Published:Updated:

கழிவுநீரில் குடிநீரை கொட்டிய லாரி டிரைவர்!- முதல்வர் விழா அருகே நடந்த அதிர்ச்சி

எஸ்.மகேஷ்

சென்னை எண்ணூர் பகுதியில் குடிநீரை ஏற்றிவந்த லாரி டிரைவர், கழிவுநீரில் குடிநீரை திறந்துவிட்ட சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குடிநீரை வீணாக்கும் டிரைவர்
குடிநீரை வீணாக்கும் டிரைவர்

சென்னை எண்ணூர் கத்திவாக்கம் தாழம்பூ குப்பத்தில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பாதாளச் சாக்கடை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்த விழாவில் சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி மற்றும் சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

குடிநீர் ஏற்றி வந்த மினிலாரி
குடிநீர் ஏற்றி வந்த மினிலாரி

இந்தச் சமயத்தில் விழா மேடை அமைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே குடிநீர் சப்ளை செய்யும் மினி லாரி சென்றது. மேடான பகுதியில் லாரி ஏற முயன்றபோது அதன் டயர்கள் மணலில் சிக்கியது. இதனால் மினி லாரி அதே இடத்தில் நகரமுடியாமல் நின்றது. லாரி டிரைவரும் பல தடவை முயற்சி செய்தும் லாரி அங்கிருந்து நகரவில்லை. இதனால் லாரியில் உள்ள குடிதண்ணீரை வெளியேற்றினால் அங்கிருந்து சென்றுவிடலாம் என டிரைவர் கருதினார்.

உடனே அவர், குடிநீரை அந்தப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் திறந்துவிட்டார். குடிநீர் வீணாவதைப் பார்த்த பொதுமக்கள் டிரைவரிடம், `ஏன் இப்படிச் செய்கிறீர்கள்' என்று கேள்வி கேட்டனர். அதற்கு லாரி டிரைவர் அளித்த பதில் பொதுமக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

விழா மேடை
விழா மேடை

லாரி டிரைவர் குடிநீரை வீணாக்கியதை சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். அதை சமூக வலைதளங்களிலும் பதிவு செய்தனர். சென்னையில் குடிநீருக்காக மக்கள் காலிக் குடங்களுடன் யுத்தம் நடத்திவரும் நேரத்தில் குடிநீரை லாரி டிரைவர் வீணாக்கிய செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய பொறியாளர் ஜெகநாதனை தொடர்பு கொண்டோம். அவரிடம் லாரி டிரைவர் குடிநீரை வீணாக்கிய சம்பவத்தைக் கூறியதும், சம்பந்தப்பட்ட லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். சிறிது நேரத்துக்குப்பிறகு மீண்டும் நம்மை தொடர்புகொண்ட ஜெகநாதன், ``லாரியின் டயர் பஞ்சராகியதால் டிரைவர் குடிநீரை வீணாக்கியுள்ளார். சம்பந்தப்பட்ட டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்''என்று தெரிவித்தார்.