Published:Updated:

`5 நாளா சாப்பிடலண்ணே!' - கதறிய சர்க்கஸ் குழந்தைகள்; பிராணிகளுக்கும் சேர்த்து உணவளித்த கரூர் ஆய்வாளர்

சர்க்கஸ் குழந்தைகளோடு கார்த்திகேயன்
சர்க்கஸ் குழந்தைகளோடு கார்த்திகேயன்

அவர்களுக்கு உதவ முடிந்ததைப் பாக்கியமாகக் கருதுகிறேன். நாங்க உதவுனதைப் பார்த்ததும், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலரும், அந்த சர்க்கஸ் நடத்துபவர்களுக்கு உதவியிருக்காங்க.

கரூரில் கடந்த 21 நாள்களாக சாப்பிட வழியில்லாமல் தவித்த சர்க்கஸ் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குப் பத்து நாள்களுக்குரிய உணவுப் பொருள்களை வழங்கி நெகிழ வைத்திருக்கிறார் குளித்தலை போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர்.

சர்க்கஸ் நடத்தும் மக்கள்
சர்க்கஸ் நடத்தும் மக்கள்

கொரோனாவால் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு வேலை பார்க்கச் சென்ற பலர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதியுற்று வந்தனர். அவர்களில் பலர், ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களை நடந்தே கடந்து, சொந்த ஊர்களுக்குத் திரும்பிய சோகக்கதைகளும் அரங்கேறின.

இந்தநிலையில், ஊர் ஊராகச் சென்று சர்க்கஸ் நடத்தும் ஒரு சிறிய சர்க்கஸ் குழு ஒன்று, கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள தாலியம்பட்டி என்ற குக்கிராமத்தில் மாட்டிக்கொண்டது. கொரோனா வைரஸ் பற்றியும் அதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்ற விவரமும் தெரியாமல், சர்க்கஸ் நடத்துவதற்காக அங்கே சென்றவர்கள், சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்தனர்.

உதவிப் பொருள்களோடு கார்த்திகேயன்
உதவிப் பொருள்களோடு கார்த்திகேயன்

5 ஆண்கள், 4 பெண்கள், 2 வயதானவர்கள், 10 குழந்தைகள் மற்றும் குதிரை, நாய், குரங்கு உள்ளிட்ட பிராணிகளோடு கையில் இருந்த காசு கடந்த 15 நாள்களாக இரண்டு வேளை உணவு சாப்பிட உதவியிருக்கிறது.

அதன்பிறகு, அவர்களுக்கு சாப்பிடுவதற்கு வழியில்லாமல் போக, அனைவரும் கடந்த 5 நாள்களாகக் கடும் பசியில் வாடியிருக்கிறார்கள். அவர்கள் வைத்திருந்த பிராணிகளுக்குத் தண்ணிகூட கொடுக்க முடியாமல் போக, அவையும் பசியில் தவித்திருக்கின்றன. அந்தக் கிராமமும் மிகப் பின்தங்கியது என்பதால், அந்த மக்களாலும் இவர்களுக்குப் பெரிதாக உதவ முடியவில்லை. அதைவிட, 10 குழந்தைகள் மற்றும் சிறுவர்களும் பசி தாங்காமல் கதற, அங்கிருந்த பெரியவர்கள் துடித்துப் போயுள்ளனர். இந்தத் தகவல் குளித்தலைப் போக்குவரத்துக் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன் கவனத்துக்குச் சென்றுள்ளது.

சர்க்கஸ் மக்களுக்கு உதவி
சர்க்கஸ் மக்களுக்கு உதவி

கொரோனா தடுப்புப் பணிகளுக்கு மத்தியிலும், உடனே, சர்க்கஸ் நடத்துபவர்களுடன் போனில் பேசியிருக்கிறார். அவரிடம் பேசிய சிறுவர்கள், 'அஞ்சு நாளா சாப்பிடலண்ணே. பசி எங்க வயிறைப் பிச்சுத் திங்குதுண்ணே' என்று கதறியிருக்கிறார்கள். அவர்களின் அவல நிலையைக் கேட்டுக் கலங்கிய கார்த்திகேயன், உடனடியாக காவலர்கள் மூலம் உணவுக்கு ஏற்பாடு செய்தார்.

தொடர்ந்து, குளித்தலை லயன்ஸ் கிளப்பின் உதவியோடு, அந்த மக்களுக்கு 10 நாள்களுக்குத் தேவையான அரிசி, காய்கறி, மளிகைச் சாமான்கள் உள்ளிட்ட உணவு பொருள்களை வழங்கியிருக்கிறார். அதோடு, பசியில் முனகிக் கொண்டிருந்த, அவர்கள் வளர்த்து வந்த பிராணிகளுக்கும் உணவுக்கு ஏற்பாடு செய்து, அந்த எளிய மக்களின் கண்களில் படிந்து கிடந்த கோரப்பசியைப் போக்கி, அவர்களை நெகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்திருக்கிறார்.

குளித்தலைப் போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திகேயனிடம் பேசினோம்.

" 'அஞ்சு நாளா சாப்பிடலண்ணே'னு அங்குள்ள சிறுவர்கள் சொன்னதும், கலங்கிப்போயிட்டேன். உடனே, குளித்தலை லயன்ஸ் கிளப் மூலமா, அவர்களுக்கு உதவிகள் கிடைக்கச் செய்தேன். மதுரை ஜீவா சர்க்கஸ் என்ற பெயரில் அவர்கள் ஊர் ஊராகப் போய் சர்க்கஸ் நடத்துபவர்கள். அப்படிக் கரூர் மாவட்டத்தில் ஊர் ஊராகப் போய் சர்க்கஸ் நடத்தியிருக்கிறார்கள். கடந்த மாதம் 24 -ம் தேதி, தாலியம்பட்டியில் போய் மாட்டிக்கிட்டாங்க. ஆரம்பத்தில், கையில் இருந்ததை வைத்துச் சமாளித்து வந்தவர்களால், கடந்த ஐந்து நாள்களாகச் சாப்பாட்டுக்கு வழிபண்ண முடியலை. பச்சைத் தண்ணியைக் குடித்து நாள்களைக் கடத்தி வந்திருக்கிறார்கள்.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

ஆனால், அங்கிருந்த சிறுவர்கள் பசிதாங்காமல் தவித்திருக்கிறார்கள். நண்பர் ஒருவர் மூலமா அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவர்களுக்கு உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்தோம். அந்த 10 சிறுவர்களும் என் கைகளைப் பிடித்து, 'எங்களுக்கு சாப்பாடு கொடுத்ததற்கு நன்றிண்ணே'னு சொன்னதும், நெகிழ்ந்து போயிட்டேன். அவர்களுக்கு உதவ முடிந்ததைப் பாக்கியமாகக் கருதுகிறேன். நாங்க உதவுனதைப் பார்த்ததும், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலரும், அந்த சர்க்கஸ் நடத்துபவர்களுக்கு உதவியிருக்காங்க. 'எந்த உதவி தேவைப்பட்டாலும், உடனே கூப்பிடுங்க'னு என்னோட போன் நம்பரை அந்த சர்க்கஸ் நடத்துபவர்களிடம் கொடுத்திட்டு வந்திருக்கிறேன். தொடர்ந்து அவர்களுக்கு உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்வேன்" என்றார், நெகிழ்ச்சியான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு