Published:Updated:

கணவன் - மனைவி, அம்மா - மகன், அப்பா - மகள்; உள்ளாட்சித் தேர்தலில் `குடும்ப' ஆட்சி!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் ஒரே குடும்பத்தில், தாய் - மகன், தந்தை - மகள் மட்டுமல்லாமல், கணவன் - மனைவி என தம்பதி சகிதமாகவும் போட்டியிட்டு சிலர் வெற்றி பெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் போட்டியிட்டவர்களில் வெற்றி பெற்றவர்கள், அடுத்து நடக்க இருக்கும் ஊராட்சிக் குழு மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத் தலைவர் தேர்தலுக்குத் தயாராகி வருகிறார்கள். இந்தத் தேர்தலில் கணவன் - மனைவி, தந்தை - மகள், தாய் - மகன் எனக் குடும்பமாகப் போட்டியிட்ட சிலர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்
ஊரக உள்ளாட்சித் தேர்தல்
மாமனார் எம்.எல்.ஏ - மருமகள் கவுன்சிலர்; ஓட்டுக்கேட்டு ஜெயிக்க வைத்த வி.ஐ.பி-க்கள்!

அந்த வகையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்துக்கு நடைபெற்ற தேர்தலில் 7-வது வார்டில் தி.மு.க-வின் மாவட்ட தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளரான ஆரோக்கிய எட்வின் போட்டியிட்டார். அதே யூனியனில் உள்ள 9-வது வார்டில் அவரின் மனைவி சௌமியா போட்டியிட்டார். தி.மு.க சார்பில் போட்டியிட்ட இருவருமே வெற்றி பெற்ற நிலையில், அடுத்து நடக்க உள்ள நாங்குநேரி யூனியன் தலைவர் தேர்தலுக்கு ஆரோக்கிய எட்வின் தயாராகி வருகிறார்.

அதேபோல, நெல்லை மாவட்டம் களக்காடு யூனியன் வார்டுக்கு நடைபெற்ற தேர்தலில் 1-வது வார்டில் மாவட்ட இளைஞரணி பொறுப்பு வகித்தவரான ஜார்ஜ் கோசல் போட்டியிட்டார். 7-வது வார்டில் அவரின் மனைவி இந்திரா களமிறங்கினார். தி.மு.க சார்பில் போட்டியிட்ட தம்பதியர் இருவருமே வெற்றிபெற்றுள்ள நிலையில் அடுத்ததாக நடக்க இருக்கும் தலைவருக்கான தேர்தலுக்கு ஜார்ஜ் கோசல் தயாராகி வருகிறார்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை
கோப்புப்படம்

களக்காடு யூனியனில் 4-வது வார்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வனும் 3-வது வார்டில் அவரின் மகள் கிங்ஸ்லி மோசஸும் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். பிற சுயேச்சைகள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் தலைவர் தேர்தலில் வெற்றி பெற தமிழ்ச்செல்வன் முயன்று வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல், மாவட்ட ஊராட்சி மன்ற வார்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க ஒன்றியச் செயலாளரான சி.எஸ்.ஆர் ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பைக் கைப்பற்ற காய்நகர்த்தி வருகிறார். அவரின் மனைவி சௌமியா ஜெகதீஷ், ராதாபுரம் யூனியன் வார்டு கவுன்சிலராகத் தேர்வாகியுள்ளார். அவரும் யூனியன் சேர்மன் பொறுப்புக்கான போட்டியில் உள்ளார்.

பாளையங்கோட்டை யூனியன் வார்டு தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒன்றியச் செயலாளரான தங்கபாண்டியன், அடுத்து நடக்கவுள்ள பாளையங்கோட்டை யூனியன் சேர்மன் தேர்தலில் வெற்றிபெற சக வார்டு உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டி வருகிறார்.

90 வயது தாய் பெருமாத்தாளுடன் மகன் தங்கபாண்டியன்
90 வயது தாய் பெருமாத்தாளுடன் மகன் தங்கபாண்டியன்
`அந்த 60 ஓட்டுகளுக்கு நன்றி!' - உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட மூன்றடி உயர மாற்றுத்திறனாளி பெண்

தங்கபாண்டியன் கடந்த நான்கு உள்ளாட்சித் தேர்தல்களில் சிவந்திபட்டி கிராம பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்வானவர். இந்த முறை அவருக்கு ஒன்றிய வார்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டதால் சிவந்திபட்டி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில், 90 வயது நிரம்பிய அவரின் தாய் பெருமாத்தாள் போட்டியிட்டார். அதில் அவர் தன்னை எதிர்த்துக் களமிறங்கிய இரு வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்தார்.

இப்படி, உள்ளாட்சித் தேர்தலில் குடும்பமாக வெற்றி பெற்றிருப்பவர்கள் பலர். இவர்களெல்லாம், ஊர் மக்களைத் தங்கள் குடும்பமாக நினைத்து நலத்திட்டங்களைச் செயல்படுத்திட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அவர்களுக்கு வாக்களித்த மக்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு