Published:Updated:

`அடிபட்டா என்ன.. நாம வளர்த்தெடுப்போம்னு அவ சொன்னப்போ..!’- நெகிழும் ஜல்லிக்கட்டு சிறுமியின் அண்ணன்

``மாட்டுக்கு அடிபட்டால் என்ன அது நம்ம மாடு அதை நாம் வளர்த்தெடுப்போம்" என்று சொன்னபோது கண்ணீரே வந்துருச்சு உருகும் அண்ணன்.

யோக தர்ஷினி
யோக தர்ஷினி ( ஈ.ஜெ.நந்தகுமார் )

மற்ற மாவட்டங்களில் எப்படியோ, ஆனால் மதுரைக்கு பொங்கல் தான் `தீபாவளி’ம் கொண்டாட்டம் எல்லாம். ஒரு மாதத்துக்கு முன்பே காளைகளும், மாடுபிடி வீரர்களும் பரபரப்பாக தயாராகி விடுவார்கள். விவசாயிகள், போக்குவரத்து உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், வியாபாரிகள், உணவகங்கள், மீனாட்சியம்மன் கோயில் சுற்றுவட்டாரங்கள், கிராமங்கள் என்று எல்லாமே பிசியாக மாறிவிடும்.

யோக தர்ஷினி - காளையுடன்
யோக தர்ஷினி - காளையுடன்

இப்படி பரபரப்பாக பொங்கலை ஆர்வமாக வரவேற்கும் மதுரையில் பள்ளி மாணவி ஒருவர் ஜல்லிக்கட்டு மாடு வளர்த்து வாடிவாசலுக்கு அழைத்துச் செல்கிறார்.

மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்த விவசாயி முத்து - செல்வராணி தம்பதியின் மகள்தான் யோக தர்ஷினி. 9-ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவி தனது காளையை பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கும் அழைத்துச் சென்று பரிசைகளை பெற்று வருகிறார்.

இது குறித்து யோக தர்ஷினி, ``நான் மட்டுமல்ல, தலைமுறை தலைமுறையாக எங்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் காளைகளை வளர்ப்பதும் வாடிவாசலில் அவிழ்ப்பதும் வாடிக்கை தான். காலங்காலமாக கால்நடை வளர்ப்பில் எங்கள் குடும்பத்தினர் ஈடுபடுவதால் எனக்கு மட்டும் அவிங்க மேல ஆசை இருக்காதா..?

பயிற்சி முடிந்து வருகையில்
பயிற்சி முடிந்து வருகையில்

தற்போது எங்கள் வீட்டில் 8 பசுமாடுகள், 2 காளை மாடுகள், 1 சண்டை கிடா உள்ளது. நாங்க அண்ணன் தம்பி மொத்தம் 4 பேரு. 2 அண்ணங்கள் சம்பாரிச்சு கொடுக்கிற காச வச்சு நானும் என் தம்பியும் காளைகள பார்த்துக்கிறோம். என் மாடு பேரு வடமுத்து கருப்பு. `வடமு’ என்றுதான் கூப்பிடுவோம். தம்பியோட மாடு பேரு கருப்பு. இரண்டு மாடுகள் மீதும் பெயருக்கு பாகுபாடு இருந்தாலும் பாசங்காட்டுவதில் எங்களுக்குள் பாகுபாடு இருக்காது.

எங்கள் வீட்டு செல்லங்களுக்கு ஒன்றெனில் என்னால் தாங்க முடியாது. ஜல்லிக்கட்டில் வெற்றி பெறுவது, தோல்வியடைவது பற்றியெல்லாம் கவலை இல்லை. களம் காண்பதும் காளையர்களோடு எனது காளை துள்ளி விளையாடுவதும்தான் எனக்கு மனமகிழ்ச்சி. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு காளைகள் மட்டுமல்ல, நானும் தாயாராக வேண்டும்.

யோக தர்ஷினி
யோக தர்ஷினி

விரதம் இருந்துதான் ஜல்லிக்கட்டுக்குக் கொண்டு செல்வேன். நான் ஒரு சிறுமி என்பதால் எங்கு ஜல்லிக்கட்டுக்குச் சென்றாலும் அந்தக் கூட்டமே என்னையும், என் காளையையும் பார்த்து கை தட்டி உற்சாகப்படுத்தும். யார் என்று தெரியாதவர்கள் கூட நான் ஜெயிக்க வேண்டும் என குலதெய்வத்தை வேண்டிக்கொள்வார்கள். அது என்னை இன்னும் உற்சாகப்படுத்துகிறது" என்றார்.

யோக தர்ஷினியின் மூத்த அண்ணன் அர்ஜுன், ``என் தங்கை கடந்த மூன்று ஆண்டுகளாக உடன்பிறந்த சகோதரர் போல் பாவித்து காளையோடு உறவாடி, உரையாடி, பயிற்சிகள் பல அளித்து பராமரித்து வருகிறார். பராமரிப்பது மட்டுமல்ல ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டில் காளையை வாடிவாசலில் சென்று அவிழ்த்து விடுவதும் வரை என் தங்கைதான். உடன் நானும் என் தம்பி கெளதமும் பலமாக நிற்கிறோம். தங்கை யோக தர்ஷினியின் வடமுவும், தம்பி மாயகிருஷ்ணனின் கருப்பும் எங்கள் வீட்டுச் செல்லங்கள்.

மண் குத்து பயிற்சி
மண் குத்து பயிற்சி

ஒருமுறை வடமுவுக்கு பலமாக அடிபட்டுவிட்டது. மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் விற்றுவிடலாம் என்று குடும்பத்தினர் யோசித்தோம். ஆனால், தங்கை, ``அடிபட்டால் என்ன...? அதை நாமே மருத்துவம் பார்த்து சரிசெய்து வளர்த்தெடுக்கலாம்" என்று கூறினாள். தங்கை சொன்ன வார்த்தை எங்களை ஒரு முறை அசைத்துப் பார்த்தது. அப்போது கண்ணீரே வந்துவிட்டது. அவளிடம் மன்னிப்புக் கேட்டு தற்போது அதை நாங்களே வளர்த்தெடுக்கிறோம். இப்போது பல இடங்களில் வெற்றிகளையும் தேடித்தருகிறது வடமு" என்றார் நெகிழ்ச்சியாக!