Published:Updated:

`பெரியகோயில் குடமுழுக்கு'- தஞ்சையை அழகாக்கும் `பொன்னியின் செல்வன்' நாவல் ஓவியங்கள்!

பொன்னியின் செல்வன் ஓவியம்
பொன்னியின் செல்வன் ஓவியம் ( ம.அரவிந்த் )

`குடமுழுக்கு விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் விதமாகவும், பொதுமக்கள் சோழர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் வகையிலும் 'பொன்னியின் செல்வன்' கதையில் வரும் ஓவியங்களையும் வரைந்துவருகிறோம்'.

பெரியகோயில் குடமுழுக்கிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக 'பொன்னியின் செல்வன்' வரலாற்றுக் கதையில் வந்த ஓவியங்கள், பெரியகோயிலுக்கு அருகே உள்ள சுவற்றில் வரையப்பட்டுவருகிறது.

பொன்னியின் செல்வன் ஓவியத்தை வரையும் மாணவர்கள்
பொன்னியின் செல்வன் ஓவியத்தை வரையும் மாணவர்கள்

தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு, நாளை நடைபெற உள்ளது. இதற்காக நகர் முழுவதும் புதிய சாலைகள் போடப்பட்டன. கோயிலுக்குச் செல்ல வழிகாட்டும் போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும், நகரை அழகுபடுத்த நகர்ப்பகுதியில் உள்ள அரசு சுவர்களில், வண்ணமயமான ஓவியங்களைக் கடந்த வாரத்திலிருந்து கும்பகோணம் கவின் கல்லூரி மாணவர்கள் வரைந்துவருகின்றனர். குறிப்பாக, பெரியகோயிலுக்கு அருகே உள்ள சுவர்களில் இந்த வண்ணமயமான ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இவற்றை மக்கள் ரசித்து, அருகில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.

ஓவியம் வரைவதற்கு ஆகும் செலவுகளைப் பல்வேறு தன்னார்வலர்கள் ஏற்றுள்ளனர். மாநகராட்சி நிர்வாகம், கும்பகோணம் கவின் கல்லூரியில் உரிய அனுமதிபெற்று, மாணவர்களை வண்ண ஓவியங்களை வரைவதற்கு ஈடுபடுத்தியுள்ளனர். கடந்த சில தினங்களாக, இரவு பகல் பாராமல் அக்கல்லூரி மாணவர்கள் ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் ஓவியம்
பொன்னியின் செல்வன் ஓவியம்

சோழர்களின் கதையை மிக நெருக்கமாக மக்களை உணரச் செய்த புதினம், அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், மக்கள் மனத்தில் நீங்காமல் இருக்கும் வரலாற்றுக் காவியமாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது. அந்த ஓவியங்கள், குடமுழுக்கை முன்னிட்டு சோழர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் வகையில் வண்ணம் தீட்டப்பட்டுவருகின்றன. பெரியகோயிலுக்கு வரும் பக்தர்கள், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியங்களைப் பார்த்து ரசித்த வண்ணம் செல்கின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரனிடம் பேசினோம். ``பெரிய கோயில் குடமுழுக்கிற்காக நகரை அழகுபடுத்தும் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதில் ஒன்றுதான், நகரை மேலும் அழகாக்கும் வண்ணம் ஓவியம் வரையும் பணி. முதலில் தமிழ் அறிஞர்கள், பழங்கால விளையாட்டுகள், ஐந்து வகை நிலங்கள், கோயிலைச் சுற்றியிருந்த அகழியின் பழைய வடிவம், தானியங்கள் சேர்த்து வைக்கும் பொருள்கள் மற்றும் உரல், அம்மி போன்ற பழங்கால பொருள்கள் போன்றவை வரையப்பட்டு வந்தன.

பொன்னியின் செல்வன் ஓவியம்
பொன்னியின் செல்வன் ஓவியம்

குடமுழுக்கு விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் விதமாகவும், பொதுமக்கள் சோழர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் வகையிலும் வெளிவந்த பொன்னியின் செல்வன் கதையில் வரும் ஓவியங்களையும் வரைந்துவருகிறோம். பெரியகோயிலுக்கு மிக அருகில் உள்ள திலகர் திடல் சுவற்றில் மொத்தம் 72 அடுக்கள் உள்ளன. இதில் பொன்னியின் செல்வனில் வந்த 72 ஓவியங்கள் வரையப்பட்டுவருகின்றன. இதை கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர்'' என்றார்.

கவின் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியான கீர்த்தனாவிடம் பேசினோம். ``நாங்க மொத்தம் 72 பேர் இதில் ஈடுபட்டுள்ளோம். மற்ற ஓவியங்கள் வரையும்போது சாதாரணமாக வரைந்து முடித்துவிட்டோம். ஆனால், சோழர்களின் வாழ்கையை கண்முன் நிறுத்தும் பொன்னியின் செல்வன் ஓவியங்களை வரையும்போது நன்றாக வர வேண்டும் என அதில் வந்த ஓவியங்களைப் பெரிய அளவில் பிரின்ட் எடுத்துக்கொண்டு வரைந்துவருகிறோம். இதனை வரையும்போதே எங்களுக்குள் ஒரு பிரமிப்பு உருவாகிறது.

பொன்னியின் செல்வன் ஓவியம்
பொன்னியின் செல்வன் ஓவியம்

சோழர்களுடைய வரலாற்றை எண்ணி வியப்படைந்து வருகிறோம். இந்த குடமுழுக்கு விழாவில் சோழர்களைப் பற்றி ஓவியம் வரைவதற்கான வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறோம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்கள் அனைவருக்கும் வண்ணமயமான இந்தப் படக்கதை அனைவரையும் பரவசப்படுத்தும் இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த ஓவியங்களைப் பார்த்த ஒருவர் எங்களிடம், சோழர்கள் காலத்திற்கே சென்றதுபோன்ற உணர்வு ஏற்படுவதாகப் பாராட்டினார். எங்கள் உணர்வைக் கொடுத்து இந்த ஓவியங்களை வரைந்திருக்கிறோம். இவற்றை மாவட்ட நிர்வாகம் நிச்சயம் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு