Published:Updated:

சோழவரம் விமானத்தள ஆக்கிரமிப்புகளைக் கண்டறிய சர்வே! - குடியிருப்பவர்களுக்கு மாற்றுஇடம் வழங்கப்படுமா?

அவர்கள் குறிப்பிட்டுள்ள சர்வே எண்களுக்குள் சுமார் 55 ஏக்கர் நிலப்பகுதி வருகிறது. அந்த இடங்கள், இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் விமானப்படைக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை, செங்குன்றத்தை அடுத்த சோழவரம் விமானத் தளத்துக்குச் சொந்தமான இடங்களை மீட்பதற்காக அலமாதி, நல்லூர், பம்மது குளம், ஆட்டாந்தாங்கல் பகுதிகளைச்சேர்ந்த 45 சர்வே எண்களில் உள்ள மனைப்பிரிவுகளில் பத்திரப்பதிவு கடந்த மே மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இதுகுறித்த பணிகளை கடந்த மார்ச் மாதமே தொடங்கிய இந்திய விமானப்படை, குறிப்பிட்ட சர்வே எண்களில் பத்திரப்பதிவை நிறுத்தும்படி கடந்த மே மாதத்தில் தமிழக பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பியது.

செய்தித்தாளில் விமானப்படை அறிவிப்பு
செய்தித்தாளில் விமானப்படை அறிவிப்பு

அவர்கள் குறிப்பிட்டுள்ள சர்வே எண்களுக்குள் சுமார் 55 ஏக்கர் நிலப்பகுதி வருகிறது. அந்த இடங்கள், இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் விமானப்படைக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்குள் குடியிருப்புகள், கடைகள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த நடவடிக்கையால், விமான தளத்துக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இடத்தில் குடியிருப்போர் மட்டுமல்லாமல், அதற்கு அருகில் பட்டா நிலத்தில் வீடுகட்டி வசிக்கும் மக்களும் பீதிக்குள்ளானார்கள்.

விமானத்தளத்துக்குச் சொந்தமான இடம் எனக் கூறப்படும் இடத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பலரும் குடியிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு சாலை, மின்சாரம், குடிநீர் வசதி என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் மட்டுமன்றி, விமானத்தளத்தின் எல்லைக்குள் வராத, முறையான பட்டா வழங்கப்பட்டு குடியிருந்துவரும் மக்களும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, பம்மதுகுளம், ஈஸ்வரன் நகர் பகுதியைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான வீடு மற்றும் வீட்டு மனைகளின் உரிமையாளர்களும் இதனால் மனஉளைச்சலுக்கு ஆளானார்கள்.

கூட்டு சர்வே
கூட்டு சர்வே

அப்பகுதி மக்கள், பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டதை விலக்குமாறு சார்பதிவாளர் அலுவலகம், தாசில்தார், மாவட்ட ஆட்சியர், விமானப்படை அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பு அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்தனர். விமானப்படை அதிகாரிகள் தரப்பில், தமிழக அரசோடு இணைந்து கூட்டு சர்வே நடத்தப்பட்டு விமானத்தளத்துக்குச் சொந்தமான இடம் கண்டறியப்பட்டதும் மற்ற இடங்கள் விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதையடுத்து கூட்டு சர்வே நடத்துவதற்கும் இப்பகுதி மக்கள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்துள்ளனர். எனினும் காலதாமதமாக, 4 மாதங்களுக்குப் பிறகு தற்போதுதான் கூட்டு சர்வே செய்வதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு அதிகாரிகள் இறங்கியுள்ளனர். கடந்த செவ்வாயன்று பம்மதுகுளம் பகுதியில் கூட்டு சர்வே நடத்தப்பட்டது. தமிழக அரசின் சார்பில் ஆவடி தாசில்தார் அலுவலகத்திலிருந்து தலைமை சர்வேயர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். விமானப்படை சார்பாக தலைமை சர்வேயர் சரத் மற்றும் விமானப்படை அதிகாரிகள் அதைப் பார்வையிட்டனர்.

கூட்டு சர்வே
கூட்டு சர்வே

கடந்த 4 மாதங்களாக கூட்டு சர்வே நடத்துவதற்கு ஏற்பட்ட காலதாமதம் குறித்து இந்திய விமானப்படை தரப்பில் கேட்டபோது, தாங்கள் கடந்த நான்கு மாதங்களாக கூட்டு சர்வே நடத்த தயாராக இருந்ததாகவும், தமிழக அரசுதரப்பில்தான் தாமதப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினர். தற்போது 50% பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், மேலும் 50% பணியை முடிப்பதற்கு தமிழக அரசு அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பு தரவேண்டுமென்றும் கூறினர். முழுமையாக சர்வே முடிந்தபின், விமான தளத்திற்குச் சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் தருவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், ஏனைய பகுதி மக்களுக்கு விதிக்கப்பட்ட பத்திரப்பதிவுத்தடை நீக்கப்படுமென்றும் தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு