Published:Updated:

லாரி டிரைவருக்கு கொரோனா... மூடப்பட்ட கும்பகோணம், 'தாராசுரம்' காய்கறி மார்க்கெட்

மூடப்பட்ட தாராசுரம் காய்கறி மார்க்கெட்
மூடப்பட்ட தாராசுரம் காய்கறி மார்க்கெட் ( ம.அரவிந்த் )

லாரி டிரைவருக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் என ரிசல்ட் வந்ததால், உடனடியாக நகராட்சி மற்றும் மருத்துவத் துறைக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து, உடனடியாக அந்த லாரி ஓட்டுநரை மருத்துவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியதையடுத்து மார்க்கெட் மூடப்பட்ட நிலையில், கும்பகோணத்தில் உள்ள பெரிய மார்க்கெட்டான தாராசுரம் காய்கறி மார்க்கெட்டிற்கு மேட்டுப்பாளையத்திலிருந்து உருளைக்கிழங்கு ஏற்றிவந்த லாரி டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, தாராசுரம் மார்க்கெட்டுக்கும் சீல் வைக்கப்பட்டது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூடப்பட்ட தாராசுரம் காய்கறி மார்க்கெட்
மூடப்பட்ட தாராசுரம் காய்கறி மார்க்கெட்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செயல்பட்டுவருகிறது தாராசுரம் காய்கறி மார்க்கெட். தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய மார்க்கெட்டான இதில், 450 பெரிய கடைகளும், 500-க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் உள்ளன. இந்த மார்கெட்டை வாழ்வாதாரமாகக் கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்துவருகின்றனர். இங்கு, தினந்தோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 300 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. தினமும் சுமார் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடக்கும்.

கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள், விற்பனைக்காக காய்கறிகளை இங்கு வந்து வாங்கிச்செல்வது வழக்கம். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 37 வயதுடைய லாரி டிரைவர் ஒருவர், மேட்டுப்பாளையத்திலிருந்து உருளைக்கிழங்கு ஏற்றிக்கொண்டு, கடந்த 8-ம் தேதி தாரசுரம் மார்க்கெட்டிற்கு வந்துள்ளார்.

வெளிமாவட்டங்களிலிருந்து வரும் நபர்களைச் சோதனை செய்வதற்காக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியான கும்பகோணம் அருகே உள்ள நீலத்தநல்லூர் சோதனைச் சாவடியில், லாரிகளைச் சோதனை செய்ததுடன், கிருமிநாசினியும் தெளித்தனர். பின்னர், லாரி ஓட்டுநருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதன் முடிவு நேற்று இரவு வந்தது. இதில், லாரி டிரைவருக்கு கொரோனா தொற்று பாசிடிவ் என ரிசல்ட் வந்ததால், உடனடியாக நகராட்சி மற்றும் மருத்துவத் துறைக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து, உடனடியாக அந்த லாரி ஓட்டுநரை மருத்துவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொரோனா பரவுவதை தடுக்க மூடப்பட்ட தாராசுரம் மார்க்கெட்
கொரோனா பரவுவதை தடுக்க மூடப்பட்ட தாராசுரம் மார்க்கெட்

இதையடுத்து, அந்த லாரி டிரைவருடன் பலர் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டதால், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி நகராட்சி ஆணையர் லெட்சுமி முன்னிலையில், மார்கெட் மூடி சீல் வைக்கப்பட்டது. மேலும், மார்கெட்டில் கடந்த இரண்டு நாள்களாக குறிப்பிட்ட அந்த டிரைவருடன் தொடர்பில் இருந்த வியாபாரிகள், தொழிலாளர்கள் என 70 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை அறிய மருத்துவப் பரிசோதனை செய்யமுடிவு செய்துள்ளனர்.

அத்துடன், அந்தப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதுடன், மருத்துவக் குழுவினர் கண்காணிப்பில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். இந்த நிலையில், தற்காலிக மார்கெட் ஒன்றை வளையப்பேட்டை பைபாஸ் சாலை பகுதியில் அமைப்பதற்காக, நகராட்சி நிர்வாகம் ஏற்பாடுசெய்து வருகிறது.

இது, கும்பகோணம் பகுதி மற்றும் மார்க்கெட்டில் கடை வைத்திருந்தவர்கள் மற்றும் காய்கறி வாங்கச் சென்றவர்களை அச்சமடையவைத்துள்ளது. ஏற்கெனவே சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியதைத் தொடர்ந்து மார்க்கெட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. தற்போது, தமிழகத்தின் மூன்றாவது பெரிய மார்க்கெட்டான தாராசுரம் மார்க்கெட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு