Published:Updated:

மதுரை: விடுப்பு தர மறுத்த உயரதிகாரி; வீடியோ வெளியிட்ட காவலர்; சஸ்பெண்ட் செய்த காவல்துறை!

காவல்துறை
காவல்துறை

இதனால் பணிச்சுமையால் காவலர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். இந்த புகார் குறித்து முதலமைச்சர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டு

விடுமுறை நாளிலும் பனியாற்றும் காவலர்களுக்கு விடுப்பு தர மறுக்கும் உயர் அதிகாரிகளை பற்றிப் புகார் தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஆயுதப்படைக்காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை
காவல்துறை

மதுரை ஆயுதப்படை காவலர் அப்துல்காதர் இப்ராகிம் கடந்த மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், "அரசு விடுமுறை நாட்களில் பணியாற்றும் போலிஸ்காரர்களுக்கு அதை ஈடுகட்டும் வகையில் விடுப்பு வழங்கப்படுவதில்லை. இதை உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு விடுப்பு தர மறுப்பது மட்டுமில்லாமல் அவமானப்படுத்துகிறார்கள். இதனால் பணிச்சுமையால் காவலர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். இந்த புகார் குறித்து முதலமைச்சர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ காவல்துறையினர் மத்தியில் மட்டுமில்லாமல் பொதுவெளியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது காவலர் அப்துல்காதர் இப்ராகிம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அப்துல் காதர் இப்ராகிம்
அப்துல் காதர் இப்ராகிம்

இது பற்றி காவலர் அப்துல் காதர் இப்ராகிமிடம் பேசினோம், "நான் மதுரை ஆயுதப்படையில் 13 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். விடுமுறை தினம் உட்பட அனைத்து முக்கிய நாளிலும் ஓய்வில்லாமல் வேலை பார்க்கிறோம். இந்த நிலையில் எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய விடுப்பை வழங்குவதே இல்லை. ஈட்டிய விடுப்பை 6 மாதத்துக்குள் எடுத்துக்கொள்ள வில்லையென்றால் அது வீணாகிவிடும். நாங்கள் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? என்னைப்போன்ற சாதாரண காவல்துறையினர் மன இறுக்கத்தை குறைக்க இந்த விடுப்பு உதவும். அதைத் தர மறுக்கிறார்கள்.

பலமுறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டேன். எந்த நடவடிக்கையும் இல்லை. நேரில் முறையிட சென்றால் கொரோனா காலத்தில் யாரையும் பார்க்க முடியாது என்று அவமானப்படுத்தி விரட்டுவார்கள். அதற்கு பிறகுதான் முதலமைச்சர் கவனத்துக்கு செல்லட்டும் என்று வீடியோவில் முறையிட்டேன். விடுப்பு தர மறுத்து அவமானப்படுத்தும் 3 அதிகாரிகள் பெயரை குறிப்பிட்டேன்.

தற்போது என்னை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். ஆனால் என்னிடம் எந்தவொரு விசாரணையும் நடத்தவில்லை, நான் புகார் சொன்ன அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தவில்லை. ஒருதலைப்படசமான நடவடிக்கையாக உள்ளது.

கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா
கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா
Photo: NG Manikandan

காவல்துறையினருக்கு உள்ள உரிமைகள், சலுகைகள் பற்றி அரசு ஆணைகள் மட்டுமில்லாமல் ஆர்.டி.ஐ மூலமும் தகவல்களை பெற்று அதன் அடிப்படையில்தான் விடுப்பு கேட்டேன். அது மட்டுமில்லாமல் என் மத நம்பிக்கை அடிப்படையில் தாடி வைத்திருப்பதும் அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை. காவல்துறை விதிகளில் இதற்கு அனுமதி உள்ளது என்பதால் வைத்திருக்கிறேன். ஆனாலும் என்னை சந்தேகமாக பார்க்கிற கொடுமையையும் சகித்துக்கொண்டே பணி செய்து வந்தேன்.

இந்த நிலையில் விடுப்பு கேட்ட என்னை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். இதை நீதிமன்றத்தில் முறையிடுவேன்" என்றார்.

சஸ்பெண்ட் உத்தரவு
சஸ்பெண்ட் உத்தரவு

கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்காவின் வெளியிட்டுள்ள உத்தரவில், 'காவல்துறை மீது அவதூறான கருத்துகளை தொலைக்காட்சியிலும், சமூக ஊடகத்திலும் பரப்பிய காவலர் அப்துல் காதர் இப்ராகிம் மீது அதிகாரிகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகக்' குறிப்பிட்டுள்ளார். வீடியோ வெளியிட்ட காவலர் மீதான துறைரீதியான எடுக்கப்பட்ட நடவடிக்கை மதுரை காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு