Published:Updated:

நேப்பியர் பாலம் அருகே பொக்லைன்கள்: இந்தக் காட்சியை தினமும் பார்க்கலாம்... என்னதான் செய்கிறார்கள்?

நேப்பியர் பாலம்
News
நேப்பியர் பாலம்

மற்ற இடங்களில் ஆறுகள் கடலைச் சேரும்போது இந்தச் சிக்கல் நிலவுவதில்லை. அப்படியிருக்க, ஏன் கூவத்தில் மட்டும் இந்தச் சிக்கல் நிலவுகிறது?

மதராசபட்டினத்தின் முகவரியாக விளங்குகிறது நேப்பியர் பாலம். சென்னை நதிகள் கடலைச் சென்றடையும் `முகத்துவாரம்’, இந்தப் பாலத்துக்கு அடியில்தான் அமைந்துள்ளது. நேப்பியர் பாலத்தின் கீழ் ஓடும் கூவம் ஆறு, மெரினாவில் கடலைச் சேரும் இடமும் இதுதான். அந்த இடத்தில் சில ஆண்டுகளாக, நிதம் நிதம் பொக்லைன் வாகனங்களில் மணலை அள்ளி அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகிறது. ஏன் தொடர்ந்து மணலை அப்புறப்படுத்த வேண்டும்? அதுவும் ஒரு பொக்லைன் இயந்திரம் கொண்டு பணிகள் மேற்கொண்டால் பரவாயில்லை, பல பொக்லைன் இயந்திரங்கள் குவிக்கப்பட்டுள்ளதன் காரணம் என்ன?

நேப்பியர் பாலம்
நேப்பியர் பாலம்

இதற்கு விளக்கம் தேட, நேப்பியர் பாலத்துக்கு முன்னே வலதுபுறமாக இறங்கும் மணல் சாலையில், பாலத்தின் அடிவாரத்தை அடைந்தோம். அங்கு மணல் குவியல்களுக்கிடையே 4-6 பொக்லைன் இயந்திரங்களில் வேலை நடந்துகொண்டிருந்தது. பொக்லைன் இயந்திரத்தை இயக்கும் ராஜாவிடம், இங்கு என்ன வேலை நடந்துகொண்டிருக்கிறது என்று விசாரித்தோம். "முன்னாடி வேலை பார்க்குற ரெண்டு வண்டிக்கும், அங்கே கடல் பக்கத்துல வேல பார்க்குற நாலு வண்டிக்கும் சமபந்தம் இல்லை. நாங்க கூவத்துல அழுக்கு தேங்கினதை அடைப்பெடுக்குறோம். அப்படியே ஓரமா இருக்குற சின்னச் சின்ன மரம், வேர், செடி எல்லாத்தையும் அப்புறப்படுத்துறோம்" என்று கூறினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கூவம் கடலை அடையும் பாதையைக் கடந்து, மணல் குவியல்களில் ஏறி, மணலை அப்புறப்படுத்தும் பொக்லைன்கள் அருகில் சென்றோம். அங்கு பொக்லைன் ஓட்டுநராக இருக்கும் லிங்கம், ``இது தினசரி வேலைதான். நான் இங்கே ரெண்டு வருஷமா இந்த வேலைல இருக்கேன். தினமும், 5-6 மணி நேரம் , இதே மாதிரி பாதையை அடைக்குற மணலை அள்ளி தனியா குவிப்போம். அப்போதான் கூவம் கடல்ல கலக்கும். பொதுவா, ஒரு வண்டிதான் நிக்கும். ஆனா இப்போ மழைக்காலம்கிறதால, ரெண்டு மூணு வண்டி அதிகமா போட்டிருக்காங்க. நாங்க தினமும் இதே வேலையைத்தான் மாறி மாறிப் பண்றோம். மழை வர்றப்போ, மணல் சரிஞ்சு, மறுபடியும் தேங்கத்தான் செய்யுது. மழை நேரத்துல வேல பார்க்குறது ரொம்பக் கஷ்டம். வண்டியை இதுவரைக்கும் கொண்டுவர முடியாது. அலை அதிகமா அடிக்கும். அதனாலதான் இன்னும் ரெண்டு வண்டி சேத்துப் போட்டிருக்காங்க" என்று கூறி முடித்தார்.

நேப்பியர் பாலம் அருகே பொக்லைன்கள்: இந்தக் காட்சியை தினமும் பார்க்கலாம்... என்னதான் செய்கிறார்கள்?

மற்ற இடங்களில் ஆறுகள் கடலைச் சேரும்போது இந்தச் சிக்கல் நிலவுவதில்லை. அப்படியிருக்க, ஏன் கூவத்தில் மட்டும் இந்தச் சிக்கல் நிலவுகிறது? இது குறித்து, இந்தப் பணிகளின் மேற்பார்வையாளர, புஜ்ஜி நாயுடுவிடம் பேசினோம். "மத்த ஆறு எல்லாமே அதிக ஓட்டத்தோட கடலைக் கலக்கும். அதனால மணல் தேங்காது. ஆனால் கூவம், ரொம்ப மெதுவான ஓட்டம் உள்ள ஒரு ஆறு. அது அதிக அலைகள்கொண்ட கடல்ல கலக்குறப்போ, அலைகளோட வேகம் அதிகமா இருக்கும். அதனால மணல் பாதையை மூடிரும். இதை தினமும் அப்புறப்படுத்திக்கிட்டே இருக்கணும். இல்லைன்னா, மழைக் காலத்துல கூவம் தேங்கி அதிக பாதிப்புகள் ஏற்படுத்தும். இதனால இதை தினசரி வேலையா பார்க்குறோம். மழைக்காலத்துல, அதிக அலைகள் வரும், அதனால வேலையும் அதிகம்” என்கிறார் அவர்.

இப்படி முடிவே இல்லாமல் தொடர்ந்து அப்புறப்படுத்திக்கொண்டே இருப்பது மட்டும்தான் தீர்வா? வேலை நடக்கும் இந்தப் பாதைக்கு இணையான அக்கரையில், கடலோர காவல்படை அலுவலகம் பின், மணல் தளத்துக்கு முன் கருங்கல் பாதை உருவாக்கப்பட்டிருக்கிறது. அலைகள் கரைக்கு மணலைத் தள்ளுவதை இத்தகைய கருங்கல் பாதைகள் தடுக்கும். இதேபோல், இந்த முகத்துவாரம் இருக்கும் பகுதியில் அமைப்பது சாத்தியமா என்று மேற்பார்வையாளரிடம் விசாரித்ததில், இன்னும் மூன்று மாதங்களில் அதேபோல் இங்கும் பாதை அமைக்கவிருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவித்துள்ளனர் என்றும், ஆனால் அதற்கான ஆயத்த பணிகள் தொடங்கிவிட்டதா என்பது குறித்துத் தனக்கு தெரியவில்லை என்றும் கூறினார்.