Published:Updated:

அவிநாசி சாலை மேம்பாலம்... அவசர கோலம்! - கண்ணீரில் 560 நில உரிமையாளர்கள்...

எங்க நிலத்தையெல்லாம் பாலம் கட்டுறதுக்காகக் கையகப்படுத்தப்போறதா திடீர்னு நியூஸ் பேப்பர்ல விளம்பரம் கொடுத்திருந்தாங்க.

பிரீமியம் ஸ்டோரி

துண்டு நிலம் இருந்தாலும், சொந்த நிலமாக இருந்தால் கிடைக்கும் நிம்மதியே வேறு. ஆனால், அந்த நிம்மதிக்கு வேட்டுவைத்திருக்கிறது தமிழக அரசின் அவசர கோல மேம்பாலத் திட்டம் ஒன்று. இதை முன் வைத்து சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசை நோக்கி கேள்விக்கணைகளை வீசியிருக்கிறது.

அவிநாசி சாலை மேம்பாலம்... அவசர கோலம்! - கண்ணீரில் 560 நில உரிமையாளர்கள்...

கோவையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை அவிநாசி சாலையில் 10.10 கிலோமீட்டர் தூரத்துக்கு, 1,600 கோடி ரூபாய் செலவில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படுகிறது. இதற்கு 2020, டிசம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து, இரவு பகலாக பாலம் கட்டும் பணி நடந்துவருகிறது. இந்தநிலையில்தான், 560 நில உரிமையாளர்களுக்குத் தகவல் தெரிவிக்காமல், சட்டவிரோதமாக நில ஆர்ஜிதம் செய்வதாக ‘அவிநாசி சாலை நில உரிமையாளர்கள் சங்கம்’ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில்தான், ‘‘மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள், புகைப்படங்களைப் பார்க்கும்போது, அவர்களுக்கு உரிய நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. நோட்டீஸ் கொடுக்காமல் எப்படி இவ்வளவு பெரிய தூண்கள் அமைக்கப்பட்டன?’’ என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது நீதிமன்றம். அத்துடன், வழக்கு தொடர்ந்தவர்களின் நிலம் முன்பாக மட்டும் பணிகளைத் தொடர இடைக்காலத் தடையையும் விதித்திருக்கிறது.

இது குறித்துப் பேசிய ராகுல் என்ற வியாபாரி, ‘‘எங்க நிலத்தையெல்லாம் பாலம் கட்டுறதுக்காகக் கையகப்படுத்தப்போறதா திடீர்னு நியூஸ் பேப்பர்ல விளம்பரம் கொடுத்திருந்தாங்க. அதைப் பத்தி எங்களுக்கு எந்தத் தகவலும் சொல்லலை. உடனடியா கலெக்டர், கமிஷனர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்னு எல்லார்கிட்டயும் மனு கொடுத்தோம். அப்புறம் நாங்களே ஒருங்கிணைச்சு அதிகாரிங்ககூட ஒரு மீட்டிங் நடத்தினோம். அதுலயும் திருப்தியான பதில் கிடைக்கலை. அதுக்கப்புறம்தான், வழக்கு தொடர்ந்தோம்.

அவிநாசி சாலை மேம்பாலம்... அவசர கோலம்! - கண்ணீரில் 560 நில உரிமையாளர்கள்...

கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடிதான் சாலை விரிவாக்கம் பண்றோம்னு, கொஞ்சம் இடத்தை எடுத்தாங்க. இப்ப மறுபடியும் வர்றாங்க. இந்த தடவை பாதிப்பு அதிகமா இருக்கும்போல தெரியுது. மூணு தலைமுறையா பிசினஸ் பண்ணிக்கிட்டிருக்குற எங்க கடையோட ஒரு பகுதியே போக வாய்ப்பிருக்கு. பாலம் கட்ட எப்படியும் அஞ்சு வருஷத்துக்கு மேல ஆகிடும். இந்த இடைப்பட்ட காலத்துல நாங்க என்ன பண்ணுவோம்? இப்பதான் லோன் போட்டு கடையை டெவலப் பண்ணியிருக்கோம். அதுக்கே இன்னும் வட்டி கட்டி முடியலை. நாங்க எந்தத் திட்டத்தையும் வேண்டாம்னு சொல்லலை. எங்க வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில திட்டங்களை நிறைவேத்துங்கனுதான் சொல்றோம்’’ என்றார் கொந்தளிப்புடன்.

மற்றொரு நில உரிமையாளரான சுதாகர், ‘‘கோவையில இதைவிடக் குறுகலான ரோட்டுலயே இப்ப மேம்பாலம் கட்டிட்டு இருக்காங்க. அங்கேகூட யாரோட நிலத்தையும் எடுக்கலை. ஆனா, கோவையிலேயே அகலமான அவிநாசி ரோட்ல 560 பேரோட நிலத்தை எடுத்து மேம்பாலம் கட்ட வேண்டிய அவசியமில்லை. பெங்களூரு என்ட்ரன்ஸ்ல சுமார் ஒன்பது கிலோமீட்டர் தூரத்துக்குப் பாலம் இருக்கு. அதுல எந்த ஏற்ற இறக்கமோ... ஜங்ஷனோ இல்லை. அதேபோல இந்தத் திட்டத்தையும் நடுவுல எங்கேயும் ஜங்ஷன் வைக்காமல் பாயின்ட் டு பாயின்ட் வரைக்கும் ஒரே மேம்பாலமா கட்டினா எங்க நிலத்தையெல்லாம் கையகப்படுத்த வேண்டிய அவசியமும் இருக்காது’’ என்று ஆலோசனை வழங்கினார்.

‘‘கடந்த 2012-ம் ஆண்டு அவிநாசி சாலையில் அரசு வழிகாட்டுதல் மதிப்பின்படி ஒரு சதுர அடி விலை 7,000 ரூபாய். கொரோனாவுக்குப் பிறகு இது வெகுவாகக் குறைக்கப்பட்டு, தற்போது அரசு வழிகாட்டுதல் மதிப்பின்படி ஒரு சதுர அடி 4,650 ரூபாயாக உள்ளது. அந்தத் தொகையிலிருந்துதான் 2.25 சதவிகிதம் வரை இழப்பீடு தருகிறோம் என்கிறார்கள். மிகக்குறைந்த தொகையை கொடுப்பதற்காகவே, திட்டமிட்டு விலையைக் குறைத்திருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவில், ‘இதன் பிறகு அவசர அவசரமாக நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கக் கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது. அதைக்கூட மதிக்காமல் அதே நாளில் இங்கு சில நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள்’’ என்கிறார்கள் அவிநாசி சாலை நில உரிமையாளர்கள்.

ராகுல் - சுதாகர்
ராகுல் - சுதாகர்

இந்தத் திட்டம் தொடர்பாக தேசிய நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ‘‘நாளிதழ்களில் நோட்டிஃபிகேஷன் கொடுப்பது தான் முதல்படி. அதைச் செய்துவிட்டோம். அதற்கு முன்பே, இந்தப் பாலம் குறித்து ஊடகங்களில் நிறைய செய்திகள் வெளியாகி யுள்ளன. ஆட்சியர் அலுவலகத்திலும் அனைத்துத் தரப்பு அதிகாரிகள், சங்கங்கள், தன்னார்வலர்கள் கூட்டத்தில் ஒப்புதல் வாங்கியிருக்கிறோம். நோட்டிஃபிகேஷனில் ஏதாவது முறையீடு இருந்தால், ஒரு மாத காலத்துக்குள் டி.ஆர்.ஓ-வுக்கு தபால் கொடுக்கலாம். அதன் பிறகு, மக்களை நேரில் சந்தித்துப் பேசி, அரசுக்குப் பரிந்துரை அனுப்புவோம். எங்கள் தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைப்போம்’’ என்றார்கள்.

கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி, ‘‘நில உரிமையாளர்களுக்கு உரிய வகையில் தகவல் சொல்லி, அவர்களின் இசைவைப் பெற்று, சட்டபூர்வ நடைமுறைகளைப் பின்பற்றி நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்’’ என்றார்.

நில உரிமையாளர்கள் சொல்வதுபோல மாற்றுவழிகள் இருந்தால், அதைப் பரிசீலிக்கலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு