Published:Updated:

`நானே சமைக்கிறேன்; என் கையாலே பரிமாறுகிறேன்!' - ஆதரவற்றவர்களுக்கு 17 -வது நாளாக உணவு வழங்கும் இளைஞர்

சாதம் வடிக்கும் சுபேதார்
சாதம் வடிக்கும் சுபேதார் ( நா.ராஜமுருகன் )

இன்றோடு 17-வது நாள் கடந்துட்டு. இன்னும் எத்தனை நாள் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தாலும், என் தலையை அடமானம் வைத்தாவது எளியவர்களுக்கு உணவு வழங்கிக்கிட்டே இருப்பேன்

கொரோனா என்ற கொடூர வைரஸ் மக்களை பீதியில் தள்ளினாலும், இன்னொருபக்கம் அதே மக்கள் மனதில் இருக்கும் மனிதாபிமானத்தை வெளியில் கொண்டுவந்திருக்கிறது. குளித்தலையைச் சேர்ந்த ஓர் இளைஞர், கடன் வாங்கியும், நண்பர்களிடம் உதவி கேட்டும் உணவு தயாரித்து, ஆதரவற்றவர்கள், தூய்மைப் பணி செய்பவர்கள், காவல்துறையினருக்கு 17-வது நாளாக தொடர்ந்து வழங்கி, நெகிழ வைத்துக்கொண்டிருக்கிறார்.

உணவு சமைக்கும் சுபேதார்
உணவு சமைக்கும் சுபேதார்
நா.ராஜமுருகன்
`எங்க நிலைமையை யாருகிட்ட சொல்லி அழுறது?’ - கலங்கிநின்ற பார்வையற்ற தம்பதி; உதவிய கலெக்டர்!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், இன்று உலகையே புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. இந்திய அரசும் அதைத் தடுத்து, கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பாக கருதப்படும் பரவும் சங்கிலியை அறுக்க, 21 நாள்கள் தொடர் ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டும் பொதுமக்கள் வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஊரடங்கு உத்தரவால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதைவிட, வீடு வாசல், அரவணைக்க உறவுகள் இல்லாத ஆதரவற்றவர்களும் சாலையோர மனிதர்களும் உணவு கிடைக்காமல் அல்லாடிப் போகிறார்கள்.

உணவு கொடுக்கும் சுபேதார்
உணவு கொடுக்கும் சுபேதார்
நா.ராஜமுருகன்

அப்படிப்பட்ட மனிதர்களுக்கு தன்னார்வலர்களும், இரக்க மனம் படைத்த பலரும் உணவு சமைத்து, தக்க பாதுகாப்போடு வழங்கி, அந்த எளிய மனிதர்களுக்கு உதவிபுரிந்து வருகிறார்கள். அப்படி, கரூர் மாவட்டம், குளித்தலைப் பகுதியில் உள்ள ஆதரவற்றவர்களுக்கும், மக்களுக்காக வெளியில் பணிபுரிந்துகொண்டிருக்கும் காவல்துறை மற்றும் தூய்மைப் பணி செய்பவர்களுக்கும் உணவு சமைத்து வழங்கிக்கொண்டிருக்கிறார், சுபேதார் என்ற இளைஞர். அவரே உணவு சமைப்பது, பார்சல் கட்டுவது, எளியவர்களுக்கு வழங்குவது ஒவ்வொரு நாளையும் ஆதரவற்றவர்களுக்காகவே செலவிட்டுக் கொண்டிருக்கிறார். இன்றோடு 17-வது நாளாக அவர் உணவு வழங்கி, எளிய மக்களின் பசியைப் போக்கிக்கொண்டிருக்கிறார்.

`வாழ்த்துகள்' சொல்லி, சுபேதாரிடம் பேசினோம்.

``நான் குளித்தலையில் சின்னதா மொபைல் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்திட்டு வர்றேன். பெருசா வருமானம் இல்லை. ஆனா, இருக்கிற வருமானத்துல மத்தவங்களுக்கு கொஞ்சம் உதவணும்னு நினைப்பேன். அதுபோலவே, செயல்பட்டுக்கிட்டு வருகிறேன். இந்த நிலையில்தான், கொரோனோ வைரஸ் பாதிப்பு அதிகமாகி, கடந்த மாதம் 25-ம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வசதிபடைத்தவர்களுக்கு பிரச்னை இல்லை.

சாதம் வடிக்கும் சுபேதார்
சாதம் வடிக்கும் சுபேதார்
நா.ராஜமுருகன்

ஆனால், வீடின்றி, உறவுகள் அரவணைப்பின்றி தெருவோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களின் நிலை மோசமா இருக்குமேனு நினைச்சேன். உடனே, அவர்களுக்கு உணவு வழங்க முடிவெடுத்தேன். கையில் அப்போது காசு இல்லை. நண்பர் ஒருவர்கிட்ட, ரூ 5,000 கடன் வாங்கி, கடந்த 25-ம் தேதி உணவு சமைத்தேன். தொடர்ந்து 17-வது நாளாக உணவு கொடுத்துக்கிட்டு இருக்கிறேன்.

குளித்தலையில் வசிக்கும் ஆதரவற்றவர்கள், காவல்துறை, தூய்மைப் பணி செய்பவர்கள்னு 300 பேர்களுக்கு தினமும் உணவு கொடுக்கிறேன். என்னோட முயற்சியைப் பார்த்துட்டு, காவல்துறையைச் சேர்ந்தவர்கள் இதுவரை எட்டு மூட்டைகள் அரிசி கொடுத்திருக்காங்க. வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ரூ.10,000-க்கு மளிகைச் சாமான்கள் வாங்கித் தந்திருக்காங்க. அதேபோல், நண்பர்கள் பலரும் உதவுறாங்க. நானே உணவு சமைப்பேன். அதற்கு, என் அம்மா, அத்தை, மனைவினு வீட்டில் உள்ளவங்க உதவி பண்ணுவாங்க. என்னோடு 5 பேர் உணவு வழங்க வர்றாங்க. தினமும் காலையில் 60 ஆதவற்றவர்களுக்கு உணவு கொடுப்போம்.

உணவு கொடுக்கும் சுபேதார்
உணவு கொடுக்கும் சுபேதார்
நா.ராஜமுருகன்

மதியம் ஆதரவற்றவர்கள், காவல்துறை, தூய்மைப் பணி செய்பவர்கள்னு 300 பேர்களுக்கு சாப்பாடு, இரவு பட்ஜெட் பிரச்னையால 400 பேர்களுக்கு பிஸ்கட்டும், டீயும் மட்டும் வழங்குகிறோம். இன்றோடு 17-வது நாள் கடந்துட்டு. இன்னும் எத்தனை நாள் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தாலும், எப்படியாவது எளியவர்களுக்கு உணவு வழங்கிக்கிட்டே இருப்பேன்" என்றார், உணர்ச்சி மேலிட!

அடுத்த கட்டுரைக்கு