Published:Updated:

`அ.தி.மு.க அரசு செய்ததைத்தான் நாங்களும் செய்கிறோம்!' - கொரோனா மரணங்களில் தமிழக அரசு மழுப்புவது ஏன்?

கொரோனா மரணங்கள்
கொரோனா மரணங்கள்

``இந்த முறையில் கணக்கிட்டே இத்தனை மரணங்கள் என்றால் உண்மையான மரணங்களின் எண்ணிக்கை நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும்” என்கின்றனர் இதை உற்றுக் கவனித்து வருகின்றவர்கள்.

`கொரோனா மரணங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன’ என்று தொடர்ச்சியாகப் புகார் கூறப்பட்டு வரும் நிலையில்,``கொரோனா காலத்தில் மரணமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் `இறப்புச் சான்றிதழ்களை’ (death certificates) நிபுணர் குழுவைக் கொண்டு தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நபர்கள் கொரோனாவின் தாக்கத்தாலேயே அபாய கட்டத்துக்குச் செல்கின்றனர். குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு, அவர்கள் உடலில் கொரோனா வைரஸ் இருப்பதில்லை. ஆனால், கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு தீவிரமாகி சிலர் மரணமடைகின்றனர். அப்படியான சூழலில், அதை கொரோனா மரணமாகக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அதாவது, `ஒருவர் இறக்கும்போது அவர் கொரோனா பாசிட்டிவ் ஆக இருக்க வேண்டும். அப்போதுதான் அதை கொரோனா மரணமாக எடுத்துக்கொள்வோம்’ என்பது அரசின் வாதமாக இருக்கிறது.

அது எப்படிச் சரியானதாக இருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்கள் பெரும்பாலும் கொரோனா பாதித்த உடனே இறப்பதில்லை. பத்துப் பதினைந்து நாள்களுக்கு மேல் சிகிச்சை பெற்ற பிறகே இறக்கின்றனர். அந்தக் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களுக்கு கொரோனா `நெகட்டிவ்’ ஆகிவிடுகிறது; ஆனால், மரணத்துக்கு கொரோனா பாதிப்புதானே காரணமாக இருக்கிறது என்று அழுத்திக் கேட்டால் `இது எங்கள் முடிவல்ல, ஐ.சி.எம்.ஆர் விதிகள் அப்படித்தான் இருக்கின்றன. அ.தி.மு.க ஆட்சியின்போதும் இந்த ஐ.சி.எம்.ஆர் விதிகள்தான் பின்பற்றப்பட்டன’ என்று காரணம் சொல்கிறது தி.மு.க அரசு.

கொரோனா மரணங்கள்
கொரோனா மரணங்கள்

அ.தி.மு.க ஆட்சியின்போது,`கொரோனா மரணங்கள் மறைக்கப்படுகின்றன’ என்று போர்க்கொடி தூக்கிய தி.மு.க-வினர் இப்போது அதே குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்போது அ.தி.மு.க ஆட்சியிலும் ஐ.சி.எம்.ஆர் விதிகள்தான் பின்பற்றப்பட்டன. நாங்களும் அவற்றைத்தான் பின்பற்றுகிறோம் என்று கூறுவது நகைப்புக்குரியதாகவே இருக்கிறது. இதுதொடர்பான கேள்விகளை அதிகாரிகளிடம் எழுப்பினாலும் சரி ஆட்சியாளர்களிடம் எழுப்பினாலும் சரி மழுப்பலான / தெளிவில்லாத பதில்களே கிடைக்கின்றன. ``இந்த முறையில் கணக்கிட்டே இத்தனை மரணங்கள் என்றால் உண்மையான மரணங்களின் எண்ணிக்கை நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும்” என்கின்றனர் இதை உற்றுக் கவனித்து வருகின்றவர்கள்.

இதுதொடர்பாக ``இப்படித்தான் மறைக்கப்படுகிறதா கொரோனா மரணங்கள்?’’ என்ற தலைப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சுட்டிக்காட்டி விகடன் இணையதளத்தில் விரிவாக எழுதியிருந்தோம்.

இப்படித்தான் மறைக்கப்படுகின்றனவா கொரோனா மரணங்கள்? - அதிர்ச்சி நிலவரம்; அரசின் பதில் என்ன?

இந்த நிலையில்தான், ``கொரோனா தொற்றால் பலியாகும் நபர்களுக்கு `கொரோனா மரணம்’ என்று சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. `சுவாச செயலிழப்பு, மாரடைப்பு’ என்று வேறு ஏதாவதொரு காரணத்தையே குறிப்பிடுகின்றனர். இதனால் அவர்கள் அரசின் உதவியைப் பெற முடியாமல் போவதுடன், கொரோனாவின் உண்மையான தீவிரமும் மறைக்கப்படுகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு,``தமிழகத்தைப் பொறுத்தவரை, கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ் இல்லாவிட்டால் கொரோனா மரணங்கள் என்று பதிவு செய்யப்படுவதில்லை. மரணம் குறித்த தெளிவான பதிவுகள் இருந்தால்தான் எதிர்காலத்தில் தொற்று பரவலைச் சமாளிப்பது குறித்து ஆய்வு செய்ய முடியும்.

இறப்புகளைத் துல்லியமாகக் குறிப்பிடுவது நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும். வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்களை நிபுணர் குழுவைக் கொண்டு தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்த ஆரம்பகட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமியிடம் பேசினோம். ``அரசு கொரோனா மரணத்தைத் திட்டமிட்டே மறைக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளி நெகட்டிவ் என ரிசல்ட் வந்த பிறகு, மரணமடைந்தால் அது கொரோனா மரணம் இல்லை என்கிறனர். அது சரியான நடைமுறை கிடையாது என்பதுதான் எல்லோருடைய வாதமும். அதுமட்டுமல்ல `நெகட்டிவ்’ எனச் சொல்லப்படும் முடிவிலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஏனெனில், மருத்துவமனையில் சேர்வதற்கு முன்பு செய்யப்படும் பரிசோதனை முடிவுகளை நமக்குக் கொடுக்கின்றனர்.

ஸ்ரீராஜலட்சுமி
ஸ்ரீராஜலட்சுமி
`கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பது ஆதாரமற்ற தகவல்’ - விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்

ஆனால், மருத்துவமனையில் சேர்ந்து அபாயகட்டத்தில் இருக்கும்போது எடுக்கப்படும் பரிசோதனை முடிவை பெரும்பாலும் கொடுப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும் அந்தப் பரிசோதனை முறையாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்பதிலும் ஐயப்பாடு நிலவுகிறது. இப்படி இவர்கள் மரணத்தை மறைப்பதால், அந்தச் சடலத்தை சம்பந்தப்பட்டவர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று கூட்டத்தைக் கூட்டி சடங்குகள் செய்கின்றனர்; அதன்மூலம் பலருக்கு கொரோனா பரவுகிறது. ஒரு மரணம் மறைக்கப்படுகிறது என்றால் அதன்மூலம் பலருக்கு கொரோனா பரப்பப்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும். இந்த விஷயத்தில் இன்னொன்றை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. இங்கு வழங்கப்படும் இறப்புச் சான்றிதழ்களில் மரணத்துக்கான காரணத்தைக் குறிப்பிடுவதில்லை.

கொரோனா மரணம் என்றில்லை எல்லா மரணங்களுக்கும் அதுதான் நடைமுறையாக இருக்கிறது. அது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. ஒருவர் எதனால் மரணமடைந்தார் என்பதை மருத்துவமனையில் கொடுக்கும் மரண அறிக்கையில்தான் குறிப்பிடுகின்றனர். அந்த மரண அறிக்கை புரியாத வகையில் கிறுக்கலான எழுத்தில் இருக்கிறது. இதெல்லாம் உண்மையை மறைப்பதற்கான காரணங்களாக அமைகின்றன. இதுதொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறேன். இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணத்தைக் குறிப்பிட்டு வழங்க வழிவகை செய்ய வேண்டும். கொரோனாவால் இறந்தவர்களுக்கு உண்மையை மறைக்காமல் முறையான சான்றிதழ் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கையை வைத்திருக்கிறேன்.

Law (Representational Image)
Law (Representational Image)
Photo by Bill Oxford on Unsplash
Covid Questions: கொரோனா குணமான பின்னர் அவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவுமா?

ஏனெனில், பேரிடரால் மரணமடைகிறவர்கள் குடும்பத்துக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் இருக்கிறது. ஆனால், அதுகுறித்து இன்னும் அரசாணை எதுவும் வெளியிடவில்லை. அரசாணை வெளியிடப்படும்பட்சத்தில் கொரோனாவால் மரணமடைந்தவர்கள் குடும்பத்தினர் அந்த நிவாரணத்தைப் பெற முடியாமல் போகும். தவிர இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சில உதவிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்காமல் போகும். இவற்றையெல்லாம் மனதில் வைத்துதான் கொரோனா காலத்தில் மரணமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இறப்புச் சான்றிதழ்களை நிபுணர் குழுவைக் கொண்டு தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாண்புமிகு நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். நியாயம் கிடைக்கும் என்று காத்திருக்கிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு