Published:Updated:

மதுரை: `இரண்டாம் தலைநகர் கோரிக்கை!’ - கவனம் ஈர்த்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானம்

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார் ( என்.ஜி.மணிகண்டன் )

` `அன்னை மீனாட்சி குடிகொண்டிருக்கும் மதுரையில், தமிழகத்தின் நிர்வாகம் உருவாக வேண்டும்’ என தென்மாவட்ட மக்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் முதலமைச்சரையும் துணை முதலமைச்சரையும் வணங்கி, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.’

`முதலமைச்சர் வேட்பாளர் யார்?’ என்ற சர்ச்சை அ.தி.மு.க-வில் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், `தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை உருவாக்கிவிட வேண்டும்’ என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டிருப்பது அரசியல் தளத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்
என்.ஜி.மணிகண்டன்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சி நிர்வாகிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார் அவர். அந்தக் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களில் முக்கியமானது, தமிழகத்தின் இரண்டாம் தலைநகரம் பற்றியது.

`இந்தியாவில் பெரிய மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்துவருகிறது. சென்னையில் மக்கள்தொகைப் பெருக்கம் அதிகரித்துவரும் நிலையில், எதிர்கால நலன் கருதியும், தென்மாவட்ட வளர்ச்சிக்காகவும் மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக உருவாக்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக இருக்கிறது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

குஜராத்தில் காந்திநகரிலும் அகமாபாத்திலும் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைய உள்ளன. தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மூன்று தலைநகரங்கள் உள்ளன. வெளிநாடுகள் பலவற்றில் இரண்டு தலைநகரங்கள் உள்ளன

ஏற்கெனவே மதுரையில், சென்னை உயர் நீதிமன்றக் கிளை, சர்வதேச விமான நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வேலை ஆரம்பித்திருக்கிறது. அதேபோல், மதுரையிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் தூத்துக்குடி துறைமுகம் அமைந்துள்ளது. தென் மாவட்டச் சாலைகளை இணைக்கும் கட்டமைப்பு தேவைக்கேற்ப உள்ளது.

தலைநகர் நிர்வாகம் அமைவதற்குத் தேவைப்படும் 10,000 ஏக்கர் நிலத்தை மதுரை புறநகர்ப் பகுதிகளில் தேர்வு செய்ய முடியும். தென் மாவட்ட மக்களின் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அனைத்தும் இரண்டாம் தலைநகரை உருவாக்கினால்தான் அமையும்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்
என்.ஜி.மணிகண்டன்

`அன்னை மீனாட்சி குடிகொண்டிருக்கும் மதுரையில், தமிழகத்தின் நிர்வாகம் உருவாக வேண்டும்’ என தென்மாவட்ட மக்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் முதலமைச்சரையும் துணை முதலமைச்சரையும் வணங்கி மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வேண்டுகோள் விடுக்கிறது' என்று தீர்மானம் இயற்றி வலியுறுத்தியுள்ளார்கள். இதற்கு முன்னர் பல தலைவர்கள்வைத்த இந்தக் கோரிக்கையை ஆளும்கட்சி அமைச்சரே வலியுறுத்தியிருப்பது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு