Published:Updated:

`அடிப்படை வசதிகளைச் செய்துதருவதே உரிய மரியாதையாக இருக்கும்!’ - தஞ்சை செவிலியர்கள் வேதனை

மருத்துவக்கலூரி
மருத்துவக்கலூரி

`பாத்ரூமில் பயன்படுத்துவதற்கு வாளி, கப் போன்றவை இல்லை எனவே, அவற்றை வீட்டிலிருந்து எடுத்து வந்து பயன்படுத்துகிறோம்'.

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மலர் தூவி மரியாதை செய்யப்படுகிறது. இந்த சூழலிலும் தஞ்சாவூரில் கொரோனா வார்டில் பணி செய்யும் செவிலியர்கள் தங்குவதற்கு உரிய அடிப்படை வசதியுடன் கூடிய அறை ஒதுக்கித் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால், பல இன்னல்களுக்கு ஆளாவதாக மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தின் மீது செவிலியர்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.

செவிலியர்கள் தங்கியிருக்கும் வகுப்பறை
செவிலியர்கள் தங்கியிருக்கும் வகுப்பறை

கொரோனாவிலிருந்து காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரும் பெரும் பாராட்டுகளை பெற்று வருகின்றனர். தன்னலம் பார்க்காமல் செய்யும் இவர்கள் பணி போற்றப்பட வேண்டியது. இன்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முப்படைகளின் சார்பாக மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்த நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணி செய்துவரும் செவிலியர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளைக்கூட நிர்வாகம் செய்து தரவில்லை என பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

இதுகுறித்து செவிலியர்கள் வட்டாரத்தில் பேசினோம். ``தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 5 வார்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஒரு வார்டுக்கு இரண்டு செவிலியர்கள் வீதம் 10 செவிலியர்கள் பணியில் இருக்கின்றனர். ஒரு நாளைக்கு மொத்தம் 4 ஷிப்டுகள் என மொத்தம் 40 செவிலியர்கள் கொரோனா தடுப்பு சிகிச்சைப் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

செவிலியர்கள் தங்கியிருக்கும் வகுப்பறை
செவிலியர்கள் தங்கியிருக்கும் வகுப்பறை

7 நாள் பணி, 7 நாள் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என சுழற்சி முறையில் பணி செய்கிறோம். குடும்பம், குழந்தைகளை மறந்து எங்களுடைய நலன் எதையும் கவனத்தில் கொள்ளாமல் இக்கட்டான இந்தத் தருணத்திலிருந்து அனைவரும் மீண்டும் வர வேண்டும் என்கிற சேவை மனபான்மையுடன் பணி செய்கிறோம். ஆனால், நாங்கள் தங்குவதற்கான இடத்தையும், அங்கு உரிய அடிப்படை வசதிகளையும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை.

மருத்துவக்கலூரி
மருத்துவக்கலூரி

முதலில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நர்சிங் குவார்ட்டர்ஸில் தங்க வைத்தனர். நாங்கள் தொடர்ந்து முறையிட்டு வந்ததையடுத்து புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள பயிற்சி செவிலியர்களுக்காக கட்டப்பட்ட புதிய கட்டத்தில் உள்ள வகுப்பறையில் தங்க வைத்துள்ளனர். உயிரைக் கொடுத்து வேலை செய்யும் எங்களுக்கு தனி அறை கூட ஒதுக்கித் தரவில்லை. இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பாத்ரூமில் பயன்படுத்துவதற்கு வாளி, கப் போன்றவையும் இல்லை. எனவே, அவற்றை வீட்டிலிருந்து எடுத்து வந்து பயன்படுத்துகிறோம். படுப்பதற்கு கட்டில் கூட இல்லாமல் பல செவிலியர்கள் தரையில் படுக்கின்றனர்.

அப்படியே ஒரு சில அறையில் கட்டில் இருந்தாலும் அதில் மெத்தைகள் இருக்காது. பெட்ஷீட் போன்றவற்றையும் வீட்டிலிருந்தே கொண்டு வந்து பயன்படுத்துகிறோம். கொரோனா பாசிட்டிவ் வார்டில் பணி செய்தவர்கள், அறிகுறி உள்ள வார்டில் பணி செய்தவர்கள் என அனைத்து செவிலியர்களையும் ஒரே பகுதியில் தங்க வைக்கின்றனர்.

`மருத்துவர்கள் என் இறப்பை அறிவிக்கத் தயாரானார்கள்!’ - கொரோனா நினைவுகளைப் பகிரும் இங்கிலாந்து பிரதமர்

டாக்டர்கள், மருத்துவ பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு ஹோட்டலில் அறை எடுத்து தங்க வைத்தவர்கள் எங்களுக்கு அது போன்று செய்யவில்லை. அத்துடன் பணி முடித்து 7 நாள் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும் செவிலியர்களையும் அங்கேயே தங்க வைத்தனர். இதுதொடர்பாக நாங்கள் நிர்வாகத்திடம் பேசியதையடுத்து 5-வது பேட்ஜிலிருந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்க வைத்துள்ளனர். ஆனால், பணியில் இருக்கும் செவிலியர்களுக்கு அதே நிலை தொடர்கிறது.

நாங்க தங்கியிருக்கிற அறையை நாங்களே சுத்தம் செய்து கொள்கிறோம் தகுந்த பாதுகாப்பு உடை கொடுத்து அறையை சுத்தம் செய்வதற்குக் கூட தூய்மைப் பணியாளர்களை நியமிக்கவில்லை. பாதுகாப்பு உடையுடன் தொடர்ந்து 6 மணி நேரம் வேலை செய்துவிட்டு வரும் எங்களுக்கு அறையில் உரிய வசதிகள் இல்லாமல் அவஸ்தைப்படுகிறோம். எங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதை நாங்கள் வரவேற்கிறோம். அதேபோல் நிர்வாகம் எங்களுக்கான அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றித் தரும்படி கேட்டுக்கொள்கிறோம். அதுதான் எங்களுக்கு நியாயமாக செய்யப்படுகிற மரியாதை’’ என்றனர் வேதனையுடன்.

``இறுதிப் பயணமே வாழ்ந்த வாழ்க்கைக்கான மரியாதை; ஆனால் எங்களுக்கு நேர்ந்தது..." - மருத்துவரின் கடிதம்

இது தொடர்பாக விளக்கம் கேட்பதற்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி டீன் குமுதா லிங்கராஜை பலமுறை தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. நிர்வாகம் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கும்பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர் அதையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு