Published:Updated:

Live Updates: வடதமிழகத்துக்கு ரெட் அலர்ட்... புழல் ஏரியில் நீர்திறப்பு அதிகரிப்பு! - தொடரும் கனமழை!

மழை
Live Update
மழை

இன்று முதல் நாளை மறுதினம் வரை கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பான செய்திகளின் அப்டேட்ஸ்...!

11 Nov 2022 9 AM

வடதமிழகத்துக்கு ரெட் அலர்ட்... புழல் ஏரி நீர்திறப்பு அதிகரிப்பு!

தமிழகத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில் வட தமிழக பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறது.

புழல் ஏரியில் நீர் திறப்பு
புழல் ஏரியில் நீர் திறப்பு

தொடர் மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில், நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு 500 கனஅடியாக உள்ளது. இதனால் கரையோர மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

11 Nov 2022 9 AM

தமிழகத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. அதைத் தொடர்ந்து சில நாள்கள் சென்னை உட்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்தது. இந்த நிலையில், வங்கக்கடலில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், தென்மேற்கு கடலில் இலங்கை கடலோர பகுதிகளை சுற்றி நிலவியது.

மழை
மழை

தற்போது இது தீவிர காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்திருக்கிறது. இது தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நாளை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் நாளை மறுதினம் வரை கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று மாலையிலிருந்து தமிழகத்தின் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

11 Nov 2022 9 AM

சென்னை, கூடுவாஞ்சேரி, மீனம்பாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம், கிண்டி, அசோக் நகர், சைதாப்பேட்டை, தியாகராய நகர், வடபழனி, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், அண்ணா சாலை, பல்லாவரம், மேடவாக்கம், பம்மல் அனகாபுத்தூர், நந்தம்பாக்கம், மாங்காடு, அடையாறு, அண்ணாநகர், முகப்பேர், அம்பத்தூர் உள்ளிட்ட நகரங்களில் பரவலாக கனமழை பெய்தது.

கனமழை - சென்னை
கனமழை - சென்னை

மேலும் இன்றைய தினம் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

11 Nov 2022 9 AM
கனமழை: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
கனமழை: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

கன மழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், அரியலூர், கடலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.