Published:Updated:

`என் புள்ளைங்க இருந்திருந்தா இப்படி ஆயிருக்காது!' - கும்பகோணம் தீ விபத்தின் 17-ம் ஆண்டு நினைவு தினம்

17-ம் ஆண்டு நினைவு தினம்
17-ம் ஆண்டு நினைவு தினம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவுகளைப் படையலிட்டனர். பழம், ஸ்வீட், காரம், பிஸ்கட், சமைத்து எடுத்த வந்த பலகாரம் ஆகியவற்றை வைத்தனர். மலர் வளையம் வைத்தும், பூக்களைத் தூவியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 17-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி விபத்து நடந்த பள்ளி முன்பு திரண்ட பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறி, உயிர் நீத்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தியது சோகத்தை ஏற்படுத்தியது.

கும்பகோணம் காசிராமன் தெருவில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 2004-ம் ஆண்டு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். இச்சம்பவம் உலகையே உலுக்கியது. பள்ளிக்கு படிக்கப் போன குழந்தைகள் தீ விபத்தில் சிக்கி சடலமாகத் திரும்பியதைப் பார்த்த பெற்றோர்களின் அழுகுரல்கள் கும்பகோணத்தைத் தாண்டி தேசத்தையே கலங்கடித்தன.

17-ம் ஆண்டு நினைவு தினம்
17-ம் ஆண்டு நினைவு தினம்

அனைவரது மனதிலும் ஆறாத வடுவாகவும், ரணமாகவும் அச்சம்பவம் தற்போது வரை இருந்து வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் நீதிமன்றம், பள்ளியின் தாளாளர் புலவர் பழனிச்சாமி, சரஸ்வதி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் சிலரும் தண்டனைக்கு ஆளானார்கள்.

இதன் 17-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் காலை 9 மணியளவில் பள்ளியின் முன் திரண்டனர். இறந்த 94 குழந்தைகளின் போட்டோக்களும் ஒரே ஃப்ளெக்ஸ் போர்டில் அச்சடித்து வைக்கப்பட்டிருந்தது. சில குழந்தைகளுக்கு போட்டோவே இல்லை. `எம்புள்ளைய ஒரு போட்டோ கூட எடுக்காம விட்டுட்டேனே' தாய் ஒருவர் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவுகளைப் படையலிட்டனர். பழம், ஸ்வீட், காரம், பிஸ்கட், சமைத்து எடுத்த வந்த பலகாரம் ஆகியவற்றை வைத்தனர். மலர் வளையம் வைத்தும், பூக்களைத் தூவியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மெழுகுவத்தி ஏற்றி அமைதியாக மனம் உருகினர். எல்லோரது கண்களிலும் தானாகவே கண்ணீர் கசிந்தன. நீண்ட நேரம் அந்த இடத்தில் அமைதியாக நின்றனர். பின்னர், இறந்த குழந்தைகளின் நினைவாக பாலக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்துக்குச் சென்று மெளன அஞ்சலி செலுத்தினர்.

தீ விபத்தில் மகனை இழந்த ஜெயலெட்சுமியிடம் பேசினோம். ``என்னோட மூத்த மகன்களான நீலகண்டன் 3-ம் வகுப்பும், ஜீவானந்தம் 2-ம் வகுப்பும் இந்தப் பள்ளியில் படிச்சாங்க. தீடீர்னு தீப்பிடிச்சு எரிஞ்சப்ப நீலகண்டன், தன்னோட தம்பி ஜீவானந்தத்தைக் காப்பாத்தப் போய் நெருப்புல சிக்கி இறந்துட்டான்.

17-ம் ஆண்டு நினைவு தினம்
17-ம் ஆண்டு நினைவு தினம்
Vikatan

இளையவன் ஜீவா எப்படியோ தப்பிச்சுட்டான். ஆனா, வீட்டுக்கு வராம ஸ்கூல் வாசலிலேயே அண்ணனுக்காக ரொம்ப நேரம் நின்னான். அண்ணன் வந்தாதான் வருவேன்னு அடம் பிடிச்சான். கடைசியா அவன் கரிக்கட்டையா வந்ததப் பார்த்து அதிர்ச்சியடைந்தவன் ரெண்டு மாசம் வரை பேசவே இல்லை. பின்னர் டாக்டர்கிட்ட கவுன்சலிங் அழைச்சிக்கிட்டு போனோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பேசத் தொடங்கினான். இன்னைக்கு ஜீவா காலேஜ் முடிச்சுட்டான். 17 வருஷம் ஆச்சு. ஆனாலும் அந்த நாள எங்க யாராலையும் மறக்க முடியலை" என்றார்.

செல்வி என்பவர், ``என்னோட ரெண்டு பிள்ளைகளான அருள்பாண்டி, அனிதா இந்த விபத்துல இறந்துட்டாங்க. நான் அப்போ குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்டேன். அரசு, குழந்தைகளைப் பறி கொடுத்த பெண்கள் 18 பேருக்கு மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக கர்ப்பப்பை ஆபரேஷன் செய்தனர். இதில் சிலருக்கு மட்டும் குழந்தை பிறந்தது. எனக்கு பெண் குழந்தை பிறந்தாள். பெரும் கஷ்டத்தைக் கொடுத்த ஆண்டவன் அதிலிருந்த மீள சின்ன சந்தோசத்தைக் கொடுத்ததா நெனச்சுக்கிட்டு ஆர்த்தினு பேர் வச்சு வளர்த்தோம். எனக்குதான் உடம்பு ரொம்ப ரோதன பண்ணுது.

டாக்டர்கிட்ட காமிச்சேன். குடல் இறங்கி வர்றதா சொல்லி நாலு முறை ஆபரேஷன் செஞ்சாங்க. இனிமே பிரச்னைன்னா எதுவும் செய்ய முடியாதுனு சொல்லிட்டாங்க. மார்க்கெட்டுல மூட்டை தூக்கி வந்த என் கணவரும் இறந்துட்டார். கஷ்டத்தோடயே என் வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கு. ஒரு வேளை என் புள்ளைங்க இருந்திருந்தா எனக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது" எனக் கண்ணீர் சிந்தினார்.

செல்வி
செல்வி

ஜான்சிராணி என்ற மாணவி, ``என்னோட ரெண்டு அண்ணன்கள தீ சுட்டுப் பொசுக்கி சாகடிச்சிருச்சு. அப்பா, அம்மா என்ன நல்லா பாத்துக்குறாங்க. அவங்களுக்குப் பிறகு நான் தனிமரமாகிடுவேன். ஆதரவுக்கும், கஷ்டமான நேரத்தில் தோள் கொடுத்து தாங்கவும் ஆள் இருக்காதுன்னு நெனக்கிற நேர மெல்லாம் என் கண்ணுல கண்ணீர் கொட்டுது" எனக் கலங்கினார்.

இன்பராஜ் என்பவர், ``எங்க குழந்தைங்க தீயில் கருகி உயிரிழந்த பிறகுதான் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டது. பள்ளிகள் பாதுகாப்பு விஷயத்தில் அக்கறை காட்டப்பட்டது. அந்த வகையில் எங்க பிள்ளைகள தியாகக் குழந்தைகளாகவே நாங்க பார்க்கிறோம். ஒவ்வொரு வருடமும் நாங்க இந்த நாளை குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். ஆனால், அரசு அதைச் செய்யவில்லை. அறிவிக்கும்பட்சத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என எதிர்கால சந்ததிக்குத் தெரிய வரும். குழந்தைகள் விஷயத்தில் பாதுகாப்பாக இருப்பார்கள். எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வும் மேலோங்கும்" எனத் தெரிவித்தார்.

இன்பராஜ்
இன்பராஜ்

தீ விபத்தில் 18 குழந்தைகள் காயத்துடன் உயிர் தப்பின. இதில் விஜய், கெளசல்யா, மெர்சி உள்ளிட்ட ஆறு மாணவர்கள் 90 சதவிகித காயத்துடன் உயிர் தப்பினர். அரசு அவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கியது. ஆனால், இன்றைக்கும் அவர்கள் முகம் மற்றும் உடம்பில் உள்ள தழும்பு மறையவில்லை. இதை மறைய வைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். பெரும் தொகை செலவு செய்தால் ஒரு வேளை சரியாகுமா என்பதும் தெரியவில்லை. இந்நிலையில் பட்டதாரிகளான அந்த ஆறு பேருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு