Published:Updated:

கும்பகோணம்: `காத்திருந்தது தனி மாவட்ட அறிவிப்புக்கு... கிடைத்தது மாநகராட்சி!’ -மக்கள் சொல்வதென்ன?

கும்பகோணம்
கும்பகோணம் ( ம.அரவிந்த் )

கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பாகவும் ஏக்கமாகவும் இருக்கிறது. அதற்கான கோரிக்கையையும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``கும்கோணம் நகராட்சி, மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நீண்டகால கோரிக்கை. தமிழக அரசின் மாநகராட்சி அறிவிப்பு எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், மாவட்டம் அறிவிப்பே மனம் கொள்ளா மகிழ்ச்சியைத் தரும்” எனப் பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர்.

கோயில் நகரம் கும்பகோணம்
கோயில் நகரம் கும்பகோணம்

`கோயில் நகரம்’ என அழைக்கப்படும் கும்பகோணம் பகுதியைச் சுற்றிலும் நவக்கிரகக் கோயில்கள் அமைந்திருப்பதால், இந்தியா முழுவதிலுமிருந்தும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கும்பகோணம் வந்து செல்கின்றனர். அத்துடன் சிறந்த தொழில் நகரமாகவும் விளங்கிவருகிறது. நாச்சியார் கோயில் குத்துவிளக்கு, பித்தளைப் பாத்திரங்கள், சிலைகள், திருபுவனம் பட்டு, டிகிரி காபி தூள் என கும்பகோணத்தில் உற்பத்தி செய்யப்படும் பல பொருள்கள் உலக அளவில் புகழ்பெற்றவை. அதனால் பெரும் வணிகத்தலமாகவும் இந்த நகரம் திகழ்ந்துவருகிறது.

எனவே, கும்பகோணம் பகுதி மக்கள் கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக அதற்கான அழுத்தத்தை தமிழக அரசுக்குக் கொடுத்து வந்ததுடன், போராட்டங்களையும் நடத்திவந்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதற்கான அறிவிப்பு வரவில்லை.

பித்தளைக் குத்துவிளக்கு
பித்தளைக் குத்துவிளக்கு

இதனால் பலரும் ஏமாற்றமடைந்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருந்த ஸ்டாலின், திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததுமே கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார். மக்களும் அதற்கான எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். ஆனால், சட்டப்பேரவைக் கூட்டத்தில் கும்பகோணம் நகராட்சி, மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாலும் `எங்களுக்குத் தேவை தனி மாவட்ட அறிவிப்புதான்’ எனக் கூறிவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து வணிகர் சங்கத்தைச் சேர்ந்த சத்தியநாராயணன் கூறுகையில், ``கும்பகோணம் கலாசார தொன்மைமிக்க நகரம். ஆன்மிக நகரமாகவும், சிறந்த தொழில் நகரமாகவும் இருந்துவருகிறது. ஒரு மாவாட்டத்துக்குரிய அனைத்து அமைப்புகளையும், தகுதிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது கும்பகோணம். அதைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பாகவும் ஏக்கமாகவும் இருக்கிறது. அதற்கான கோரிக்கையையும் தொடர்ந்து முன்வைத்துவருகிறோம்.

மாநகராட்சியாக அரிவிக்கப்பட்டுள்ள கும்பகோணம்
மாநகராட்சியாக அரிவிக்கப்பட்டுள்ள கும்பகோணம்

இந்தநிலையில் கும்பகோணம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக முதல்வர் ஸ்டாலின், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் ஆகியோருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த அறிவிப்பு மகிழ்ச்சி தருகிறது என்றாலும், மனம் கொள்ளா மகிழ்ச்சி இல்லை. முதல்வர் ஸ்டாலின், கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது திருக்கடையூரிலும் ஒரத்தநாட்டிலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கும்பகோணம் புதிய மாவட்டம் உருவாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Vikatan

அதன்படி கும்பகோணத்தைத் தலைமையிடமாகக்கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையும், அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்ற எதிர்பார்ப்பும் எங்களுக்கு இருக்கிறது. கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் நாள் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு