Published:Updated:

`சென்னையில் குறைந்தது.. மற்ற மாவட்டங்களில் அதிகரிக்கிறது!’ - தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?

ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை
ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

தளர்வில்லாத முழு ஊரடங்கு காரணமாக ஓரளவுக்கு சென்னையில் பாதிப்பு குறைந்தாலும், மற்ற மாவட்டங்களில் அதிகரிப்பதாக தகவல் வருவதால் ஊரடங்கை நீட்டிக்கலாமா? என முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துக் கொண்டே சென்றதால், கடந்த மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதும் கூட பொதுமக்கள் வெளியே சுற்றிக் கொண்டே திரிந்ததால் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. அதனால், தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு மே 24-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்ததே தவிர முற்றிலுமாக நின்றதாக தெரியவில்லை. சென்னையில் பாதிப்பு ஓரளவு குறைந்தாலும் கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

கோவை கொரோனா
கோவை கொரோனா

இதன் காரணமாக ஊரடங்கினை நீட்டிப்பது குறித்தும், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதில், மக்கள் நல்வாழ்வு, வருவாய், காவல்துறை மற்றும் பொதுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அதிகாரிகள் இதே முழு ஊரடங்கை மேலும் ஒரு வார காலம் நீட்டிக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.

அப்படி ஊரடங்கு நீட்டிக்கப்படுமானால் எந்த வகையில் அது அமையும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டோம். "ஒரு அலை முடிந்து இரண்டாவது அலை வந்தும் மக்களிடம் பெரிய விழிப்புணர்வு இருப்பதாக் தெரியவில்லை. வடக்கில் நாள்தோறும் இறப்புகள் ஏற்பட்டு பிணத்தை புதைக்க முடியாமல் தூக்கி வீசிச் செல்கின்றனர். அந்த அளவுக்கு தமிழகத்தில் நிலைமை மோசமடையவில்லை. எனினும், தொடர்ந்து மக்கள் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்டால் அத்தகைய நிலை தமிழகத்திலும் வர வாய்ப்புள்ளது.

முழு ஊரடங்கு
முழு ஊரடங்கு

முதல் கொரோனா அலையின்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தளர்வு சிறிதளவும் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களுக்குத் தேவையான காய்கறிகள் இப்போது போலவே நேரடியாக மக்களுக்கு வண்டிகளில் விற்கப்பட்டது. ஓட்டல்களும் அடைக்கப்பட்டன. ஆனால், வெளியூரிலிருந்து சென்னை வந்து பணிபுரிபவர்கள், படிப்பவர்களுக்கு வசதியாக தற்போது ஓட்டல்கள் திறக்கவும், பார்சலுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே உணவு விநியோகமும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அரசின் உத்தரவை தொடர்ந்து மீறி வருவதால், கடந்தாண்டு போல 144 தடை உத்தரவுடன் கூடிய ஊரடங்கினை அமல்படுத்த வேண்டும் என முதல்வரிடம் கோரியுள்ளோம். முதல்வர் மக்களின் வாழ்வாதாரத்துக்காகவே யோசிக்கிறார். இன்றோ நாளையோ ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வரும்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு