Published:Updated:

`உன்னை ஒரு போட்டோகூட எடுக்காம இருந்துட்டேனே!' - கும்பகோணம் தீவிபத்து நினைவு நாளில் கதறிய தாய்

கும்பகோணம் பள்ளி விபத்தின்  நினைவு தினம்
கும்பகோணம் பள்ளி விபத்தின் நினைவு தினம்

கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 94 குழந்தைகள் இறந்து இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவரும் விபத்துக்குள்ளான பள்ளியின் முன் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கும்பகோணத்தில் உள்ள கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் அப்பள்ளியில் படித்த 94 குழந்தைகள் தீக்கு இரையாயின. 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் அனைத்து இதயங்களையும் துடிதுடிக்கச் செய்தது. குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்கள் மனதளவிலும் உடலளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அந்தப் பள்ளியின் முன்பு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகள்
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகள்

15-ம் வருட நினைவு தினத்தையொட்டி, இந்த ஆண்டு, பொதுமக்கள், குழந்தைகளை இழந்த பெற்றோர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இன்று காலை பள்ளியின் முன் திரண்ட பெற்றோர்கள் அங்கு ஃப்ளெக்ஸ் போர்டில் வைக்கப்பட்டுள்ள தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்து கதறியபடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். காயம்பட்டு இன்று பெரியவர்களாக இருப்பவர்களும் கனத்த இதயத்தோடு கண்கள் கலங்கி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது குழந்தையைப் பறி கொடுத்த தாய் ஒருவர், ''உன்னை ஒரு போட்டோகூட எடுக்காம இருந்துட்டேனே. அதான் உன்னோட போட்டோகூட இதுல இல்லை. இங்ககூட உன் முகத்தைப் பார்க்க முடியாத பாவியா இருக்கேனே'' எனக் கதறியது அனைவரையும் கண்கலங்கச் செய்தது.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து அஞ்சலி
கும்பகோணம் பள்ளி தீ விபத்து அஞ்சலி

இந்தத் தீ விபத்தில் தன் இரண்டு குழந்தைகளையும் பறி கொடுத்த இன்பராஜ் என்பவரிடம் பேசினோம். ''உலகில் உள்ள எந்தப் பெற்றோருக்கும் இப்படி ஒரு நிலை வரவே கூடாது. காலையில் சிரித்துக்கொண்டு டாட்டா காட்டிவிட்டு மொட்டுபோல் மலர்ந்து பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் தீயில் கருகி அசைவற்று வீடு வந்து சேர்ந்தன.

அந்த நாள் கொடுத்த வலி இன்றைக்கும் மனதைவிட்டும் உடலை விட்டும் அகலவில்லை. இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் பள்ளியின் முன் திரண்ட பெற்றோர்கள் அடைந்த துயரத்துக்கும் தவிப்புக்கும் அளவே இல்லை. இன்றைக்கும் என் மனைவி திடீரென தூக்கத்தில் இருந்து விழித்து, 'நம்ம பையன் அலறல் சத்தம் கேட்குதுங்க' எனக் கண் கலங்கிக் கூறுவாள். அந்த நேரத்தில் அவளைத் தேற்றுவதற்குக்கூட என்னிடத்தில் வார்த்தைகள் இல்லாமல்போவது என் துரதிர்ஷ்டம்.

குழந்தையை பறிகொடுத்த இன்பராஜ்
குழந்தையை பறிகொடுத்த இன்பராஜ்

இன்றைக்கு இறந்த குழந்தைகள் இருந்திருந்தால் பெரியவனாகி வேலைக்குச் சென்று பொற்றோரைக் கவனிக்க தொடங்கியிருப்பார்கள். என்ன செய்ய, எங்களுக்கு அந்த பாக்கியம் இல்லை. இந்த விபத்தில் காயம்பட்டு உயிர்பிழைத்த பிள்ளைகளின் உடலில் காயங்கள் ஏற்படுத்திய வடுக்கள் ஆறாத சுவடுகளாக அந்த நாளை எங்களுக்குத் தினமும் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அந்த நாளை எங்களால் இறுதி மூச்சு உள்ளவரை மறக்க முடியாது. அதன் 15வது ஆண்டு நினைவு தினத்தில் இன்றைக்குப் பள்ளி முன்பு அஞ்சலி செலுத்த வந்திருக்கிறோம். எங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை இந்த நினைவுகளாலேயே கரைந்துகொண்டு இருக்கிறது.

எங்கள் குழந்தைகள் மூச்சடங்கிய பள்ளி முன்பு அனைவரும் திரண்டு பிள்ளைகளுக்குப் பிடித்தமான பொருள்களை வாங்கி, குழந்தைகளின் புகைப்படங்களுக்குக் கீழே வைத்து படைத்தோம். பின்னர் மெழுகுவத்தி ஏந்தி, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினோம். அதன் பிறகு, பாலக்கரையில் குழந்தைகளின் நினைவு பூங்கா அமைக்கப்பட்டுள்ள இடத்துக்குச் சென்றும் அஞ்சலி செலுத்தினோம்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான குழந்தைக்கு அஞ்சலி செலுத்தும் பெற்றோர்கள்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான குழந்தைக்கு அஞ்சலி செலுத்தும் பெற்றோர்கள்.

மாலை விபத்து நடந்த பள்ளியிலிருந்து அகல் விளக்கு ஏற்றி மௌன ஊர்வலமாக மகாமகம் குளக்கரைக்குச் சென்று மோட்ச தீபம் ஏற்றுகிறோம். எங்கள் குழந்தைகள் எங்களோடு இருந்த நாள்களின் நினைவுகள்தான் எங்களை இந்தத் துயரத்திலலிருந்து ஓரளவுக்கு விடுபடச் செய்கிறது.

இந்த நாளை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகக் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும். உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். இதன் மூலம் குழந்தைகள் விஷயத்தில் எந்தப் பள்ளியும் மெத்தனமாக இருக்க கூடாது என்பதை இவை நினைவுபடுத்தும்.

பிள்ளைக்கு அஞ்சலி செலுத்தும்  தாய்
பிள்ளைக்கு அஞ்சலி செலுத்தும் தாய்

இனி இதுபோன்ற விபத்துகள் நடக்காத அளவுக்கு அனைவரையும் எச்சரிக்கையாக இருக்க வைக்கும். இது எங்களுக்காக இல்லை அனைத்துப் பெற்றோர்களுக்காகவும் இதை அரசிடம் கேட்கிறோம் இந்த வருடமாவது இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இவற்றை முதல்வர் அறிவிக்க வேண்டும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு