Published:Updated:

வீட்டுக்கு வீடு கொரோனா நிவாரணம்... சொந்த ஊரை நெகிழவைத்த சகோதரர்கள்!

நிவாரணம்
நிவாரணம்

கொரோனா ஊரடங்கால் வாடும் சொந்த கிராம மக்களுக்கு, வீடுதோறும் அரிசி மற்றும் மளிகைப்பொருள்களை வழங்கி மகிழவைத்துள்ளனர் சகோதரர்கள் இருவர்.

கும்பகோணம் அருகேயுள்ள திப்பிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கார்த்திகேயன் - ராம்பிரசாத் சகோதர்கள். இவர்கள், திருவாரூரை தலைமையிடமாகக் கொண்டு ஸ்ரீ நாராயணி நிதி நிறுவனத்தை நடத்திவருகிறார்கள்.

அதுபோல தங்கள் பெற்றோர் பாமா - சுப்பிரமணியம் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். கஜா புயலின்போது, நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கிய இவர்கள், ரூ.10 லட்சத்துக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்கள். கோயில் திருப்பணி, பள்ளிக் கட்டடம் எனப் பல வகையில் நற்பணிகள் செய்துவருகிறார்கள்.

கார்த்திகேயன் - ராம்பிரசாத் சகோதர்கள்
கார்த்திகேயன் - ராம்பிரசாத் சகோதர்கள்

அதன் தொடர்ச்சியாக, தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறப்பு வார்டு அமைக்க ரூ.5 லட்சம் மதிப்பில் படுக்கை வசதிகள் செய்து தந்ததோடு, திருவாரூர் நகராட்சிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் கொரோனா தடுப்புப் பொருள்களை வழங்கினார்கள். அத்துடன், வருமானமின்றித் தவித்த சிவாச்சாரியார்கள், வேத விற்பன்னர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், ஏழை-எளிய மக்கள் என ஆயிரக்கணக்கானோர்க்கு தலா ரூ.1,000 வீதம் தந்துள்ளார்கள்.

அந்த வரிசையில், தாங்கள் பிறந்த ஊரான திப்பிராஜபுரத்தில் வசிக்கும் 1,200 குடும்ப அட்டைதாரர்களுக்கும், குடும்ப அட்டை இல்லாத 300 குடும்பங்களுக்கும் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப்பொருள்களை நேற்று வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு, பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், கும்பகோணம் ஒன்றியத் தலைவர் அசோக்குமார், தொழிலதிபர் ராயா.கோவிந்தராஜன் தலைமை வகித்தனர்.

ஸ்ரீ நாராயணி நிதி நிறுவனம்
ஸ்ரீ நாராயணி நிதி நிறுவனம்

இதுபற்றி ஸ்ரீ நாராயணி நிதி நிறுவன அதிபர் கார்த்திகேயனிடம் பேசியபோது, "பிறந்த ஊரில் ஊரடங்கால் மக்கள் கஷ்டப்படும் இந்த இக்கட்டான நேரத்தில், எங்களால் இயன்ற சிறு உதவியைச் செய்துள்ளோம். எல்லாவற்றிற்கும் காஞ்சி மகா பெரியவா அனுக்கிரகம்தான் காரணம். இது தொடரும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு