Published:Updated:

பாப் முதல் மகா வரை... தமிழகத்தை அச்சுறுத்திய புயல்கள்- ஓர் அலசல்!

தமிழகத்தைத் தாக்கிய புயல்கள்...
News
தமிழகத்தைத் தாக்கிய புயல்கள்...

இந்தியப்பெருங்கடல் பகுதியில் புயல்கள் உருவெடுக்கும்போது, 64 புயல் பெயர்களைக் கொண்ட பட்டியலில் இருந்துதான் பெயர்கள் தேர்வுசெய்யப்படும்.

இதுவரை தமிழகத்தைத் தாக்கிய பெரும் புயல்களின் விவரங்களையும், அந்தப் புயல் ஏற்படுத்திச் சென்ற தாக்கத்தின் விளைவுகளையும் விவரிக்கின்றது இந்தக் கட்டுரை. மேலும், ஒரு புயல் எப்படி உருவாகிறது, அதற்கு எப்படிப் பெயர் வைக்கப்படுகின்றது என்ற விவரங்களை பார்ப்போம்...

புயலுக்குப் பெயர் வைப்பது ஏன்..? எப்படி..? எதனால்..?

ஒரு நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல் சின்னங்கள் உருவாகுமாயின், ஒவ்வொரு புயலின் நிலை குறித்தும் துல்லியமாய் அறிந்துகொள்ள ஏதுவாய் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது. உலகம் முழுவதிலும் நிலவும் தட்பவெப்ப நிலைகளை, சுவிட்சர்லாந்தில் அமைத்துள்ள சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பில் 191 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம்
சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம்

அங்கம் வகிக்கும் நாடுகள் ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா, வங்கதேசம், மியான்மர், மாலத்தீவு, பாகிஸ்தான், ஓமன், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 8 நாடுகள் `வட இந்தியப் பெருங்கடல்' மண்டலத்தில் இருக்கின்றன. இந்த 8 நாடுகளும் 8 பெயர்களைப் பரிந்துரை செய்தன. மொத்தம் 64 பெயர்களைக் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டது.

Cyclone Name List
Cyclone Name List

இந்தியப்பெருங்கடல் பகுதியில் புயல்கள் உருவெடுக்கும்போது, 64 புயல் பெயர்களைக் கொண்ட பட்டியலில் இருந்துதான் பெயர்கள் தேர்வுசெய்யப்படும். இப்பணியை டெல்லியில் அமைந்துள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மேற்கொள்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

புயல் எப்படி உருவாகிறது..?

ஒரு புயல் தோன்றி மறைவதென்பது, தோன்றும் நிலை, வலுவடையும் நிலை மற்றும் வலுவிழந்த நிலை என்று மூன்று படிநிலைகளில் நடைபெறுகின்றது. இவை அனைத்துமே ஒன்றின் தொடர்சியாக மற்றொன்று நடைபெறுகின்றது. கடற்பரப்பில் 26'C அதிகமான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும்பொழுது காற்று வேகமாக வெப்பமடைகிறது. வெப்பமடைந்த காற்றானது மேல் நோக்கிச் செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து வெற்றிடம் உண்டாகிறது. அந்நிலையில் காற்றின் அழுத்தம் அதிகம் உள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தை நோக்கி காற்று வீச ஆரம்பிக்கிறது. மேலே செல்லும் வெப்பக்காற்று குளிர்வடைந்து வானில் தாழ்வு நிலையில் தங்குகிறது.

புயல் உருவாகும் விதம்
புயல் உருவாகும் விதம்

இதன் காரணமாக தாழ்வுநிலை உண்டாகிறது. தாழ்வு நிலையின் காரணமாக அங்கு காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதுவே காற்றழுத்த தாழ்வு நிலையாகும். பூமியின் சுழற்சி காரணமாக காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம் அதிகரித்து புயலாக உருமாறுகிறது. இந்நிலையிலேயே புயலின் கண் உருவாகும். காற்றழுத்த தாழ்வு நிலையின்போது 31 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகும்.

புயலின் வளர்ச்சி நிலைகள்
புயலின் வளர்ச்சி நிலைகள்

புயலின் கண் பகுதியென்பது அதன் மையத்திலிருக்கும் மிதமான காற்றழுத்தப் பகுதி. இது, சுமார் 30-65 கி.மீ விட்டம் கொண்டிருக்கக் கூடும். அங்கு நிலவும் காற்றழுத்தம் வெளிப்புறத்தில் இருப்பதைவிடக் குறைந்தே காணப்படும். காற்று மேலெழுந்து, பின் குளிரும் நிலையினில் சில அடர்த்தியான காற்று கீழ் நோக்கி நகர்ந்து தெளிவான புயலின் கண் பகுதி உருவாகும். அதிக வலுகொண்ட புயலின் மையப்பகுதி அடர்ந்த உருளை வடிவில் தோற்றமளிப்பதால் அதி புயலின் கண் எனப்படுகிறது.

அப்படிச் சுழலும் மேகச்சுருளின் வேகத்தையும், அதன் அடர்த்தி, பரப்பளவையும் பொறுத்துத்தான் புயலின் வலிமையை வரையறை செய்ய இயலும். இப்படிச் சுழலும் மேகக்கூட்டங்களை கொண்ட காற்று, கடற்பகுதியிலிருந்து கரையை நெருங்கும்போது, கனமழையுடன் கூடிய புயற்காற்று தாக்குகிறது. இந்தப் புயல் நிலப்பரப்பில் நீண்டதூரம் பயணித்ததும் வலுவிழந்து காற்றின் வேகம் குறைகிறது. இந்தப் புயல் மீண்டும் கடலை அடையும்போது வலுவடையவும் வாய்ப்பிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள்..!

தமிழகத்தை இதுவரை 30-க்கும் அதிகமான புயல்கள் தாக்கியுள்ளன. 1966-ம் ஆண்டு உருவான புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. மீண்டும், 1977-ம் ஆண்டு மற்றொரு புயல் தமிழகத்தைத் தாக்கியது. இந்தப் புயலினால் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டம் கடும் சேதத்தைச் சந்தித்தன.

தமிழகத்தை இதுவரை தாக்கிய பெரும் புயல்கள் விவரங்களைப் பின்வரும் படத்தில் காணலாம்

தமிழகத்தை தாக்கிய புயல்கள்
தமிழகத்தை தாக்கிய புயல்கள்

அடுத்து, 1985-ம் ஆண்டில் ஒரு புயல் தமிழகத்தைத் தாக்கியது. கடந்த 1998-ல் உருவான புயல் அதிக அளவில், அதாவது சராசரியைவிட 30 விழுக்காடு கூடுதலான மழையைக் கொட்டித் தீர்த்தது.

ஃபர்னூஸ் புயல் (2005)

கடந்த 2005-ம் ஆண்டு பியார், பாஸ், ஃபர்னூஸ் என்ற மூன்று புயல்கள் வங்கக் கடலில் உருவாகியிருந்தன. இவற்றில், டிசம்பர் முதல் வாரத்தில் உருவான ஃபர்னூஸ் புயல் கடும் பாதிப்புகளை விளைவித்தது.

ஃபர்னூஸ் புயலில் தமிழகமே வெள்ளக்காடானது. நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. மாநிலம் முழுவதும் கடுமையான பயிர்ச்சேதம் ஏற்பட்டு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

புயல் பாதிப்புகளின் காரணமாக 25,000-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களின் தங்கவைக்கப்பட்டனர். இந்த வருடம் மட்டும் இயல்பைவிட 79 சதவிகிதம் அதிகமாய், 773 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது.

நிஷா புயல்  (2008):

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி 2008-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி புயலாக உருமாறியது. சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கக் கடலில் உருவான மிகப்பெரிய புயலென்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

நிஷா புயலின் தாக்கத்தினால் கிட்டத்தட்ட 20 நாள்களுக்கு மேல் கனமழை பெய்தது,

இந்தப் புயல் தாக்கத்தின் காரணமாக 170-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். 2,500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாயின. 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 12 மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தன.

வர்தா புயல் (2016):

கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் ரோனு, கியான்ட், நடா என்று அடுத்தடுத்து புயல்கள் உருவாகியிருந்தாலும் அந்தப் புயல்கள், பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. ஆனால், அந்த வருடம் டிசம்பரில் உருவான வர்தா புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்து, டிசம்பர் 12-ம் நாள் சென்னையைக் கடந்து சென்றது. அப்போது மணிக்கு 130 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசியது.

வர்தா புயலின்போது எண்ணூர் துறைமுகத்தில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், நாகையில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டிருந்தது.

வர்தா புயலின் தாக்கத்தினால் 17-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சேதம் ஏற்பட்டது. இந்தப் புயலினால் மின்சாரம், போக்குவரத்து தடைப்பட்டு சென்னை மாநகரம் திக்குமுக்காடிப் போனது.

ஒக்கி புயல்  (2017):

வடக்கு இந்தியப் பெருங்கடலில் இலங்கையருகே உருவெடுத்தது ஒக்கி புயல். மணிக்கு 185 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசியது. 2017-ம் ஆண்டு கன்னியாகுமரி மற்றும் கேரளாவைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுச் சென்றது. கணக்கிட முடிந்தளவு மரங்களையும், மின்சார கம்பங்களையும் பிடுங்கி வீசிச்சென்றது.

ஒக்கி புயல் தாக்கிய அன்றும் - அதன் பின்னும்

இந்தப் புயலின் தாக்கத்தினால், இலங்கை, தமிழ்நாடு, கேரளா என மொத்தம் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தகவல்தொடர்பு, போக்குவரத்து முடங்கியது. கன்னியாகுமரி பகுதியே தனித்துப் போனது. 650-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயினர். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமாகின. இன்றளவும் அந்தப் பகுதி மக்கள் இந்தப் புயலின் தாக்கத்திலிருந்து மீளவில்லை.

கஜா புயல் (2018):

கஜா புயலினால் ஏற்பட்ட அனைத்துப் பாதிப்புகளையும் பின்வரும் படத்தில் விரிவாகக் காணலாம்.

கஜா புயல் பாதிப்பு
கஜா புயல் பாதிப்பு

2018-ம் ஆண்டு வங்கக் கடல் பகுதியில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் உருவாகிய முதல் புயலாகும். இந்தப் புயல் ஏற்பட்டபோது 128 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உருக்குலைந்தன. 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பயிர்கள் கடும் சேதமடைந்தன. பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன.

ஃபானி புயல் (2019):

கடந்த ஏப்ரல் மாதம் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின் புயலாக வலுப்பெற்றது. வட தமிழகத்தின் கடற்கரைப் பகுதியிலிருந்து சுமார் 1,250 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்த இந்தப் புயலினால் தமிழகத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

கடந்த 150 ஆண்டுகளில் உருவான புயல்களில், ஃபானி புயல் 3-வது கடுமையான புயலாகும்.

இந்தப் புயலின் தாக்கத்தினால், ஒடிசா மாநிலத்தில் 10,000-துக்கும் அதிகமான கிராமங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. புயல் புரி பகுதியைக் கடக்கும்போது புயல் காற்று மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது. கடந்த 43 ஆண்டுகளில் ஃபானி புயல் மிக அதிகமான சேதத்தை ஏற்படுத்திச் சென்றது. 12 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டு 5,000-துக்கும் அதிகமான முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். ஒடிசாவைப்போல் மேற்கு வங்கத்திலும் இந்தப் புயல் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதோடு, வங்கதேசத்திலும் இந்தப் புயல் கடும் சேதத்தை விளைவித்தது. இந்தப் புயலால் கிட்டத்தட்ட 89 நபர்கள் உயிரிழந்தனர். 5,700 கோடிக்கும் அதிகமான பொருள்சேதத்தை ஏற்படுத்திச் சென்றது ஃபானி புயல்.

கியார் புயல் (2019):

அரபிக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 25-ம் தேதி தீவிர புயலாக உருமாறி இருக்கிறது. இந்தப் புயல் வடக்கு மற்றும் வடகிழக்குத் திசையில் இருக்கும் ஓமன் கடற்கரையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

Cyclone Kyarr
Cyclone Kyarr

இந்தப் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன், கர்நாடகம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற பல தமிழக மீனவர்கள் இன்னும் கரைக்கு வந்து சேரவில்லை. மேலும், அரபிக்கடல் பகுதியில் மற்றொரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.

மகா புயல் (2019):

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 31-ம் தேதி தீவிர புயலாக உருமாறியிருக்கிறது. இது லட்சத்தீவு - மினிக்காய் தீவுகளுக்கு இடையே நிலை கொண்டிருக்கிறது. திருவனந்தபுரத்திலிருந்து 320 கி.மீ வடமேற்கு திசையில் நிலைகொண்டுள்ளது. அதேபோல் லட்சத்தீவு பகுதியிலிருந்து 25 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி `மகா' புயல் நகர்ந்து வருகிறது. மேலும், புயல் காற்றின் வேகம் மணிக்கு 95 கி.மீ. முதல் 110 கி.மீட்டராக ஆக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

Cyclone Maha
Cyclone Maha

இது அதி தீவிர புயலாக உருவெடுத்து நவம்பர் 4-ம் தேதிவரை நிலைகொண்டிருக்கும். இந்தப் புயலால் தமிழகத்துக்குப் பெரும் சேதம் ஏற்படாது. லட்சத்தீவு, மாலத்தீவுகளின் வழியாக இப்புயலானது ஓமன் நாட்டை கடக்கவுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 190 கிலோமீட்டர் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் இரு புயல்கள் அரபிக் கடலில் நிலை கொண்டிருப்பது ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக அரபிக் கடலில் நவம்பர் 4-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயல் காரணமாக, தமிழகத்தின் தென்மாவட்டங்கள், கேரளா, கர்நாடகாவில் உள்ள கடலோரப் பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அரபிக்கடலிலிருந்து மகா புயல் விலகிச் சென்றுகொண்டிருப்பதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.