புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பிலாவிடுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், பிலாவிடுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (29) - மாதவி (24) ஆகியோருக்கு திருமண விழா நடைபெற்றது. இருதரப்பினரின் உறவினர்களும் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ராமச்சந்திரனனின் உறவினராக ராமராஜனும் (30), மாதவியின் உறவினராகத் தேவியும் (27) கலந்துகொண்டனர். ராமராஜன் மற்றும் தேவி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். திருமணம் முடிந்த பின்பு இரு குடும்பத்தினரும் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போதுதான், ராமராஜனும் தேவியும் ஒருவரை ஒருவர் பார்க்க நேரிடுகிறது. இருவரும் தங்களது சைகை மொழியில் முதலில் ஒருவரை, ஒருவர் அறிமுகப்படுத்திக்கொள்கின்றனர். தொடர்ந்து, இருவரும் நீண்ட நேரமாக உரையாடிக்கொண்டிருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் தங்களது காதலை வெளிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, உடனே பெற்றோர்களிடம் கூற, பெற்றோர்கள் இருவீட்டாரும் இணைந்து பேசி நிச்சயம் செய்து கையோடு உடனே திருமணத்தையும் செய்து முடித்துள்ளனர். காலையில் இருவருக்கும் இடையே மலர்ந்த காதல், மாலையில் இருவரையும் திருமணப் பந்தத்தில் இணைத்தது.
இதுபற்றி இவர்களின் உறவினர்கள் கூறும்போது, "மணமகனுக்கும் பல்வேறு வரன் பார்த்தும் அமையவில்லை. இதேபோல, மணமகளுக்கு ஏராளமான வரன் பார்த்ததாகக் கூறுகின்றனர். இருவரையும் ஒன்றாகப் பார்க்கும்போதே இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்ற ஆசை எங்களுக்கு இருந்தது. ஆனாலும், இருவருமே மாற்றுத்திறனாளிகள் என்பதால், முதலில் தயக்கம் இருந்தது. சில மணி நேரங்களில் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு அவர்களே, நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்கிறோம் என்று கூறினர்.

இருவருக்கும் பிடித்துப்போய்விட்டது. ஜாதகம், பொருத்தம் எல்லாம் பார்க்க வேண்டும் என்று பலரும் குழப்பிவிடுவார்கள் எனவேதான் மாலையிலேயே நல்ல நேரத்தில் திருமணத்தை நடத்தி வைத்துள்ளோம்" என்றனர்.
மாற்றுத்திறனாளிகளின் திருமண விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு கறம்பக்குடி வர்த்தக சங்கத்தினர் தாமாக முன்வந்து திருமண விழா சாப்பாடு போட்டு அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளனர்.