Published:Updated:

`காற்று வாங்கக்கூட கதவுகளைத் திறக்க முடியல!'- தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை பரபரப்பாக்கிய நபர்

குரங்கு வேடத்தில் தொண்டன் சுப்பிரமணி
குரங்கு வேடத்தில் தொண்டன் சுப்பிரமணி

தூத்துக்குடியில், குரங்கு வேடமணிந்து நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த வழக்கறிஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் குரங்கணி, மாவடிப்பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகமாக குரங்குகள் காணப்படுகின்றன. இவை வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செயதுவருகின்றன. பொதுமக்களைக் கடித்து காயப்படுத்தி வருவதால், அப்பகுதி மக்கள் பலமுறை வனத்துறையினரிடம் கூறியும், குரங்குகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

குரங்கு போல தாவி வந்த தொண்டன் சுப்பிரமணி
குரங்கு போல தாவி வந்த தொண்டன் சுப்பிரமணி

இந்நிலையில், குரங்குகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ’பத்துரூபாய் இயக்க’த்தின் மாவட்டச் செயலாளர், வழக்கறிஞர், தொண்டன் சுப்பிரமணி என்பவர், நூதன முறையில் குரங்கு வேடம் அணிந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தாவித்தாவி வந்து மனு அளித்தார். குரங்கு வேடமணிந்து மனு அளிக்க வந்தவரைப் பார்த்து கிண்டல் பேச்சுகளும் எதிரொலித்தன.

ஆட்சியரிடம் மனு அளித்த பிறகு, தொண்டன் சுப்பிரமணியிடம் பேசினோம்... குரங்கு முகமுடியைக் கழற்றிவிட்டு பேச ஆரம்பித்த அவர், “தூத்துக்குடி மாவட்டத்திலேயே ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரங்கணி, மாவடிப்பண்ணை ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் குரங்கள் அதிகம் உள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள தென்னந்தோப்பு, மாந்தோப்பு, பழத்தோட்டங்களில் புகுந்து இளநீர், பழங்களைப் பறித்து வீசி அட்டகாசம் செய்துவருகிறது.

தொண்டன் சுப்பிரமணி
தொண்டன் சுப்பிரமணி

வீடுகளுக்குள் புகுந்து சாப்பாட்டுப் பாத்திரங்களைத் திறந்து உணவுகளை எடுத்துச்செல்கின்றன. அங்கும் இங்கும் தாவி ஓடுவதால், பல பொருள்கள் உடைந்து சேதமாகின்றன. குரங்குகளை விரட்ட முயலும்போது, அவை பொதுமக்களை கடித்தும், பிராண்டியும் காயம் ஏற்படுத்துகின்றன. அவை போடும் சத்தத்தால், சிறுவர்கள் பயப்படுகிறார்கள். குரங்குகளின் அட்டகாசத்தால், காற்றுக்காகக்கூட வீட்டின் கதவுகளைத் திறந்து வைக்க முடியவில்லை.

பத்துப் பதினைஞ்சு குரங்கள் மொத்தமாக இறங்கிவிடுவதால், அவற்றை விரட்டவும் முடியாமல் பயந்து ஒளியவேண்டியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் குரங்குகளின் அட்டகாசத்தால் நிம்மதியாக வசிக்க முடியவில்லை. வீடுகளை மட்டுமல்லாமல் கடைகள், பள்ளிகள், கோயில்களுக்குள்ளும் புகுந்துவிடுவதால், பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அட்டகாசம் செய்யும் குரங்குகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

குரங்கு வேடத்தில் தொண்டன் சுப்பிரமணி
குரங்கு வேடத்தில் தொண்டன் சுப்பிரமணி

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தரப்பில் பேசினோம், “குரங்கணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்கள், கூண்டுகள் மூலம் பிடிக்கப்பட்டு, நெல்லை மாவட்டம் களக்காடு, தென்காசி மாவட்டம் குற்றாலம் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விடப்பட்டுவருகிறது. அவற்றின் இனப்பெருக்கத்தால் அதன் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. மேலும், குரங்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு