Published:Updated:

சுய ஊரடங்கு... கூலித் தொழிலாளர்களுக்கு மளிகைப் பொருள்கள் - நெகிழ வைக்கும் கும்பகோணம்!

மளிகைப் பொருள்கள் - மனிதநேய உதவிகள்
மளிகைப் பொருள்கள் - மனிதநேய உதவிகள்

வயது முதிர்ந்த மூதாட்டி ஒருத்தர், இரண்டு வாழைப்பூவையும், ஒரு தேங்காயையும் வச்சிக்கிட்டு, இதை யாராவது வாங்க வர மாட்டாங்களானு, இரவு வரைக்கும் ரோட்டுலயே காத்துக்கிடந்தாங்க. மனசு பாராமாயிடுச்சி.

கொரோனா ஊரடங்கால், சாலையோர சிறு வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள், சுமைத் தூக்கும் பணியாளர்கள் உள்ளிட்ட ஏழை எளிய மக்கள் தங்களது வருவாயை இழந்து தவிக்கிறார்கள். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இதுபோல் சிரமத்தில் தவிப்பர்வகளுக்கு, இங்குள்ள மனிதநேயர்கள் சிலர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்கள். கும்பகோணம் மகாமக அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் வழங்கியுள்ள இந்த மனிதநேய உதவிகள் இப்பகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல்... சீனா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டிலும் சிலருக்கு இதற்கான அறிகுகுறிகள் தென்பட தொடங்கியுள்ளது. இது பரவாமல் தடுக்க, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற முன்னெச்சரிக்கையால் பல்வேறு வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் கடந்த சில நாள்களாகவே தஞ்சை மாவட்டத்தில் மக்கள் போக்குவரத்து குறைந்தது. இதனால் கூலித் தொழிலாளர்கள், சாலையோர சிறு வியபாரிகள், துமை தூக்கும் பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள்.

இந்நிலையில் இன்று சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், இவர்கள் மேலும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவானது. இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக, மூன்று நாள்களுக்கு உரிய அரிசி, துவரம் பருப்பு, உளுந்து, கடுகு, மிளகு, ஜீரகம், வெங்காயம் உள்ளிட்ட 10 வகையான மளிகைப் பொருள்களை கொண்ட பைகளை வழங்கி நெகிழ வைத்துள்ளார்கள், கும்பகோணம் மகாமக அறக்கட்டளை அமைப்பை சேர்ந்தவர்கள்.

கும்பகோணம்
கும்பகோணம்

இதுகுறித்து இந்த அமைப்பின் செயலாளர் சத்தியநாராயணனிடம் நாம் பேசியபோது, ``இதுமாதிரியான அடித்தட்டு மக்களோட நிலைமையை நினைச்சாதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. கொரோனா பிரச்னையால, கடந்த நாலஞ்சு நாள்களாகவே இவங்களுக்கு எல்லாம் வருமானம் போயிடுச்சி. இதுமாதிரியானவங்களை தேடிப் போயி 100 பேருக்கு மளிகைப் பொருள்களை கொடுத்தோம். வயது முதிர்ந்த மூதாட்டி ஒருத்தர், இரண்டு வாழைப்பூவையும், ஒரு தேங்காயையும் வச்சிக்கிட்டு, இதை யாராவது வாங்க வர மாட்டாங்களானு, காலையில இருந்து இரவு வரைக்கும் ரோட்டுலயே காத்துக்கிடந்தாங்க. மனசு பாராமாயிடுச்சி.

நூறு ரூபாயாவது கிடைச்சாதான் அவங்களோட ஒரு நாள் வாழ்க்கை பட்டினி இல்லாமல் போகும். ஊரடங்கு முடிஞ்ச பிறகும் கூட என்ன நிலைமைனு தெரியலை. அதனால்தான் மூணு நாள்களுக்குத் தேவையான பொருள்களைக் கொடுத்தோம். நாங்க செஞ்சது ரொம்ப சின்ன உதவிதான். இருந்தாலும்கூட எங்களுக்கு இதுல ஒரு சின்ன ஆத்ம திருப்தி” என்று தெரிவித்தார். இதுபோலவே சுவாமிமலை கோணக்கரை விவேகானந்த சேவா சமிதி சார்பில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற பகுதியில் உள்ள மனிதநேயர்களும் அங்குள்ள எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன் வர வேண்டும் என்பது இவர்களது எதிர்பார்ப்பு.

அடுத்த கட்டுரைக்கு