Live கள்ளக்குறிச்சி: பாடப் புத்தகத்துடன் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது - ஊர் மக்கள், உறவினர்கள் கண்ணீர்

மர்மான முறையில் உயிரிழந்த கணியாமூர் தனியார் பள்ளி மாணவியின் உடலை, இன்று காலை 11 மணிக்குள் பெற்றோர் தரப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் கெடு விதித்திருந்த நிலையில், மாணவி தரப்பினர் பதிலளித்ததுபோலவே உடலைப் பெற்றுக்கொண்டனர்.
பாடப் புத்தகத்துடன் மாணவியின் உடல் நல்லடக்கம்!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் இறுதி ஊர்வலம் சற்று முன்னர் மயானம் வந்தடைந்தது. இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர், பள்ளி மாணவியின் உடல் 11-ம் வகுப்பு புத்தகங்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கு நிகழ்வில், ஊர் மக்கள், உறவினர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் வெளியூர் ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தொடங்கியது மாணவியின் இறுதி ஊர்வலம்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடல், இன்று காலை நீதிமன்ற உத்தரவின்படி மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸில் மாணவியின் உடல் அவரின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து மாணவியின் உடல் அவரின் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து ஏராளமான ஊர்மக்கள், மக்கள் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தினர். தற்போது மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியிருக்கிறது. ஊர் மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டிருக்கும் நிலையில், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாணவியின் உடலுக்கு உறவினர்கள், ஊர் மக்கள் அஞ்சலி
மாணவியின் உடல் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடல் இன்று காலை நீதிமன்ற உத்தரவின்படி மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸில் மாணவியின் உடல் அவரின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தற்போது மாணவியின் உடல் அவரின் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
சிறிய விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடல் இன்று காலை நீதிமன்ற உத்தரவின்படி மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸில் மாணவியின் உடல் அவரின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், வழியில் ஆம்புலன்ஸ் சிறிய விபத்தில் சிக்கியது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதே வாகனத்தில் மாணவியின் உடல் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரிய நெசலூருக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
உயிரிழந்த தனியார் பள்ளி மாணவியின் சொந்த ஊரான பெரிய நெசலூர் பகுதியில் சோதனைக்குப் பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
மாணவியின் உடல் இறுதி சடங்குக்காக எடுத்துச்செல்லப்படும் நிலையில் பாதுகாப்பு தீவிரம்!
பள்ளி மாணவியின் உடல் இறுதிச் சடங்கு செய்ய ஏற்பாடு - பெரிய நெசலூர் கிராமத்தில் கடுமையான சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஊர் நுழைவாயில் முதல் இடுகாடு வரை நிற்கவைக்கப்பட்டிருக்கும் காவல்துறையினர்.
வீடியோ: எஸ்.தேவராஜன்
மாணவியின் உடலைப் பெறறுக்கொண்ட பெற்றோர்!

கள்ளக்குறிச்சிக்குள் செல்லும் வாகனங்களும் சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. சுமார் 6:45 மணியளவில் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு வந்த மாணவியின் குடும்பத்தார், தற்போது மாணவியின் உடலைக் கண்ணீர்மல்கப் பெற்றுக்கொண்டனர். அந்த நொடி, பார்ப்போரின் மனங்களை கனக்கச் செய்தது. இதைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் சொந்த ஊரான பெரிய நெசலூருக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கணியாமூர் பகுதியில் இயங்கிவருகிறது ஒரு தனியார் பள்ளி. இந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி, பயின்று வந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு 17-ம் தேதி அன்று நடந்த போராட்டம் ஒரு கட்டத்தில் பயங்கரக் கலவரமாக மாறி தமிழ்நாட்டையே அதிரவைத்தது. இந்த நிலையில், பள்ளி நிர்வாகம் தரப்பில் ஐந்து பேர் கைது; வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்; கலவரத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது; மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் இடமாற்றம்; கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்புப் புலனாய்வுக்குழு அமைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மாணவியின் மரணத்தில் மர்மம் விலகாததால் அவரின் உடலை வாங்காமல் தொடர்ந்து போராடிவந்தனர் மாணவியின் பெற்றோர் தரப்பினர்.

இதற்கிடையில், வழக்கை முதன்முறையாக விசாரித்திருந்த சென்னை உயர் நீதிமன்றம், பல்வேறு கேள்விகளை முன்வைத்ததோடு, மாணவியின் உடலை மறு உடற்கூறாய்வு செய்வதற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், "மறு உடற்கூறாய்வின்போது தங்கள் தரப்பு மருத்துவரையும் நியமிக்க வேண்டும். இதை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும்" என மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
ஆனால், 21-ம் தேதி விசாரணையை ஏற்றுக்கொள்வதாக பதில் அளித்த உச்ச நீதிமன்றம், மறு உடற்கூறாய்வுக்குத் தடை ஏதும் விதிக்காததோடு, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி மாணவியின் தந்தைத் தரப்பை அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, 19-ம் தேதி அன்று மாணவியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மறு உடற்கூறாய்வு நடத்தப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு..!
மேலும், மாணவியின் தந்தை தாக்கல் செய்திருந்த மனுமை 21-ம் தேதியன்று தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இந்நிலையில், மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ள அவரின் பெற்றோருக்கு உத்தரவிடும்படி காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. நேற்றைய தினம் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் குழு ஆய்வுசெய்து அறிக்கையைச் சமர்ப்பிக்க அறிவுறுத்தியதோடு, இன்று காலை 11-க்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளும்படி பெற்றோர் தரப்புக்கும் கெடு விதித்தது. ஆகவே, இன்று (23.07.2022) காலை 6 - 7 மணி அளவில் தங்களது மகளின் உடலை பெற்றுக்கொள்வதாக பெற்றோர் தரப்பினர் நீதிமன்றத்தில் பதில் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, ’மாணவியின் இறுதி சடங்கில் வெளியூர் ஆட்கள் பங்கேற்க கூடாது. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்' என்று மாணவியின் சொந்த ஊர்ப் பகுதியில் காவல்துறை தரப்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மாணவியின் உடலைப் பெற்றோரிடம் ஒப்படைக்கும்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமலிருக்க கள்ளக்குறிச்சி மருத்துவமனை, தனியார் பள்ளி வளாகம், மாணவி உடல் எடுத்துச் செல்லப்படும் சாலை, பெரிய நெசலூர் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஐஜி, 1 டிஐஜி, 6 எஸ்.பி தலைமையில் சுமார் 1,500 போலீஸார் அதிகாலை முதலே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனை அருகே இரண்டு வஜ்ரா போலீஸ் வாகனங்களும் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டன.