Election bannerElection banner
Published:Updated:

கரூர்: `இந்தப் பதக்கம் உங்களால்தான் கிடைத்தது!' - இளைஞர்களை நெகிழ வைத்த டிராஃபிக் இன்ஸ்பெக்டர்

இளைஞருக்கு பதக்கம் அணிவிக்கும் கார்த்திகேயன்
இளைஞருக்கு பதக்கம் அணிவிக்கும் கார்த்திகேயன் ( நா.ராஜமுருகன் )

`இது எனக்கானது. என்னால் மட்டும் இது கிடைத்தது' என்று நான் இருந்துவிட்டால், அது சுயநலமாகிவிடும். இதற்கு உண்மையில் தகுதியானவர்கள், இந்தப் பாராட்டுக்கு உரியவர்கள் இந்த 40 இளைஞர்களும்தான்.’

`கொரோனா தடுப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, ஆட்சியர் அளித்த இந்தப் பதக்கமும் பாராட்டுச்சான்றிதழும் உங்களால்தான் கிடைத்தது. உண்மையில் இது உங்களுக்கானதுதான்' என்று கூறி தனக்கு கிடைத்த பதக்கத்தை இளைஞர்களுக்கு அணிவித்து, அவர்களை நெகிழ வைத்திருக்கிறார், குளித்தலை போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன்.

இளைஞருக்கு பதக்கம் அணிவிக்கும் கார்த்திகேயன்
இளைஞருக்கு பதக்கம் அணிவிக்கும் கார்த்திகேயன்
நா.ராஜமுருகன்

குளித்தலை போக்குவரத்துக் காவல் நிலைய ஆய்வாளராக கார்த்திகேயன் பொறுப்பேற்றதில் இருந்து, பல்வேறு முன்முயற்சிகளை செய்துவருகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களை கலைநிகழ்ச்சிகள் செய்ய வைத்து, டிராஃபிக் விதிமுறைகள், மது அருந்திவிட்டு வாகனங்கள் இயக்குவதால் ஏற்படும் தீமைகள், ஹெல்மெட் அணிவதின் அவசியம் என்று பல விசயங்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கரூர்: `நம்ம ஆத்தை நாமதானே சுத்தப்படுத்தணும்!' - அமராவதி ஆற்றில் களமிறங்கிய இளைஞர்கள்

பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்க, தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட 'காவலன் செயலி'யை, குளித்தலைப் பகுதியில் உள்ள 3,000 பெண்களைத் தங்களது போன்களில் டவுன்லோடு செய்யவைத்தார்.

கார்த்திகேயனோடு களப்பணியில் இளைஞர்கள்
கார்த்திகேயனோடு களப்பணியில் இளைஞர்கள்
நா.ராஜமுருகன்

இந்தநிலையில், கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதையும் மீறி, வெளியில் வருபவர்களை கனிவாகப் பேசி, வீட்டுக்கு அனுப்பி வைத்தார். குளித்தலை பகுதியில் உள்ள 40 தன்னார்வ இளைஞர்களை இணைத்துக்கொண்டு, அவர்களின் உதவியோடு கொரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக செய்துவந்தார். ஸ்பான்ஸர்கள் பிடித்து, இதுவரை 4,000 பேர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கியிருக்கிறார்.

அதோடு, 2,000 பேர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கியிருக்கிறார். கொரோனா பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களிடம் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதேபோல், கொரோனா ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாக நின்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள், காய்கறி, உணவு என்று வழங்கி, அவர்களை அரவணைத்தார். அய்யர்மலையில் உணவின்றி தவித்த நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு தினமும் வாழைப்பழங்களை உணவாகக் கொடுத்தார். குளித்தலையில் உள்ள 24 வார்டுகளிலும் பொதுஇடங்களில் கூடும் மக்களை, கொரோனா பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உறுதிமொழியை எடுக்க வைத்து, குளித்தலையில் கொரோனா நோய் பரவுவதைத் தடுத்தார்.

கார்த்திகேயனை கௌரவிக்கும் ஆட்சியர்
கார்த்திகேயனை கௌரவிக்கும் ஆட்சியர்
நா.ராஜமுருகன்

இப்படி கொரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய கார்த்திகேயனுக்கு, 74 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பதக்கமும் சான்றிதழும் வழங்கி கௌரவித்தார். தனக்கு கிடைத்த அந்த பதக்கத்தைதான், தன்னோடு இணைந்து களப்பணியாற்றிய 40 இளைஞர்களையும் அழைத்து, எல்லோரது கழுத்திலும் தனித்தனியாக அணிவித்து, 'இந்தப் பதக்கம் உங்களால்தான் கிடைத்தது' என்று கூறி, அந்த இளைஞர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்து, அவர்களை நெகிழ வைத்திருக்கிறார்.

இதுகுறித்து, குளித்தலை போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயனிடம், 'வாழ்த்துகள்' சொல்லி பேசினோம்.

``குளித்தலை பகுதி மக்களிடம் தொடர்ந்து டிராஃபிக் விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இப்போது கொரோனா வந்ததால், அதுபற்றிய விழிப்புணர்வை குளித்தலை நகரம் மட்டுமன்றி, சுற்றியுள்ள கிராம மக்களிடமும் ஏற்படுத்தி வருகிறோம். அதற்கு, எனக்கு பேக்போனாக இருந்து உதவியது, இந்த 40 இளைஞர்களும்தான். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், இந்த உபகாரத்தை செய்தார்கள். `நம்ம மக்களுக்கு எந்தக் கெடுதலும் வந்துவிடக் கூடாது' என்று ஒவ்வொரு இளைஞரும் உள்ளுக்குள் பதைப்போடு, இந்தக் காரியத்தில் என்னோடு கைகோத்து செயல்பட்டார்கள். அதனால், நிறைய நல்ல விசயங்களை மக்களுக்கு செய்யமுடிந்தது.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்
நா.ராஜமுருகன்

அதற்கு அங்கீகாரமாக, 74 வது சுதந்திர தின கொண்டாத்தின்போது, எனக்கு மாவட்ட ஆட்சியர் கையால் பதக்கமும் சான்றிதழும் கிடைத்தது. 'இது எனக்கானது. என்னால் மட்டும் இது கிடைத்தது' என்று நான் இருந்துவிட்டால், அது பொல்லாத சுயநலமாகிவிடும். இதற்கு உண்மையில் தகுதியானவர்கள், இந்தப் பாராட்டுக்கு உரியவர்கள் இந்த 40 இளைஞர்களும்தான். அதனால், அவர்களை கௌரவிக்கும் விதமாக, அவர்கள் ஒவ்வொருவரின் கழுத்திலும் இந்தப் பதக்கத்தை அணிவித்து, அவர்களை வாழ்த்தினேன். இதுபோல் துடிப்பான, செயலில் அர்ப்பணிப்பான இளைஞர்கள் கிடைத்தால், எதையும் சாதிக்கலாம் சார்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு