Published:Updated:

`37 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட நடராஜர் சிலை!' - கும்பகோணம் நீதிமன்றத்தில் மலர்தூவி வரவேற்பு

ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து மீட்டுக் கொண்டுவரப்பட்ட கல்லிடைக்குறிச்சி கோயிலுக்குரிய ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Natarajar Statue
Natarajar Statue

ஆஸ்திரேலியாவிருந்து மீட்டுக் கொண்டுவரப்பட்ட கல்லிடைக்குறிச்சி கோயில் ஐம்பொன் நடராஜர் சிலை இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் நடராஜர் சிலைக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதன் பிறகு நீதிபதி நடராஜர் சிலையை கல்லிடைக்குறிச்சி கோயிலில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

Natarajar Statue
Natarajar Statue
`முடிவுக்கு வந்தது 37 ஆண்டுகால தேடுதல்!' - சிட்னியில் இருந்து கல்லிடைக்குறிச்சி வரும் நடராஜர் சிலை

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட சுமார் 700 ஆண்டுகள் பழைமையான குலசேகரமுடையான் சமேத அறம் வளர்த்தநாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த ஐம்பொன்னால் ஆன நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், விநாயகர் உள்ளிட்ட ஐந்து சிலைகள் கடந்த 1982-ஆம் ஆண்டு காணாமல் போனது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் இந்த வழக்கு கடந்த 1984-ம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டது.

இந்தநிலையில் சிலைக்கடத்தல் வழக்குகள் குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவை நியமித்தது. இந்தக் குழு பல்வேறு சிலைக்கடத்தல் வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மேலும், தமிழகத்திலிருந்து மாயமாகி வெளிநாட்டில் இருந்த சிலைகள் மற்றும் பல பகுதிகளில் இருந்த பழைமையான சிலைகளை மீட்டுள்ளது. இதேபோல் இந்தச் சிறப்பு விசாரணைக் குழு கல்லிடைக்குறிச்சியிலிருந்து மாயமான சிலைகள் குறித்த வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. விசாரணையில் காணாமல் போன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது.

Natarajar Statue
Natarajar Statue

இதையடுத்து தொல்லியல்துறை உதவியுடன் அந்த நடராஜர் சிலை கல்லிடைக்குறிச்சியிலிருந்து காணாமல்போன சிலைதான் என்பது ஆஸ்திரேலிய அரசிடம் நிரூபிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலிய அரசும், அருங்காட்சியகத்தினரும் கடந்த 11-ம் தேதி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவிடம் டெல்லியில் நடராஜர் சிலையை ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து அந்த நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவிலிருந்து டெல்லி வரை விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ரயில் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து நடராஜர் சிலை இன்று சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டது. கூடுதல் ஏடிஎஸ்பிக்கள் ராஜாராம், மலைச்சாமி மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சிலையைக் கொண்டு வந்தனர்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சிவனடியார்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நடராஜை சிலைக்கு மலர்தூவி வரவேற்பு கொடுத்தனர். வாத்திய இசைக்கருவிகளும் இசைக்கப்பட்டன. பின்னர், வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தின் நீதிபதி முன்னிலையில் நடராஜர் சிலை சமர்பிக்கப்பட்டது. அப்போது, நீதிமன்ற ஊழியர்கள் சிலையின் எடை, உயரம், அகலம் ஆகியவற்றை அளவீடு செய்து குறிப்பு எடுத்துக் கொண்டனர். நீதிமன்றத்தில் இருந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் நடராஜர் சிலையை ஆர்வமுடன் பார்த்து வணங்கினர்.

Natarajar Statue
Natarajar Statue

இதற்கிடையில் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையான் கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், குருக்கள் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்தனர். அவர்கள், `ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட கோயில் சிலையை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, `மீட்கப்பட்ட சிலையை கோயிலில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். அங்கு வைக்கப்படும் சிலைக்கு காவல் துறை சார்பில் போதிய பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்' என உத்தரவிட்டார்.

அச்சு முதல் ஆனைமுகத்தான் வரை.! குமரியில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் சிறப்பு புகைப்பட தொகுப்பு

இதையடுத்து நடராஜர் சிலையை கும்பகோணத்திலிருந்து கல்லிடைக்குறிச்சிக்கு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பலத்த பாதுகாப்போடு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து ஏடிஎஸ்பி ராஜாராம் கூறுகையில், ``கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சிலை 30 கிலோ 300 கிராம் எடையும், 75 செ.மீட்டர் உயரமும், 47 செ.மீட்டர் அகலமும் உடையது.

Natarajar Statue
Natarajar Statue

இதை உடனடியாக கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நீதிபதி உத்திரவிட்டுள்ளார். எனவே, நாங்கள் சிலையை கோயில் நிர்வாகத்திடம் நாளைக்கு ஒப்படைக்க இருக்கிறோம். சிலையைப் பாதுகாக்க கோயில் நிர்வாகம் உரிய ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். அங்கு சென்றபின் சிலைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாங்கள் கவனிப்போம்'' என்றார்.