத்தாடுது. குளுமணி, வயலூர், பெருகமணினு போய், அங்கு முளைச்சுக் கிடக்குற ஈச்சமரங்களில் இருந்து மூணுநாளைக்கு ஒருதரம் தோகைகளை வெட்டிக்கிட்டு வருவேன். அதை மூணுநாள்கள் வெயில்ல காயவச்சு பதப்படுத்தனும். அதன்பிறகு, அதை தேவையான அளவு எடுத்து, நீளமான வாழைமட்டைகளில் வச்சு, சுத்தி ஈச்சமட்டைகளை வைக்கணும். விளக்குமாறின் கைப்பிடி பகுதியில் சைக்கிள் டியூபை வெட்டி, நுழைத்து டைட் பண்ணணும்.

ஒருதடவைப் போய் ஈச்சம்மர தோகைகளை வெட்டிக்கிட்டு வந்தா, 35 பீஸ் வரை தயாரிக்க முடியும். அதை ஒரு பீஸ் 50 என்று விலை வச்சு விற்பேன். நாலு மாதத்துக்கு முன்னாடிவரைக்கும், தினமும் 10 விளக்குமாறுகள் வரை விற்கும். குளித்தலை நகரில் உள்ள சிறுசிறு கடைகள், மருத்துவமனையில் வேலைபார்க்கும் தூய்மைப்பணியாளர்கள் என்று ரெகுலரா என்கிட்ட விளக்குமாறுகள் வாங்குவாங்க.

ஒருசில வீடுகளைச் சேர்ந்தவங்க ரெகுலரா விளக்குமாறுகள் வாங்குவாங்க. ஆனா, கொரோனா ஊரடங்கால், இப்போ என் நிலைமை கவலைக்கிடமா ஆயிட்டு. தினமும் ஒரு விளக்குமாறுகூட விற்பனை ஆகமாட்டேங்குது. வீட்டு வாடகையை இரண்டு மாசமா கொடுக்க முடியலை.

விளக்குமாறு செய்யும் அருள்ராஜ்
விளக்குமாறு செய்யும் அருள்ராஜ்

தினமும் சாப்பாட்டுக்கே வழிபண்ண முடியலை. பெண் குழந்தைங்க ரெண்டும், 'பசிக்குதுப்பா, ரொட்டியாச்சும் வாங்கிக் கொடு'னு கதறுறப்ப, எனக்கு ஈரக்குலையே ஆடிப்போகுது. தெரிஞ்சவங்ககிட்ட பத்தாயிரம் வரை கடன்வாங்கி இரண்டு மாசத்தை ஓட்டிட்டு வந்தோம். ஆனால், கடன் கொடுத்தவர் இப்போ அதைக்கேட்டு நெருக்குறார். என்ன பண்றதுன்னே தெரியலை.

வீட்டுல சும்மா மோட்டுவலையையே பார்த்துக்கிட்டு இருக்க பிடிக்காம, தினமும் இங்க வந்து உட்கார்ந்துக்கிறேன். என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது சார். எப்போ கொரோனா ஒழியும், நாங்க எப்போ நல்ல வாழ்க்கை வாழ முடியும்னு தெரியலையே" என்று உடைந்துபோன குரலில் சொல்லி முடிக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு