Published:Updated:

நடுக்கடலில் இருக்கும்போது புயல் எச்சரிக்கை..!- பிறமாநில துறைமுகங்களில் தஞ்சம்அடைந்த குமரி மீனவர்கள்

திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு படகு நடுக்கடலில் நின்றுவிட்டது. இதனால் மீனவர்கள் பதற்றமானார்கள்.

விசைப்படகு
விசைப்படகு

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்தும், கேரள மாநிலம் கொச்சி, முனம்பம் ஆகிய மீன்பிடித் துறைமுகத்திலிருந்தும் ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். வரும் 28-ம் தேதி வரை புயல் எச்சரிக்கை விடப்பட்டதால் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் அருகிலுள்ள துறைமுகங்களில் கரைசேர அரசு அறிவுறுத்தியது.

விசைப்படகுகள்
விசைப்படகுகள்

இதற்கிடையில் கோவா மாநில ஆழ்கடல் பகுதியில் 'எல்ஷடாய்- IND/TN 15/MM-4424 மற்றும் ஸ்டார் ஆப் தி சி IND/TN 15/MM- 5557 என்ற இரண்டு விசைப்படகுகளில் சுமார் 32 மீனவர்கள் புயலுக்கு பயந்து கோவா கடற்கரையை நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். கடந்த இரண்டு நாட்களாக இரண்டு விசைப்படகுகளும் தொடர்பில் இல்லை என்றும் தகவல் வந்தது.

மேலும் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த மாதம் 18-ம் தேதி கேரள மாநிலம் கொச்சி மீன்பிடி துறைமுகத்திலிருந்து சூசைதாஸ் என்பவருக்கு சொந்தமான மேரிமாதா-1 என்ற விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்கள். மீனவர்கள் கோவா மாநில ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த படகு கரை திரும்பும்போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு படகு நடுக்கடலில் நின்றுவிட்டது. இதனால் மீனவர்கள் பதற்றமானார்கள். பின்னர் மீனவர்கள் கடும் முயற்சியால் படகை சீரமைத்து மகாராஷ்டிர மாநிலம் தேவ்காடு துறைமுகத்தில் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளனர்.

கரைசேரும் மீனவர்களின் விசைப்படகு
கரைசேரும் மீனவர்களின் விசைப்படகு

கோவா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரள துறைமுகங்களில் கரை சேர்ந்துள்ள குமரி மாவட்ட மீனவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை செய்ய வேண்டும் என மீனவர் நல அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள. மேலும் கரை திரும்ப முடியாமல் மீனவர்கள் யாராவது உள்ளார்களா எனவும் மீனவ அமைப்புகள் விசாரித்துவருகின்றன.