Published:Updated:

2.14 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிப்போட்ட கொரோனா- கைகொடுக்குமா அரசு?

மீன்வளத்துறை
மீன்வளத்துறை

650 மீனவர்கள் தனியார் வேன், பஸ் மூலமாக மங்களூரிலிருந்து ராமநாதபுரம் நோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் தமிழக-கர்நாடக எல்லையில் சத்தியமங்கலம் பகுதியில் நிறுத்தப்பட்டனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய ஊரடங்கு, இன்னும் எவ்வளவு நாள்களுக்கு நீடிக்கும் என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. மக்கள் வீட்டிலேயே குடும்பத்தோடு பாதுகாப்பாக, அதேநேரம் 'பசியின்றி' இருக்க அரசு சில நிவாரணங்களை வழங்கியிருந்தாலும், அவை போதுமானதாக இல்லை. ஊரடங்கின் பாதிப்புகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஒரே மாதிரி இருக்கவில்லை. இந்நிலையில், நிவாரணம் மட்டும் ஒரே மாதிரி கொடுப்பது சரியான செயல்திட்டமாக இருக்காது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்களின் நெருக்கடிகள் ஓரளவுக்குப் பதிவாகி வருகின்றன. ஆனால், மீன்பிடித் தொழிலாளர்களின் பாதிப்புகள் போதிய கள எதார்த்தத்துடன் பதிவாகவில்லை. தமிழகத்தில் சுமார் 2.14 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். மேலும், மீன் விற்பனை மற்றும் ஏற்றுமதி, சார்புத் தொழில்கள் எனப் பல லட்சம் பேர் இந்தத் துறையைச் சார்ந்துள்ளனர். எப்போதும் கவனம் பெறாத மீன்பிடித் தொழிலாளர்களின் அவலநிலை கொரோனா காலத்திலும் தொடர்கிறது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த 500 படகுகளில் 6,000 மீனவர்கள், ஏப்ரல் மாத முதல் வாரத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான மீன்களுடன் கரை திரும்பினர்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், மீன்பிடித் துறைமுகங்களின் செயல்பாடு, மீன் விற்பனை அனைத்தும் உடனடியாக முடக்கப்பட்டன. ஆனால், ஏற்கெனவே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று மார்ச் 25-ம் தேதிக்கு மேல் கரை திரும்பும் மீனவர்களின் நிலை என்ன, அவர்கள் பிடித்துவரும் மீன்களை ஏற்றுமதி செய்ய என்ன வழி என்ற கேள்விகளுக்கு அரசிடம் எவ்வித பதிலும் இல்லை. அரசு விதித்த ஊரடங்குக் கட்டுப்பாடுகளில் மீன்பிடித் தொழில் குறித்த புரிதலற்ற போக்கே வெளிபட்டது.

இயந்திரப் படகுகளைப் பொறுத்தவரை தினமும் செல்லும் படகுகள், வாரந்தர தங்கு தொழில் படகுகள், ஒருமாதத்துக்கு மேல் கடலில் தங்கி மீன் பிடிக்கும் படகுகள் எனப் பல வகைகள் உண்டு. சென்னை, காசிமேடு துறைமுகப் பகுதியில் ஒரு மாதத்துக்கு மேல் கடலில் தங்கித் தொழில் செய்யும் படகுகள், சென்னையிலிருந்து கிளம்பி வங்கதேச எல்லை வரைகூடச் சென்று மீன்பிடிப்பது வழக்கம். தென்தமிழக மீனவர்கள், குறிப்பாகக் குமரி மீனவர்கள் பல நூறு கடல் மைல்கள் வரை சுமார் இரண்டு மாதம் பயணித்து இந்தியக்கடல், அரபிக்கடல் எல்லையெனப் பரந்து விரிந்து மீன்பிடிக்கக்கூடியவர்கள்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த 500 படகுகளில் 6,000 மீனவர்கள், ஏப்ரல் மாத முதல் வாரத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான மீன்களுடன் கரை திரும்பினர். பொதுவாக, பிப்ரவரி மாதத்தில் கடலுக்குச் செல்பவர்கள், ஈஸ்டர் பண்டிகையை மையமாக வைத்தே கரை திரும்புவது வழக்கம். அரபிக்கடல் பகுதியில் மீன்பிடித்துவிட்டு மீனவர்கள் கரையை அடைந்தவுடன், மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அவர்கள் பிடித்துவரும் மீன்களைச் சந்தைப்படுத்தவும் ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திற்குத் தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பாகக் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இருந்தும், மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை.

மேலோட்டமான மருத்துவப் பரிசோனைகளுக்குப் பிறகு மீனவர்கள் கரையேற அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் பிடித்துவந்த மீன்களை விற்பனைக்குக் கொண்டுசெல்லவோ, பதப்படுத்தவோ எவ்வித ஏற்பாடுகளையும் செய்யவில்லை. ஒருவாரத்துக்கும் மேல் துறைமுகத்திலேயே கிடந்து பெரும்பாதி மீன்கள் அழுகிப்போனதால் வேறு வழியின்றிப் புதைத்துள்ளனர்.

மீன் விற்கும் பெண்கள்
மீன் விற்கும் பெண்கள்

பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து, மீனவர்கள் தம் கடுமையான உழைப்பைச் செலுத்திப் பிடித்த மீன்களை அழுகிப்போக விடுவதுதான் அரசாங்கத்தின் தேசியப் பேரிடர் கால மேலாண்மையா. மீனவர்களின் இந்த இழப்பீட்டை ஈடுசெய்வது யார். தேசமே உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள சூழலில், மீன்வளத்தை முறையாகப் பயன்படுத்தவேண்டியது அரசின் கடமையல்லவா?

கடந்த மார்ச் 12-ம் தேதி கொச்சினிலிருந்து ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மற்றும் நாகையைச் சேர்ந்த மீனவர்கள் மார்ச் 30-ம் தேதி கரை திரும்ப முற்பட்டனர். கொச்சி துறைமுகத்தில் கரையேறினால் ஊரடங்கு காரணமாகக் கேரளாவிலிருந்து தமிழகம் வர முடியாது. ஆகவே, நேரடியாக ராமநாதபுரம் மாவட்டத்தின் மூக்கையூர் துறைமுகத்தில் கரையேற முயன்றனர். ஆனால், கொரோனா தொற்று அச்சத்தால் அந்தப் பகுதி மக்கள் அவர்களை அனுமதிக்கவில்லை. ஒருநாள் கடலிலேயே காத்திருந்தவர்களைப் பாம்பன் துறைமுகத்தில் கரையேற்ற மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. மருத்துவப் பரிசோதனை செய்து தொற்று இல்லையென்று உறுதிப்படுத்திய பின், அவர்கள் சமூகக் கூடத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். மீனவர்கள் கரையேறினார்களே தவிர, அவர்கள் பிடித்து வந்த சுமார் இரண்டு டன் சூரை மீனைக் கரையிறக்க உடனடி அனுமதி கிடைக்கவில்லை. மீன்களைக் கரையிறக்கத் தாமதம் ஆனதால், மிகக் குறைந்த விலைக்கு விற்றதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

மீன்வளத்துறை
மீன்வளத்துறை

மங்களூர் துறைமுகத்தில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், ஊரடங்கு அறிவிக்கபட்டதும் தனியார் வேன்கள் மூலம் சொந்த ஊர் திரும்ப முயற்சி செய்தனர். முதலில் இரண்டு வேன்களில் வந்த 39 மீனவர்களைத் தமிழக-கர்நாடக எல்லையில் இறக்கி, மூன்று நாள்கள் பொது மண்டபத்தில் மருத்துவப் பரிசோதனை செய்த பிறகு பார்த்திபனூரில் தனிமைப்படுத்தினர். மீண்டும் மார்ச் 27-ம் தேதியன்று 650 மீனவர்கள் தனியார் வேன், பஸ் மூலமாக மங்களூரிலிருந்து ராமநாதபுரம் நோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் தமிழக-கர்நாடக எல்லையில் சத்தியமங்கலம் பகுதியில் நிறுத்தப்பட்டனர். நெடுஞ்சாலையில் காட்டின் நடுவே, இரண்டு நாள்கள் காக்க வைக்கப்பட்டவர்களை, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் தமிழக மீன்வளத்துறையும் தலையிட்டுச் சொந்த ஊருக்கு அழைத்து வந்தது.

இதேபோல் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களின் துறைமுகங்களில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் பலர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் ஆங்காங்கே தவித்து வருகின்றனர். சில படகு முதலாளிகள் மீனவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கொடுத்துப் படகிலேயே தங்கியிருக்கச் செய்துள்ளனர். சிறிய படகில் குறைந்தது பத்திலிருந்து பதினைந்து பேர் வரை சுகாதாரமற்ற சூழலில் முடங்கிக் கிடக்கிறார்கள்.

இந்தியாவில் பிடிக்கப்படும் மீனின் அளவு 2011-2012 ஆண்டில் 5.3 மில்லியன் டன்கள். அது 2019-20 காலகட்டத்தில் 13 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.
தேசிய மீனவர் பேரவை

சிறுதொழில் மீன்பிடித்தலை ஊக்குவித்தல்

ஊரடங்கு காலத்திலும் மீன்பிடித்துறை இயங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தேசிய மீனவர் பேரவை (National Fisheries Forum-NFF) மத்திய அரசுக்குச் சில மாற்றுப் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது. அந்த அறிக்கையின் சாராம்சமானது, "இந்தியாவில் பிடிக்கப்படும் மீனின் அளவு 2011-2012 ஆண்டில் 5.3 மில்லியன் டன்கள். அது 2019-20 காலகட்டத்தில் 13 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. 2011-12 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேசிய கணக்கெடுப்பின்படி (NSSO, Report No. 558) சராசரி இந்தியனின் மீன் உணவு நுகர்வு ஒரு மாதத்துக்கு நகரப்புறத்தில் 0.25 கிலோகிராமாகவும் கிராமப்புறத்தில் 0.27 கிலோகிராமாகவும் உள்ளது. இதுவே, கடற்கரை மாவட்டங்களில் இன்னும் சில மடங்கு கூடுதலாகவும் மீனவர்கள் மத்தியில் 15 மடங்கு கூடுதலாகவும் உள்ளதாக NSSO (National sample survey organisation) அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மீன்பிடிக் கொள்திறன் மூன்று மடங்கு அதிகரித்துள்ள சூழலில் மக்களின் மீன் உணவு உட்கொள்ளும் சதவிகிதமும் அதிகரித்திருக்கும். இந்திய மக்களின் உணவுப் பழக்கத்தில் மீன் உணவுக்கு முக்கியப் பங்குள்ளது என்பதையே இவை காட்டுகின்றன. மற்ற உணவுப் பொருள்களில் தட்டுப்பாடு ஏற்படுகின்ற சூழலில், மீன் உணவும் இல்லையென்றால் பெரும் உணவு நெருக்கடியை மக்கள் எதிர்கொள்ள நேரிடும். எனவே, சிறுதொழில் மீன்பிடித்தல் நாள்தோறும் இயங்கிட மீன்வளத்துறையின் மூலம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், இரானிலுள்ள குமரி மாவட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை உள்ளதாகவும் அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, தங்குமிடம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல மீன்வளம் பற்றி நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்துவரும் பேராசிரியர் ஜான் குரியனும் சிறுதொழில் மீன்பிடித்தலை ஊக்குவிப்பதன் மூலம் நோய்ப்பரவல் இன்றி மக்களுக்குச் சிறந்த புரத உணவை வழங்க முடியுமென்று கேரள அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மீன் விற்பனை
மீன் விற்பனை

இது தமிழகம் உள்ளிட்ட அனைத்து கடற்கரை மாநிலங்களுக்கும் பொருந்தும். கும்பல் கூடுவதைத் தடுக்க, ஏலம்விடும் முறையைத் தவிர்க்கப் பரிந்துரைத்துள்ள அவர், மீனவர்களுக்கு நியாயமான விலை கிடைத்திட மாற்று ஏற்பாடாகக் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் மீன் விற்பனையை ஒருங்கிணைக்குமாறு பரிந்துரைத்துள்ளார். ஒரு குறிப்பிட்ட மீனின் கடந்த 10 நாள் விலையின் சராசரியை வைத்து மீன் விலையைக் கூட்டுறவு அமைப்புகள் நிர்ணயித்தால், மீனவர்களுக்கு நல்ல தொகை கிடைக்கும். மீன் விற்கும் சிறு வியாபாரிப் பெண்களும் சரியான விலையில் மீன்களைப் பெறுவார்கள். இடைத்தரகர்களின் ஆதிக்கம் முற்றிலும் தவிர்க்கப்படுவதோடு, பொது மக்களுக்கும் குறைந்த விலையில் கிடைக்கும். கேரளாவில் இம்முறை அமல்படுத்தப்பட்டு மீனவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதால், அந்த மாநிலச் சிறுதொழில் மீனவர்கள் அதைப் பெரிதும் வர வேற்றுள்ளனர்.

நாட்டுப் படகில் மீன்பிடிக்கும் சிறுதொழில் மீனவர்களே தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ளனர். கட்டுமரம், ஃபைபர் படகு, வல்லம் போன்ற சிறிய கலன்களில் பயணித்து அண்மைக்கடல் பகுதியில் சிறுவலை, தூண்டில்களைக் கொண்டு மீன்பிடிக்கும் இந்த மீனவர்களின் நலன் காக்கத் தமிழக அரசு மேற்குறிப்பிட்டுள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கருவாடு
கருவாடு

கூட்டுறவு அமைப்புகளின் மூலம் மீன் வர்த்தகத்தை மேற்கொள்ளும் நடைமுறை தமிழகத்தில் ஏற்கெனவே அறிமுகமாகியுள்ளது. தமிழக மீனவளத்துறை முன்முயற்சி எடுத்து மீன் விற்பனைக்கான கூட்டுறவு அமைப்பைக் (Fish Marketing Societies) கடந்த ஆண்டே தென்கடற்கரை மாவட்டங்களில் அமைத்துள்ளது. இந்த அமைப்புகளின் அனுபவத்தையும் கேரளாவில் பின்பற்றிய வழிமுறைகளையும் ஒருங்கிணைத்து இக்காலகட்டத்தில் கூட்டுறவு அமைப்புகளை மாநிலம் முழுக்க அமைத்துச் செயல்படுத்த வேண்டும். மீனவக் கிராம நிர்வாகங்கள், மீனவ அமைப்புகளுடன் கலந்தாலோசித்து கூட்டுறவு அமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும். இதன்மூலம் முறையான வர்த்தம் உறுதி செய்யப்படுவதோடு, நெருக்கடிக் காலத்தில் மக்களின் உணவு மற்றும் புரதத் தேவையும் நிறைவேற்றப்படும். அதோடு, மீனவர்களும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வார்கள்.

- முனைவர்.அ.பகத் சிங், மானுடவியல் ஆய்வாளர், புதுச்சேரி பிரெஞ்ச் ஆய்வு நிறுவனம்

ஜெ. பிரபாகர், முனைவர் பட்ட ஆய்வாளர், TISS, மும்பை.

அடுத்த கட்டுரைக்கு