Published:Updated:

கரூர்: `நீயாவது இந்த பொதுப்பாதையை திறக்க வை..!’ - சுடுகாட்டில் மனு அளித்த குளித்தலை இளைஞர்கள்

அடைக்கப்பட்ட புறவழிச்சாலை
அடைக்கப்பட்ட புறவழிச்சாலை ( நா.ராஜமுருகன் )

குளித்தலைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் முத்துச்செல்வன் என்பவர் தலைமையில் திரண்டு, ஒரு சமாதியில் மனுவைக் கொடுத்து, 'நீயாவது அரசியல்வாதிகள், அதிகாரிகள் கனவில் சென்று அறிவுரை கூறி, இந்தப் பொதுப்பாதையை திறக்க வை' என்று கூறி, அதிரவைத்திருக்கிறார்கள்.

`தங்கள் பகுதியில் மூடப்பட்ட பொதுப்பாதையைத் திறக்க வழிவகை செய்யாத அரசியல்வாதிகள், அதிகாரிகள் கனவில் சென்று நீயாவது அந்தப் பாதையைத் திறக்கச் சொல்' என்று இறந்த ஒருவரின் சமாதியில் மனு கொடுத்து, குளித்தலை இளைஞர்கள் விநோதமான போராட்டத்தை நடத்தி அதிரவைத்திருக்கிறார்கள்.

கல்லறையில் மனு கொடுக்கும் இளைஞர்கள்
கல்லறையில் மனு கொடுக்கும் இளைஞர்கள்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணாநகர் புறவழிச்சாலையை ஐந்து வருடங்களுக்கு முன்பு தனிநபர் ஒருவர் சாலைக்கு நடுவே மண்ணைக் கொட்டி, மரங்களை நட்டு மூடிவிட்டதாகச் சொல்கிறார்கள். அதைத் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குளித்தலைப் பகுதி மக்கள் கடந்த ஐந்து வருடங்களாகப் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகளைச் சந்தித்து பலமுறை மனு கொடுத்துப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை.

புறவழிச்சாலை
புறவழிச்சாலை
நா.ராஜமுருகன்

இதனால், குளித்தலைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் முத்துச்செல்வன் என்பவர் தலைமையில் திரண்டு, ஒரு சமாதியில் மனுவைக் கொடுத்து, `நீயாவது அரசியல்வாதிகள், அதிகாரிகள் கனவில் சென்று அறிவுரை கூறி, இந்தப் பொதுபாதையை திறக்க வை' என்று கூறி, அதிரவைத்திருக்கிறார்கள்.

சுடுகாட்டில் இளைஞர்கள் வைத்த அந்த மனுவில், `பெறுநர்: உயர்திரு. சுடுகாட்டுப் பிணம் அவர்கள், சுடுகாடு, குளித்தலை' என்று ஆரம்பிக்கிறது. தொடர்ந்து, `ஐயா வணக்கம். குளித்தலை நகரத்தில், குளித்தலைப் பகுதி மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்திவந்த, குளித்தலை- அண்ணாநகர் புறவழிச்சாலை மூடப்பட்டு, ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் பாதையை தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்திவந்தார்கள்.

அடைக்கப்பட்ட புறவழிச்சாலை
அடைக்கப்பட்ட புறவழிச்சாலை
நா.ராஜமுருகன்

உழவர் சந்தைக்கும், வாரச்சந்தைக்கும், ரயில் நிலையம், நூலகம், பள்ளிக்கூடம், மற்றும் கிராமங்களுக்குச் செல்லும் மினி பஸ் வழித்தடம் என குளித்தலை மக்களின் அத்தியாவசிய தேவைக்கான இந்தச் சாலை மூடப்பட்டதால், மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒதுக்கிய அமைச்சர்; பா.ஜ.க-வில் இணைந்த அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி!- கலகலக்கும் கரூர் பாலிடிக்ஸ்

மூடப்பட்ட இந்தச் சாலையை திறந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என கடந்த ஐந்து ஆண்டுகளாக, குளித்தலை நகராட்சி ஆணையர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், சார் ஆட்சியர், மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர், முதல்வர் என அனைவருக்கும் மனுக்கள் கொடுத்திருக்கிறோம். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம் உட்பட பலகட்டப் போராட்டங்களை நடத்திய பிறகும், பல அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர் இயக்கங்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் போராடிய பிறகும், மூடப்பட்ட இந்த சாலையை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு க்கொண்டு வர தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சமாதியில் மனு கொடுக்கும் இளைஞர்கள்
சமாதியில் மனு கொடுக்கும் இளைஞர்கள்
நா.ராஜமுருகன்

3-3-2020 அன்று, குளித்தலையில் மூடப்பட்ட சாலையை மீட்க இளைஞர் அமைப்புகள், சமூக ஆர்வலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களின் பிரதிநிதிகளாக அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டு, `30 நாள்களில் சாலை திறக்கப்படும்' எனத் தெரிவித்தனர்.

ஆனால், அதன் பிறகும் சாலை திறக்கப்படவில்லை. பிறகு, போராட்டக்குழு இளைஞர்கள் போக்குவரத்துத்துறை அமைச்சரை கரூரில் நேரில் சந்தித்து, மனு கொடுத்துப் பேசியபோது, `ஒரு மாதத்தில் மூடப்பட்ட சாலை திறக்கப்படும்' என உறுதியளித்தார். கடந்த மாதம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மூடப்பட்ட இந்த சாலையை நேரில் வந்து ஆய்வு செய்த பிறகும், மூடப்பட்ட இந்த சாலையைத் திறக்க எந்த நடவடிக்கையும் இல்லை.

கல்லறையில் மனு கொடுக்கும் இளைஞர்கள்
கல்லறையில் மனு கொடுக்கும் இளைஞர்கள்
நா.ராஜமுருகன்

எனவே, சுடுகாட்டுப் பிணமாகிய ஐயா அவர்கள் இவர்களின் கனவில் சென்றாவது, இந்த மூடப்பட்ட சாலையால் மக்கள் படும் இன்னல்களை எடுத்துக் கூறி பாதையைத் திறக்க நீங்களாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுப்பாதையைத் திறக்க வலியுறுத்தி இளைஞர்கள் சமாதிக்கு மனு கொடுத்திருக்கும் சம்பவம் குளித்தலைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து, முத்துச்செல்வனிடம் பேசினோம்.

``முக்கியமான சாலையாக அந்தப் புறவழிச்சாலை இருந்தது. கடந்த 50 வருடங்களாக இந்தச் சாலையை மக்கள் பயன்படுத்தி வந்தாங்க. குளித்தலையைச் சுத்தியுள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த விவசாயப் பொருள்களை உழவர் சந்தையிலும், வாரச் சந்தையிலும் கொண்டு வந்து விற்பனை செய்ய இந்தப் பாதையைப் பயன்படுத்திவந்தாங்க. ஆனா, கடந்த அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, அந்தச் சாலையில் குறிப்பிட்ட இடத்தில், 'என் இடம்'னு சொல்லி தனிநபர் ஒருவர், அந்தப் பாதையை மறித்தார். இதனால், மக்கள் சுத்தி வர வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்புறம் விசாரித்த பிறகுதான், 50 வருடங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் சாலை அமைப்பதற்காக அந்த நபரின் இடத்தை வாங்கியிருக்காங்க. ஆனா, அதுக்குரிய தொகையைக் கொடுக்காமல் இழுத்தடிச்சிருக்காங்க. அதனால், அவர் தனது இடத்தை சாலையின் நடுவே அடைச்சுட்டார். அதோடு, தனது இடத்துக்குரிய நஷ்டஈட்டை பெற்றுத் தரும்படி கோர்ட்டில் கேஸ் போட்டார். கோர்ட் உத்தரவுபடி, நகராட்சி நிர்வாகம் அந்த நபருக்கு உரிய நஷ்டஈட்டைக் கொடுக்கவும் இல்லை, கோர்ட்டில் ஆஜராகவும் இல்லை. அதனால், நகராட்சி நிர்வாகத்திடம், `அந்தப் பாதையை பழையபடி திறக்க நடவடிக்கை எடுங்க'னு மனு கொடுத்தோம்.

முத்துச்செல்வன்
முத்துச்செல்வன்
நா.ராஜமுருகன்

நகராட்சி ஆணையரும், `அந்த நபருக்கு உரிய தொகையைக் கொடுத்து, அந்தப் பாதையை மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவோம்'னு வாக்குறுதி கொடுத்தார். ஆனா, அப்படிச் செய்யவில்லை. அதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டாங்க. அதனால்தான், இந்தப் பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்காத அதிகாரிங்க, அரசியல்வாதிகளுக்கு எதிராக இப்படிச் சமாதியில் மனு கொடுத்து, வித்தியாசமான போராட்டம் நடத்தியிருக்கோம். அப்படியும் நடவடிக்கை இல்லைன்னா, எங்களது போராட்டம் புதுப் புது வடிவங்களில் தொடர்ந்து நடைபெறும்" என்றார்.

இது குறித்து, குளித்தலை நகராட்சி தரப்பில் பேசினோம். ``அந்தப் பாதையை மீட்கத் தேவையான நிதி இப்போது நகராட்சி வசம் இல்லை. இருந்தாலும், மக்களின் பயன்பாட்டுக்குத் தேவையான அந்த சாலையிலுள்ள தடுப்பை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுப்போம். விரைவில் மக்கள் அந்தப் பாதையில் தடையில்லாமல் பயணிக்கும் நிலை வரும்" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு