Published:Updated:

`நிலச்சரிவு; போக்குவரத்து நிறுத்தம்!' - மேகமலையில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

மேகமலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

Megamalai
Megamalai

தேனி மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான மேகமலையில், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

Megamalai
Megamalai

தேனி சின்னமனூர் அருகே உள்ளது மேகமலை. ரம்மியமான சூழலில், மழைச் சாரலில் நனைந்தபடி, விரிந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்களைப் பார்த்து ரசிக்கவும், அதன் ஊடாகச் சுற்றித்திரியும் வன விலங்குகளைப் காண்பதற்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மேகமலைக்கு தினம் தினம் படையெடுத்துவருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு, மேகமலை மலைஅடிவார பகுதியான தென்பழனி முதல், மேகமலையின் ஹைவேவிஸ் வரையிலான 35 கிலோமீட்டர் சாலையை சீரமைத்தது அரசு. சாலை சரிசெய்யப்பட்டது முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

Megamalai
Megamalai

இந்நிலையில், கடந்த இருதினங்களாகப் பெய்த தொடர்மழை காரணமாக மேகமலைச் சாலையில் பல்வேறு இடங்களில் மண் சரிந்து, பாறைகள் உருண்டு காணப்படுகிறது. சில இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்துகிடப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழன் காடு பகுதியில் இருந்து கடனா எஸ்டேட் வரையில் பெரிய அளவில் மண் சரிந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய வன ஊழியர் ஒருவர், ``சிறியதும் பெரியதுமாகச் சில இடங்களில் மண் சரிந்துள்ளது. அதைச் சரி செய்யும் பணி நடந்துவருகிறது. இதனால், மேகமலைக்குச் செல்லக்கூடிய வாகங்களை மலை அடிவாரமான தென்பழனியில் போலீஸாரும் வனத்துறையினரும் தடுத்து நிறுத்துகின்றனர்.

`8 வருடமாக ஒரே இடத்தில் வேலை; தொடரும் புலிகள் இறப்பு'- டிரான்ஸ்பர் சர்ச்சையில் மேகமலை வனத்துறை!

அதேபோல, மலை மீது இருந்து கீழே இறங்கும் வாகனங்களை ஹைவேவிஸ் பகுதியில் தடுத்து நிறுத்தப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் மேகமலைக்குச் செல்ல தடை விதித்து திருப்பி அனுப்பப்படுகின்றனர். சாலையை சரி செய்யும் பணி வேகமாக நடந்துவருகிறது” என்றார்.