Published:Updated:

மதுரை: "பணம் வேண்டாம்... புத்தகமாகக் கொடுங்கள்!"- புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் புத்தக மையம்

புத்தக மையம்
புத்தக மையம்

"புத்தக வாசிப்பை அதிகப்படுத்தணும். முழுமையா மாற்ற முடியுமானு தெரியல. ஆனா, என்னால முடிஞ்ச பணியை செய்வேன்!" - அசோக்குமார்

மதுரையைச் சேர்ந்த அசோக்குமார் சமூக சேவைகளைத் தொடர பெரிய அளவு பணம் தேவையில்லை மனம் இருந்தால் போதும் என உணர்த்தும் வகையில் புத்தக வாசிப்பை வளப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.

புத்தக தானம்
புத்தக தானம்

கடந்த 2018 முதல் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என புத்தகங்களைச் சேகரித்து பள்ளி மாணவர்களுக்கும் புத்தக விரும்பிகளுக்கும் அதை இலவசமாக கொண்டு சேர்த்து வருகிறார். இந்நிலையில் பார்வைச் சவாலைத் தாண்டி ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மதுரை பூரண சுந்தரி இவருடைய புத்தக மையத்தை திறந்து வைத்து கெளரவப்படுத்தியுள்ளார்.

``விழித்திறன் இல்லையே என்கிற வலி எனக்கில்லை!''- கலெக்டராகும் பூரண சுந்தரி

இது குறித்து அசோக், "வாட்டர் கேன் சப்ளை செய்வதுதான் எனக்கு தொழில். அதே சமயம் பொது வாழ்க்கையில் ஈடுபடுவது எனக்கு பிடித்தமான ஒன்றாக மாறியது. தலைவர்கள் குறித்த புத்தகங்களைத் தேடிப்பதன் மூலம் சமூகத்தை பற்றிய சிந்தனைகள் என்னை அறியாமலேயே துளிர்விட ஆரம்பித்தன. அதனால் தொடர்ந்து இயங்கிவருகிறேன். குறிப்பாக இதழ்கள் தானம் என்ற விஷயத்தைக் கடந்த 2018 ஆகஸ்ட் முதல் செய்துவருகிறேன். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் பலரிடம் புத்தகங்கள் உதவி கேட்டு அதனை நேரில் சென்று சேகரித்து புத்தகம் வாசிக்க விரும்பும் பிற நபர்களுக்குக் கொடுப்பேன்.

புத்தக மையத்தில் பூரண சுந்தரி
புத்தக மையத்தில் பூரண சுந்தரி

மதுரை சேவாலையா மாணவர்களுக்கு 900க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேகரித்து கொடுத்தது பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றது. அதனால் என்னிடம் பலரும் புத்தகங்கள் கொடுக்க ஆரம்பித்தனர். அதனை பெற்று, அதைத் தேவையான இடங்களுக்கு கொண்டு சென்றேன். என்னிடம் யார் வேண்டுமானாலும் புத்தகம் வாங்கிக் கொள்ளலாம். இதற்காக எந்தக் கட்டணமும் இல்லை.

உங்களுக்குப் புத்தகம் தேவை என்றால் முன்கூட்டியே என்னிடம் சொல்லிவிட்டால் அது தொடர்பான ஆட்களை சந்தித்து புத்தகங்கள் பெற்றுத் தருவேன். எனக்கு உதவ நினைப்பவர்கள் அதனை புத்தகமாக வழங்கலாம். கண்டிப்பாக பணமாக வழங்கக்கூடாது. தற்போது, என்னுடைய புத்தகச் சேவையை விரிவுபடுத்த புத்தக மையம் அமைத்துள்ளேன்.

பள்ளியில்...
பள்ளியில்...

சேகரிக்கும் புத்தகத்தை இங்கு வைத்துவிடுவேன். புத்தகம் வாசிக்க விரும்பும் நபர்கள் தங்களிடம் இருக்கும் புத்தகத்தை கொடுத்து இங்கிருக்கும் புத்தகங்களை எடுத்து செல்லலாம். இதன் மூலம் பலருக்கும் பல புத்தகங்கள் எளிமையாக வாசிக்க முடியும். பல்வேறு கலெக்சன்ஸ் விரைவாக கிடைக்கும் என்பதுதான் இதன் நோக்கம். இந்த மையத்தை சகோதரி பூரண சுந்தரி திறந்து வைத்து 'பொன்னியன் செல்வன்' தொகுப்பு புத்தகங்களை வழங்கிச் சென்றார் என்பது கூடுதல் மகிழ்ச்சி" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு