Published:Updated:

`தீபாவளியை தொலைத்து, வாழ வழிதேடி நிற்கிறது குடும்பம்'-கல் நெஞ்சையும் அசைத்துவிடும் திண்ணைப் பிரசாரம்

மது இல்லாத தீபாவளி
மது இல்லாத தீபாவளி

மதுவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சோகங்களை உதாரணங்களோடு நினைவுகூர்ந்து, உருக்கமான சூழலை உருவாக்குகிறார்கள். இவர்கள் கொடுக்கும் நோட்டீஸில் இடம்பெற்றுள்ள வாசகங்களும் உருக்கமானவை.

எதை நாம் கொண்டாடப் போகிறோம்? தீபாவளியையா? தீயவழியையா? என்ற முழக்கத்தை முன்வைத்து, கும்பகோணத்தைச் சேர்ந்த ஓர் ஆன்மிக அமைப்பினர் மதுவுக்கு எதிரான தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது புதுமையான முயற்சிக்கும், இவர்கள் கொடுக்கும் துண்டுபிரசுரத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்களுக்கும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிகின்றன. முன்பெல்லாம் தீபாவளி என்று சொன்னாலே, புத்தாடை, இனிப்பு, பட்டாசுகள்தான் நினைவுக்கு வரும். சமீபகாலமாக, இந்த வரிசையில் மதுவும் மிக முக்கிய அம்சமாக இடம் பெற்று வருவது துரதிர்ஷ்டம். தீபாவளி சமயத்தில் நடைபெறும் மது விற்பனை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் ஏற்படும் சோகங்களை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம்
ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம்

இந்நிலையில்தான் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் அமைப்பினர், ஆண்டுதோறும் தீபாவளியின்போது, வீதிவீதியாகச் சென்று, புதுமையான பாணியில் திண்ணைப் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதன் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட நபர்கள் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். மதுவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சோகங்களை உதாரணங்களோடு நினைவுகூர்ந்து, உருக்கமான சூழலை உருவாக்குகிறார்கள். இவர்கள் கொடுக்கும் நோட்டீஸில் இடம்பெற்றுள்ள வாசகங்களும் உருக்கமானவை.

``மது இல்லாத தீபாவளி நல்வாழ்த்துகள். மகிழ்ச்சியும் மனிதநேயமும், தர்மமுமே தீபாவளி. மதுவும், பிற போதைகளும் மானம் அழிக்கும் தீயவழி. எதைக் கொண்டாடப் போகிறோம்? தீபாவளியையா? தீயவழியையா? மதுவின் கொடுமைக்கு உறவிழந்த குடும்பங்கள், தீபாவளியைத் தொலைத்து, வாழ வழிதேடி நிற்கிறது. மதுக்கடையில் வரிசைகட்டி நிற்பவர்கள் இதைக் கொண்டாட்டம் என்கிறார்கள். மது விற்பவரோ, இதை விற்பனை இலக்கென்று இலக்கணம் பேசுகிறார். காத்துக்கிடந்து மது குடிக்கும் காலக்கொடுமையின் கொடூரம் அறிவோம்.”

இப்படியாக இன்னும் பல வாசகங்கள், கல் நெஞ்சையும் அசைத்துவிடும். திம்மக்குடியில் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த இதன் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகளிடம் பேசினோம். ‘’இதுவும் ஒரு ஆன்மிகப் பணிதான். மது போதையால் மனுசன் தன்னையே இழந்துடுறான். இயல்பு நிலைக்கு மீட்டெடுக்குறதும் ஆன்மிகம்தான். தீபாவளி தருணத்துலதான் குடிகாரர்களோட எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்குது. தீபாவளி கொண்டாட்டம்ங்கற பேர்ல, நிறைய பேர் புதுசா குடிக்க ஆரம்பிக்கிறாங்க. ஏற்கெனவே பழக்கமுள்ளவங்க, தீபாவளி அப்ப, வெறிபிடிச்ச மாதிரி மது குடிக்கிறாங்க. நாலு வருசத்துக்கு முன்னாடி ஒரு தீபாவளி அன்னைக்குதான், இந்தப் பிரசாரத்திற்கான எண்ணம் எனக்கு உதிச்சது. அரசு மருத்துவமனைக்கும், கிளைச்சிறைக்கும் போயி, அங்க உள்ளங்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு, புது டவல், பழம், பிஸ்கட் கொடுக்குறது வழக்கம்.

மது இல்லா தீபாவளி
மது இல்லா தீபாவளி

அங்கவுள்ளவங்ககிட்ட பேச்சுக் கொடுத்தப்பதான் தெரிஞ்சிது, பலரோட அந்த அவல நிலைக்கு, ஏதே ஒரு வகையில மதுதான் முக்கிய காரணமா இருந்திருக்கு. விபத்து, குடும்பத் தகராறு, உடல் பாதிப்பு, அடிதடி, கொலை முயற்சினு எல்லாத்துலயுமே மதுதான் தூண்டு சக்தியா இருந்திருக்குன்னு தெரிஞ்சிது. குறிப்பா தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள்ல இதெல்லாம் அதிகமா நடக்குறதுனால, இந்தப் பிரசாரத்தைத் தீவிரமா செஞ்சிக்கிட்டு இருக்கோம். டெல்டா மாவட்டங்கள்ல அந்தந்த ஊர்கள்ல நடக்குற உள்ளூர் திருவிழாக்கள் சமயங்கள்லயும் விழிப்புணர்வு பிரசாரம் செஞ்சிக்கிட்டு இருக்கோம். இதுக்கான பலன்களையும் கண்கூடா பார்க்குறோம். பலர், உணர்வுபூர்வமா நன்றி தெரிவிச்சி வாழ்த்துறாங்க” என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார். நாமும் நமது உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு மது இல்லாத தீபாவளி நல்வாழ்த்துகள் சொல்லுவோம்.

அடுத்த கட்டுரைக்கு