Published:Updated:

`கொரோனா' விழிப்புணர்வு மேடையான `மாஸ்டர்' மேடை! -ரசிகர்களைக் கவர்ந்த டிராஃபிக் இன்ஸ்பெக்டர்

கார்த்திகேயன் பேசும்போது...
கார்த்திகேயன் பேசும்போது... ( நா.ராஜமுருகன் )

விஜய் சம்பந்தப்பட்ட அந்த மேடையை கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வுக்காக கார்த்திகேயன் பயன்படுத்தியது பொதுமக்கள் மத்தியில் பலத்த பாராட்டைப் பெற்றிருக்கிறது.

விஜய் நடிக்கும் `மாஸ்டர்' பட இசை வெளியீட்டு விழா, நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. விஜய் மக்கள் இயக்கத்தின் குளித்தலை ஒன்றியம் சார்பாக அந்த நிகழ்ச்சியை குளித்தலையில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய, அந்த மேடையில் ஏறிய குளித்தலை டிராஃபிக் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் டிராஃபிக் சம்பந்தமான விழிப்புணர்வை ரசிகர்களிடம் ஏற்படுத்தி, அசத்தியிருக்கிறார்.

``ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்..." - `மாஸ்டர்' விஜய் என்ன பேசினார்?
கொரோனா குறித்த விழிப்புணர்வு
கொரோனா குறித்த விழிப்புணர்வு

இதற்கு முன்பு நடித்த சர்கார் பட இசை வெளியீட்டு விழாவின்போதே, அரசியல் பேசி, தனது பட இசை வெளியீட்டு மேடையை அரசியல் மேடையாக்கினார் விஜய். அதனால், `மாஸ்டர்' பட இசை வெளியீட்டு விழாவில் அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கூடவே, சமீபத்தில் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை வேறு நடத்தி இருந்ததால், அவரின் பேச்சுக்காக அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள்.

இந்த நிலையில்தான், விஜய் பேச்சுகளைக் கேட்பதற்காக குளித்தலை ஒன்றிய விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் சதாசிவம் ஏற்பாடு செய்திருந்தார். குளித்தலை பேருந்து நிலையத்தில் நேரடி ஒளிபரப்புக்காக மிக பிரமாண்டமான திரை அமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஜய் ரசிகள் கலந்துகொண்டனர். தங்கள் தலைவர் என்ன பேசப்போகிறார் என்று ஆவலோடு விஜய் ரசிகர்கள் அங்கே திரண்டிருந்தனர்.

விஜய் ரசிகர்கள்
விஜய் ரசிகர்கள்

`சில இடங்களில் உண்மையைக் காக்க ஊமையாக இருக்க வேண்டும்; சோதனை இல்லாத நிலை கேட்பேன்' என்றெல்லாம் பேச, அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இந்த நிலையில்தான், விஜய் பேசி முடித்ததும், இந்த விழா மேடையில் ஏறிய குளித்தலை போக்குவரத்துக் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன், கொரோனா விழிப்புணர்வு, பெண்கள் பாதுகாப்பு குறித்த காவலன் செயலி விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி பேசினார். அதோடு விஜய் பேசுவதைக் கேட்க அமைக்கப்பட்ட அதே திரையில், கொரோனா, சாலை பாதுகாப்பு, காவலன் செயலி உள்ளிட்ட விஷயங்கள் பற்றிய விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டது.

விஜய் சம்பந்தப்பட்ட அந்த மேடையை கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வுக்காக கார்த்திகேயன் பயன்படுத்தியது பொதுமக்கள் மத்தியில் பலத்த பாராட்டைப் பெற்றிருக்கிறது.

இதுகுறித்து, குளித்தலை போக்குவரத்துக் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயனிடம் பேசினோம். ``விஜய் பேசுவதைக் கேட்க, குளித்தலையில் திரை கட்ட அனுமதிக்க வேண்டும்னு அவரது ரசிகர்கள் கேட்டாங்க. பொதுமக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் அந்த விழாவை நடத்த உத்தரவாதம் கொடுத்தாங்க. அதனால், அதற்கு அனுமதி வழங்கினோம். அங்கே திடீரென விஜய் மக்கள் இயக்க குளித்தலை ஒன்றியத் தலைவர், வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களிடம் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் சொன்னார்.

கொரோனா குறித்த விழிப்புணர்வு
கொரோனா குறித்த விழிப்புணர்வு

அதனால், ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது குறித்தும் மிகத் தெளிவாக இளைஞர்களுக்கு விளக்கம் கொடுத்தோம். காவலன் செயலியை பெண்கள் பயன்படுத்துவது பற்றியும் அறிவுறுத்தினோம். எல்லாவற்றையும்விட, உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு