கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் உணவகம் ஒன்றை நடத்தி வருபவர் எஸ்.குணராஜா. இவர் 2018-ம் ஆண்டு ரிட் மனுவை தாக்கல் செய்தார். அதில் நள்ளிரவு 1.30 மணி வரை தனது உணவகத்தை நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை என்றும், இரவு 10.30 மணிக்குள் உணவகத்தை மூடுமாறு வற்புறுத்தியதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடக்கூடும் என்று அஞ்சி, கடையை சீக்கிரமாகவே மூடுவதாகவும் அவர் புகார் அளித்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், `இரவில் தாமதமாகத் திறக்கப்படும் உணவகங்கள், நள்ளிரவு நேரங்களில் வேலை செய்பவர்களுக்கு, பெரும் உதவியாக இருக்கின்றன. சாலையோர உணவகங்கள், ஹோட்டல்கள் எப்போது திறக்க வேண்டும் அல்லது மூட வேண்டும் என்பதை ஒருதலை பட்சமாக ஆணையிட காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த உரிமையும் இல்லை. மேலும் இரவு நேர பாதுகாவலர்கள், டாக்சி ஓட்டுநர்கள், இரவு நேரப் பணியாளர்கள் என மற்றவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு உணவகத்தை நடத்தும் நேரத்தை நிர்ணயிக்கும் உரிமையானது அரசாங்கத்துக்கு மட்டுமே உள்ளது' என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், `மக்களின் பாதுகாவலர்களாக இருக்கும் காவல்துறை, உணவக உரிமையாளருக்குத் தொந்தரவு கொடுத்த சமூக விரோதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்காமல், மனுதாரரின் உணவகத்தை இரவு 10.30 மணிக்குள் மூடுமாறு வலியுறுத்தியது வெட்கக்கேடானது மற்றும் மிகவும் வருந்தத்தக்கது.
இரவு நேரத்தில் தாமதமாகத் திறக்கப்படும் உணவகங்கள், மக்களின் பெரும்பசியைத் தீர்க்கின்றன. அந்த நேரத்தில் போலீசார் கடையை மூடச்சொல்வது அரசியலமைப்பு சட்டம் 21-ன் படி உணவக உரிமையாளர்கள் தங்கள் வணிகத்தை மேற்கொள்வதற்கான அரசியலமைப்பு உரிமையையும், உணவு உண்ணும் நுகர்வோரின் அடிப்படை உரிமையையும் போலீசார் மீறுவதாக ஆகும்.

மாநில அரசு 2019-ம் ஆண்டு மே மாதம், அனைத்துக் கடைகள் மற்றும் நிறுவனங்களை வாரத்தின் ஏழு நாள்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்ததுள்ளத்தைச் சுட்டிக் காட்டிய நீதிமன்றம், வணிக நிறுவனங்களுக்கான நேரத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உள்ளது' என குறிப்பிட்டது.